
இந்திய சமுதாயத்நை பாதுகாப்பதில் தோல்வி கண்ட ஜசெக-துளசி மனோகரன்தான் பதவி விலக வேண்டும் மஇகா விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்
உங்கள் கட்சி வேலையை பாருங்கள் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் எச்சரிக்கை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், ஜூலை 29-
நாட்டில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வாய் மூடி மௌனியாக இருந்த ஜசெக மற்றும் துளசி மனோகரன் இப்போது ம.இ.கா விவகாரத்தில் மட்டும் வாய் திறப்பது இருக்கும் வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் ஆலய பிரச்சினை எழுந்த போது வாய் திறக்கவில்லை. தமிழ்ப்பள்ளி பிரச்சினை வந்தது. வாய் திறக்கவில்லை. மெட்ரிக்குலேசன் பிரச்சினை ஏற்பட்ட போதும் எதுவும் பேசவில்லை. ஜம்ரி வினோத்-பெர்டாவுஸ் வோவ் பிரச்சினை வந்தபோதும் வாய்திறந்து பேசாத ஜசெக-துளசி மனோகரன் தற்போது ம.இ.கா விவகாரத்தில் மட்டும் மூக்கை நுழைத்து வாய் திறப்பது ஏன் என்று சிவசுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளி பண்டிகை, பொங்கல் திருநாள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்ரா நடனத்தையும் பாணிபூரியையும் திணிக்கின்ற ஜசெக மஇகா’விற்கும் மஇகா உறுப்பியம் பெற்றுள்ள தேசிய முன்னணிக்கும் இடையிலான விவகாரத்தில் தலையிடுவதற்கு துளசி மனோகரனுக்கு எந்த அவசியமும் தகுதியும் இல்லை என்று மஇகா தேசிய ஊடகப்பிரிவு தலைவருமான எல். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 நவம்பர் 19 பொது தேர்தலுக்குப்பின் எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு துணை நின்றது தேசிய முன்னணி தான் என்பதை துளசி மறந்து விட்டாரா? தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மஇகா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் இந்திய சமுதாயம் சார்ந்த ஆதங்கத்தை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வெளிப்படுத்தியதை தொடர்ந்து துளசி மனோகரன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உங்களுக்கு என்னதான் பிரச்சினை? மேலே சொன்ன பல சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு வாய்திறந்து பேச முடியாத துளசி இப்போது மட்டும் வாய்திறந்தது ஏன்? ஜசெகவிற்கு என்ன வந்தது? ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து மஇகா விலக வேண்டும் என்று சண்டித்தனமாக பேசுகின்ற அவசியம் துளசி மனோகரனுக்கும் அந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்று சிவசுப்ரமணியம் சாடினார்.
மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற கல்வி, பொருளாதாரம், மித்ரா விவகாரம், இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் விவகாரம், உயர்கல்வி வாய்ப்பு, இந்திய பாரம்பரிய வர்த்தகத் துறையினர் எதிர்கொள்கின்ற தொடர் பிரச்சினை குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனை குறித்தெல்லாம் துளசி மனோகரன், ஜசெகவும் வாய்த் திறந்து பேசாமல் ம.இ.கா விவகாரத்தில் மட்டும் ஆர்வத்துடன் வாய்திறந்து பேசுவது அவரது சுயரூபத்தை காட்டுகிறது என்று சிவசுப்ரமணியம் சாடினார்.
தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளிலிருந்து ஆயிரத்தை சீன சமூகத்திற்கு மடை மாற்றியது யார்? இது பற்றி துளசியும் ஜசெகாவும் மூச்சு விட்டுதுண்டா?
அதைப்போல தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் தமிழ் பள்ளிகளுக்காக ஒரு பில்லியன் நிதியை ஆண்டுதோறும் அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ஒதுக்கினார். ஜசெக அதிகாரத்திற்கு வந்தவுடன் அது இல்லாமல் போய்விட்டது. மித்ராவிற்கு இவ்வாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை என தெரிகிறது இதுகுறித்து துளசியும் துளசி இடம்பெற்றுள்ள கட்சியும் பேசியது உண்டா? ஒன்றும் நடக்கவில்லை. இவர்கள் ம.இ.கா குறித்து பேசலாமா? இது அடுக்குமா?
ஆர்டிஎம் தமிழ்ச் செய்தி பிரிவில் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் பத்து நிமிட உலகச் செய்தி அறிக்கையும் இரவு 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் 10 நிமிட செய்தித் தொகுப்பும் ஐந்தைந்து நிமிடங்களாக குறைக்கப்பட்டது. ஜசெக அதிகாரத்திற்கு வந்தவுடன்தான் இது நடந்துள்ள என்பது துளசிக்கு தெரியுமா? அல்லது கண்டும் காணாதது போல் இருந்து விட்டாரா?
அதைப்போல இந்து சமயத்தையும் இந்து மக்களையும் பழித்தும் இழுத்தும் சமயப் பிரச்சாரகர்கள் பேசுகின்ற பொழுதெல்லாம் துளசி தள்ளிநின்று வேடிக்கை பார்த்தாரேத் தவிர இது குறித்து கேள்வி எழுப்பியது உண்டா?
ஜசெக மத்திய நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்தூரி பட்டு, ஜ. அருள் குமார் போன்றவர்களும் நியமனத்தின் மூலம் இடம்பெற்று இருக்கின்ற துளசி போன்றவர்களும் எந்த நேரத்திலும் இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதில்லை; வாய் திறப்பதில்லை. ஆனால், ம.இ.கா விவகாரத்தில் மட்டும் மூக்கை நுழைப்பது ஏன்?
தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் தொட்டதற்கெல்லாம் குரல் எழுப்பி வாதாடிய ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது நாடாளுமன்றத்திற்கு வெறுமனே வந்து செல்கின்றனரேத் தவிர இந்திய சமுதாயம் குறித்து எதற்காகவும் குரல் எழுப்புவதில்லை.
மலேசிய இந்திய சமுதாயத்தில் அடையாளத்தில் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கின்ற ஜசெக, அதன் பங்களிப்பையும் கடப்பாட்டையும் ஒழுங்காக செய்வதை விட்டுவிட்டு, மஇகா குறித்தும் மஇகா இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் பேசவோ தலையிடுவதற்கோ துளசிக்கு கடுகளவும் அருகதை இல்லை என்பதை கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்வதாக சிவ சுப்ரமணியன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.



