
ஜொகூர் பாரு, ஜூலை 8: ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்கள், நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு இணங்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பாக்காத்தான் ஹரப்பான் (PH) அரசாங்கத்தின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நீதிக்கட்சியின் (PKR) மத்திய செயற்குழு உறுப்பினரும், சிலாங்கூர் மாநிலத்தின் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜார்ஜ், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், மலேசிய மடானி கருத்தாக்கத்திற்கு ஏற்ப, இந்நாட்டு இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் ‘நம்பிக்கை’ எனும் புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாகக் குறிப்பிட்டார். வெறும் வாக்குறுதிகளை வழங்கி, உணர்ச்சிகரமான அரசியலை முன்னெடுக்கும் பழைய அரசியலில் ஜொகூர் இந்திய சமூகம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். “நாட்டின் அரசியல் சூழலில் நீண்டகாலமாக நிலவிய இனவாதச் சுவர்களை உடைப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மிகுந்த உறுதியுடன் உள்ளார். மலேசியாவின் வலிமை ஒற்றுமை, நீதி மற்றும் இனம், மதம் அல்லது பின்னணி பாராமல் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதிலேயே அடங்கியுள்ளது என்பதை அவர் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறார். இனவாத அடிப்படையிலான அரசியல் இனி மலேசியாவின் முதிர்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யாது. அதற்குப் பதிலாக, கொள்கைகள், செயல்திறன் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மையமாகக் கொண்ட அரசியல் தேவை,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார். ஜொகூர் மாநிலத் தேர்தல் என்பது மாநிலத்தின் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாகும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யக்கூடிய ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். “இந்திய சமூகம் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து வருகிறது. வெறும் கற்பனைகளோ அல்லது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளோ இன்றி, தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய சாதனைகளை அடிப்படையாகக் கொண்டே மக்கள் இன்று முடிவெடுக்கின்றனர். மடானி அரசாங்கம் வாழ்க்கைச் செலவு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார். கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியர் சமூகத்திற்கான இந்திய மலேசியர் சமூகத் தரம் உயர்வு பிரிவு (MITRA) சீரமைக்கப்பட்டு, கூடுதலாக RM50 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அவர் நினைவுபடுத்தினார். “முந்தைய அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டத்தின் போது மட்டுமே MITRA, தெகுன் (Tekun) மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால் மதானி அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்திற்காகக் காத்திருக்கவில்லை. பிரதமர் அன்வார் தேவைக்கேற்ப MITRA நிதி ஒதுக்கீட்டை RM150 மில்லியனாக உயர்த்தியுள்ளார். இந்திய தொழில்முனைவோருக்காக தெகுன் நிதியை RM100 மில்லியனாகவும், இந்தியப் பெண் தொழில்முனைவோருக்காக அமானா இக்தியார் மலேசியா (AIM) மூலம் RM100 மில்லியனாகவும் உயர்த்தியுள்ளார். ஜனவரி மாதத்தில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக RM50 மில்லியன் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார். இவை அனைத்தும் மதானி அரசாங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுகுமுறைகள்,” என்று டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார். அரசியல் ஸ்திரத்தன்மை என்பது பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிக முக்கியமான முன்நிபந்தனை என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார். “ஜொகூர் மாநிலத் தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டி மட்டுமல்ல; இது மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிகழ்வு. வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் ஜொகூரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, மக்கள் பாக்காத்தான் ஹரப்பானிற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.



