
ம.இ.கா தேசிய உதவித்தலைவர் பதவி… வெற்றி வாகை சூடும் அந்த மூவர் யார்? மோகனா? முருகையாவா? அசோஜனா? நெல்சனா?
தேசம் அரசியல் களம் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஜூலை 3-
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கான மூன்று இடங்களுக்கு ந நால்வர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறப் போகும் அந்த மூவர் யார் எனும் கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ம.இ.கா வரலாற்றில் துன் சாமிவேலு தலைமைத்துவம் தொடங்கி போட்டி என்பது வழக்கமான ஒன்றுதான். எனினும் கடந்த காலங்களில் அணி இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், இன்றைய தலைமைத்துவம் அணியை முற்றாக அகற்றி விட்டது. அதேநேரத்தில் ஜாதி அரசியலையும் முற்றாக நிராகரித்துள்ளது.
ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களிடம் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் யாரையும் அவர் தடுத்ததில்லை. டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமக்கு துணைத்தலைவராக இருக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக தெரிவித்து அதன்படி அவர் போட்டியில்லாமல் ஏகமனதாக துணைத்தலைவரானார்.
இந்நிலையில் உதவித் தலைவருக்கான மூன்று இடங்களுக்கு நால்வர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ம.இ.காவில் நடப்பு உதவித் தலைவர்களான டத்தோ த.மோகன், டத்தோ தொ.முருகையா, டத்தோ அசோஜன் ஆகியோர் போட்டியடும் வேளையில் ம.இ.கா கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதனும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ம.இ.கா தேசிய உதவித்தலைவர் பதவிக்கு போட்டியிட மேற்கண்ட மூவரும் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் போட்டியிட தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆசியை பெற்றுள்ளதாக அண்மையில் கூறியிருந்தார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் டத்தோ நெல்சன் குறித்து தேசம் எழுப்பிய கேள்விக்கு டத்தோ நெல்சன் மேலவையில் செனட்டராக இருப்பதால் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இதன்வழி டத்தோ நெல்சனுக்கு தலைவரின் ஆசி இருக்கிறது என்று துணிந்து கூறலாம்.
டத்தோ நெல்சன் ம.இ.காவுக்கு புதியவர் அல்ல. இளைஞர் பிரிவு தலைவராக இருந்து ம.இ.காவில் நீண்ட காலம் செயலாற்றியவர். ஆற்றல் மிக்கவர். மேலவையில் செனட்டராக இருந்து மாணவர்களின் கல்வி நலனுக்கு குரல் கொடுத்து வரும் டத்தோ நெல்சன் தற்போது ம.இ.கா கல்விக்குழு தலைவராக இருந்து வருகிறார்.
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு இரண்டு தவணைகள் போட்டியிட்டு முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு வரும் டத்தோ மோகன் மீண்டும் களமிறங்கியுள்ளார். நாடு தழுவிய நிலையில் சூறாவளி பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். ம.இ.காவில் சாதாரண நிலையில் இருந்து முன்னேறி இளைஞர் பிரிவு தலைவராகவும் செனட்டராகவும் இருந்தவர். உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டிருந்தாலும் தனது சேவையை தொடர்ந்து வரும் டத்தோ த. மோகன் உதவித் தலைவர் பதவியையும் அந்த முதல் இடத்தையும் தக்க வைத்துக் கொள்வாரா?
இந்நிலையில் தற்போது இரண்டாவது நிலையில் உதவித் தலைவராக இருக்கும் டத்தோ அசோஜனும் நாடு தழுவிய நிலையில்
சூறாவளிப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். ஜொகூர், கம்பீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள டத்தோ அசோஜன் ம.இ.கா உதவித்தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வாரா?
இந்த சூழலில் மக்கள் முற்போக்கு கட்சியான மை பிபிபி கட்சியில் இருந்து ஒரு துணையமைச்சராக இருந்த நிலையில் தான்ஸ்ரீ கேவியஸ்சுடனான கருத்து வேறுபாடு காரணமாக ம.இ.காவை நாடி வந்துள்ள டத்தோ தொ.முருகையா கடந்த இரண்டு தவணைகள் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். டத்தோ முருகையா உதவித் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வாரா?
ம.இ.கா தலைமையகத்தில் ஜூலை 6ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறப் போகும் அந்த மூவர் யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.



