
ம.இ.கா.வின் தேர்தல் கட்சியில் ஒற்றுமையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டு பலம் வாய்ந்த கட்சியாக உருமாற்றம் பெறுகிறது சமூக,அரசியல் ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி கண்ணோட்டம்
கோலாலம்பூர்,ஜூலை 4-
கடந்த 22.6.2024-ல் ம.இ.கா. தலைமையகத்தில் துணைத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர் தேர்வு மனுதாக்கல் வெற்றிகரமாக நடந்தேறிய நிலையில் இது கட்சியில் ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் காட்டுவதாக நாடறிந்த சமூக அரசியல் ஆய்வாளர் டத்தோ பெரியசாமி முத்தன் தமது கண்ணோட்டத்தில் கூறியிள்ளார்.
இதில் துணைத்தலைவர் பதவிக்கு டத்தோ ஶ்ரீ டாக்டர் சரவணன் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். டத்தோ ரெ. நெல்சன் , டத்தோ த.மோகன், டத்தோ அசோஜன் மற்றும் டத்தோ முருகையா ஆகிய நால்வரும் மூன்று உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.
இவர்கள் நால்வரில் செனட்டர் டத்தோ நெல்சன் உதவித் தலைவர் பதவிக்குப் புதிய முகம். மேலும் மத்திய செயலவையின் இருபத்தோர் இடத்தைப் பூர்த்தி செய்ய 45 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதிக்க பத்து பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மேற்குறிப்பிட்டத் தேர்தல் வரும் 6.7.2024 நடந்தேறவுள்ளது என்பது நாடறிந்ததே.
தான்ஶ்ரீ SA. விக்னேஸ்வரன் மூன்றாவது தவணையாக ம.இ.கா.வின் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு பெற்றுள்ளார்.
கடந்த 2018 முதல் அவர் ம.இ.கா.வின் தலைமை பொறுப்பை ஏற்றார். அன்று முதல் இன்று வரை டத்தோ ஶ்ரீ டாக்டர் சரவணன் துணைத்தலைவர் பதவியில் தன்னுடன் இருந்த காலத்தில் ம.இ.காவைத் தான் செம்மையாக வழிநடத்த பெருமகனார் கொடுத்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் கருதி இவரையே இம்முறையும் அப்பதவியில் நிலைக்க ஆவண செய்யுமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.
தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் சொல்லுக்கு மதிப்பளித்து துணைத் தலைவர் போட்டிக்கு யாரும் மனுதாக்கல் செய்யாததால் டத்தோ ஶ்ரீ சரவணன் போட்டியின்றி ம.இ.கா.வின் 2024-2025-ஆம் ஆண்டின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்காக தான்ஶ்ரீ ம.இ,கா. உறுப்பினர்களுக்கு நன்றி கூறினார்.
தேர்வுக்குப் பின் ம.இ.கா. திட்டமிட்டதுபோல் 35 மாடிகள் கொண்ட ஒரு கட்டடமும், 45 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டடமுமாக இரட்டை கோபுர கட்டடங்களின் வேலைகள் துரிதப்படுத்தப்படும் என்று தான்ஶ்ரீ SA. விக்னேஸ்வரன் தமதுரையில் கூறிப்பிட்டார்.
அவற்றில் ஒன்றில் ம.இ.கா.வின் தலைமை செயலகம் உட்பட 5 நட்சத்திர தங்கும் விடுதி, உயர்தர அடுக்குமாடி வீடுகள் மற்றும் கடைகளும் அடங்கும். மற்றொரு கட்டிடத்தில் ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி மையம் அமைக்கப்படும். டத்தோ ஶ்ரீ டாக்டர் சரவணன் தன்னுடன் இணைந்தால் ம.இ.கா.வின் திட்டங்களைத் திறம்பட செயல்வடிவம் பெறச் செய்ய முடியும் என நம்பிக்கையுடன் கூறினார்.
அதேவேளை, 1997 -ல் முதல் முறையாக போட்டியிட்டு பெரும் வெற்றியடைந்த செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் இளைஞர் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். ம.இ.காவுக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் தற்போது நாடாளுமன்றத்தில் அவரின் கருத்துரைக்கும் திறனையும், கல்வியாற்றலையும், காலத்திற்கு ஏற்ப சிந்தித்து திட்டமிடுதலையும் கருத்தில் கொண்டு ம.இ.கா. பேராளர்கள் உதவித் தலைவர் போட்டியில் அவர் அநேக வாக்குகளைப் பெற்று வெற்றியடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கருத்துரைக்கின்றனர்.
டத்தோ நெல்சன் தற்போது ம.இ.கா.வின் கல்வி பிரிவுக்குத் தலைவராக பொறுப்பேற்றியிருக்கின்றார். இந்நாட்டில் மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்ள கல்லூரிகளை அமைத்து முன்னோடியாகத் திகழ்ந்தவர் டத்தோ நெல்சன். டத்தோ நெல்சன் அவர்கள் தொழில்சார் கல்லூரிகளை நிர்வகிப்பதில் அரை நூற்றாண்டு அனுபவமிக்கவர் என்றால் மிகையாகாது.
ஆகவே, டத்தோ நெல்சன் உதவித் தலைவராகத் தேர்வு பெற்றால் ம.இ.கா.வின் கல்வி திட்டங்களுக்கு அயராது பாடுபடும் தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரனுக்கு இவரின் கல்வி துறை அனுபவங்கள் துணை நிற்கும் என்று ம.இ.கா. பேராளர்கள் எண்ணுகின்றனர். மேலும் B40 மாணவர்கள் தொழிலிற்சார் துறைகளில் ஈடுபட உயர்கல்வி பெறுவதற்கு அரசாங்கத்தின் முதன்மை திட்டமாக விளங்கும் TVET திட்டங்களில் ஈடுபடுத்த ஏதுவாகவும் இருக்கும் என்று பேராளர்கள் நினைக்கின்றனர்.
தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கட்சியின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் சமயத்தையோ, ஜாதியையோ அல்லது பண அரசியலையோ அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.காவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு முன் ஜாதி எனும் நோய் கட்சியில் புரையோடி உட்பூசல் காரணமாக கட்சி பிளவுபட்டிருந்தது. இது கட்சியின் வலிமையை பெரிதும் பாதித்திருந்தது. தான்ஶ்ரீ ம.இ.காவின் தலைமை பொறுப்பை ஏற்றது முதல் கட்சியைச் சீர்குலைக்கும் ஜாதி மற்றும் குழு அடிப்படையிலான அரசியலை ஒடுக்கி கட்சியை வலுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ம.இ.கா. தான்ஶ்ரீயின் தலைமையின் கீழ் தாய்க்கட்சி எனும் புகழுடன் மீண்டும் எழுச்சி பெற்று வருகின்றது.
ஜாதி மத பேதமின்றி அனைத்து உறுப்பினர்களையும் ஒரு குடையின் கீழ் அரவணைத்து கொண்டு வந்துள்ளார்
தான்ஶ்ரீ விக்னேஸ்வரன். இவரின் செயல் பரிசான் நேசனல் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியில் ம.இ.கா. பலம் வாய்ந்த கட்சியாக உருமாற்றம் பெற்று வருகின்றது. எதிர்கால சவால்களை ம.இ.கா. தனித்து நின்று எதிர்கொள்ளும் அளவிற்கு வளரும் என்பதே பலரின் கருத்து,
இது தான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் தாரக மந்திரமும் கூட. வரும் 16 -ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்க தான்ஶ்ரீ ம.இ.கா.வைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதியாக நம்பலாம் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுத்தும் வருகின்றனர்.
மொத்தத்தில், 22.6.2024-ல் நடைபெற்ற ம.இ.கா. தேர்தல் வேட்புமனு தாக்கல் ம.இ.காவில் ஒற்றுமையும் ஜனநாயகமும் மேலும் உரமாக நிலைபெற்றுள்ளது என்பதனையே காட்டுகிறது.
அடிமட்டத்திலிருந்து வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும் மூத்த அனுபவமிக்க அரசியல் உறுப்பினர்களுக்கும் ம.இ.காவில் முக்கிய பொறுப்புகளில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வழி இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை இந்தியர்களின் உரிமைகளைப் பெற போராடும் ம.இ.கா.வை தலைமையேற்று வழி நடத்த அடுத்த தலைமுறையினர் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ம.இ.கா வலுப்பெறச் செய்ய தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் சிறந்த வியூகத் திட்டமிது என்றே கூறலாம் என்கிறார் நாடறிந்த சமூக அரசியல் ஆய்வாளர் டத்தோ பெரியசாமி முத்தன்.



