
தன்னெழுச்சி சிந்தனையை விதைத்தவன் மகாகவி பாரதி பேராசியர் உலகநாயகி புகழாரம்
ஈப்போ,ஜூன் 3-
மகாகவி பாரதி, தான் படைத்த அத்தனை படைப்புக்களிலும் நேர்மறைச் சிந்தனையை விதைத்துச் சென்றவன்.
அவனது கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் அனைத்திலுமே தன்முனைப்புச் செய்திகள் நிரம்பி இருக்கும். அவனது பாடல்களைத் தொட்ட அனைவருக்குமே அவனது தன்னூக்கச் சக்தி பற்றிக் கொள்ளும்.
அதனால்தான் அவன் இன்றுவரை சாகவரம் பெற்ற மகாகவியாக வலம் வருகிறான் என்று தமிழ்நாடு பாரதியார் கழகத்தின் தலைவரும் சிறந்த பேச்சாளருமான பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி புகழாரம் சூட்டினார்.
அண்மையில் சித்தியவான் சித்தர் குடில் ஆன்மிக நிலையத்தில் நடைபெற்ற பாரதி காட்டும் பராசக்தி எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியபோது இப்புகழாரத்தை சூட்டினார்.
பாரதி ஒரு சக்தி உபாசகன். பராசக்தியை தன் ஆத்மார்த்த தெய்வமாகப் பூஜித்தவன். அவனது பாடல்கள் பல பராசக்தியிடம் வேண்டுவதாகவே படைத்திருப்பான். காணி நிலம் வேண்டும் பராசக்தி எனும் பாடலாகட்டும், நல்லதோர் வீணை செய்தே எனும் பாடலாகட்டும், தேசமுத்துமாரி பாடலாகட்டும் அனைத்திலுமே பராசக்தித் தாயை முன்னிறுத்தியிருப்பான். சாக்த வழிபாட்டில் தீவிரமாய் இருந்ததனால்தான் அவன் பராசக்தியின் பூரண அருள்பெற்றவனாக திகழ்ந்தான். மனிதகுலம் மாண்புற வேண்டி
சாகாவரம் பெற்றப் பாடல்களைத் தந்தான்.
அவனது பல கவிதைகள் பல்வேறு இசைவடிவில் இன்றும் தொடர்ந்து உலா வருவதற்கு காரணம் பாடல்களில் அவன் விதைத்த தன்னூக்கச் சக்தி என்று பேராசிரியர் புகழ்ந்துரைத்தார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் சித்தர் குடில் தலைவருமான ஆசிரியர் கிருஷ்ணன் சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். இவ்வுலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்டவன் பாரதி. மனிதகுலம் மேன்மையுற மக்கள் நலம்பெற காலந்தோறும் இறைவன் அருளாளர்களை அனுப்பிய வண்ணம் இருக்கிறான். அந்த வகையில் அன்று இருந்த காலச்சூழல்களுக்கு விடிவெள்ளியாக வந்தவன்தான் பாரதி. அவன் ஒரு எழுச்சி சக்தியை உருவாக்க வந்தவன். முப்பத்தொன்பதே ஆண்டுகள் வாழ்ந்து பராசக்தியின் அருள் சக்தியாக இருந்து அனைவரிடத்திலும் மாபெரும் எழுச்சிச் சக்தியை விதைத்துச் சென்ற சித்தன். இன்று அவன் புகழ் பாடும் வாய்ப்பு கிட்டியதற்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

பேராசிரியர் முனைவர் உலகநாயகி
ஆசிரியர் கோபால் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.



