
மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் Haram அல்ல Halalதான் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பதிலடி
கோலாலம்பூர்,மார்ச் 23-
சர்ச்சையாக்கப்பட்டுள்ள மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் Haram அல்ல. Halalதான் என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர்
டத்தோஸ்ரீ எம்.சரவணன் புரியாதவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த 130 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் சட்டப்பூர்வமான
ஆலயம்தான் என்று ஆலய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ எம். சரவணன் மிகவும் அழுத்தமாகவும் பதற்றம் இல்லாமலும் தெரிவித்தார்.
.
இந்த மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் கடந்த 2006ஆம் ஆண்டு உடைப்படவிருந்தது.
அப்போது இந்த ஆலயத்தை காப்பற்றியதே மஇகாதான். இந்த வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? இது குறித்து தெரியாதவர்களும் புரியாதவர்களும் தெரிந்து கொள்ளுங்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன. சொன்னார்.
ம.இ.காவின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலு, டத்தோ பஞ்சமூர்த்தி ஆகியோருடன் நானும் இணைந்து இந்த ஆலயத்தை காப்பாற்றினோம்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை விரிவாக்கம் செய்யவிருந்த நிலையில் பின்னால் இருந்த சமயலறை மற்றும் அர்ச்சகர் அறை ஆகியவற்றை அகற்றி ஆலயத்தை சற்று தள்ளி கட்டிக் கொள்ளுங்கள் என்று DBKL கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவ்வாறு செய்த்தாக டத்தோஸ்ரீ் சரவணன் விளக்கினார்.
இதற்கு அப்போதைய அரசாங்கம் பணம் ஏதையும் வழங்கவில்லை.
துன் சாமிவேலுவின் ஆதரவில்தான் ஆலயம் கட்டி 2008ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இப்போது இது சட்டவிரோத ஆலயம் என்று கூறுகின்றனர்.
இது சட்டவிரோத ஆலயம் என்றால் எப்படி மின்சாரம், நீர் விநியோகம் வழங்கப்பட்டது என்று டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.
ம.இ.கா இந்த ஆலயத்தை காப்பாற்றவில்லை என்று சிலர் அதுவும் அரசியல்வாதிகள் கூறுவது அப்பட்டமான பொய் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெளிவுபடுத்தினார்.
நான் கூட்டரசு பிரதேச துணை அமைச்சராக இருந்த போது இந்த ஆலயத்திற்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை. இந்த ஆலயம் உட்பட தலைநகரில் எந்த ஓர் ஆலயமும் உடைக்கப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு இது சட்டவிரோத ஆலயம் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.



