
கோலாலம்பூர், ஜூலை 16- தேசிய முன்னனி மற்றும் பாஸ் கூட்டணி குறித்த மஇகாவின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் முன், அமானா கட்சிக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான கொள்கை ரீதியான வேறுபாடுகளை நாட்டு மக்களுக்கு விளக்குமாறு ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கு மஇகா சவால் விடுத்துள்ளது. ஜசெக அமானாவுடன் இணைந்து பணியாற்ற முடியும், ஆனால் அதே நேரத்தில் பாஸ் கட்சியைத் தீவிரவாதக் கட்சி அல்லது அச்சுறுத்தல் என்று முத்திரை குத்துவது ‘இரட்டை வேட அரசியல்’ ஆகும் என்று மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார். “நான் அந்தோணியிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறேன். அமானா மற்றும் பாஸ் கட்சிக்கு இடையே கொள்கை ரீதியான வேறுபாடு என்ன?அமானாவுடன் ஜசெக கூட்டணி வைக்கலாம், ஆனால் பாஸ் கட்சியுடன் இணைவதைச் சுட்டிக்காட்டலாம் என்றால், கொள்கை ரீதியாக அந்த இரண்டு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்? வெறும் முத்திரைகளை மட்டும் குத்தாதீர்கள்,” என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அமானாவையும் பாஸ் கட்சியும் ஒரே மாதிரியான கொள்கை கொண்ட கட்சிகளாகப் பார்க்கும்போது, அமானாவை மட்டும் ஜசெக ஏற்றுக்கொண்டு, பாஸ் கட்சியை ஏன் அச்சுறுத்தலாகச் சித்தரிக்கிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே பாஸ் கட்சியும் சங்கப் பதிவகத்தில் (RoS) சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சிதான். அப்படியிருக்க, பாஸ் கட்சி எப்படி சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க முடியும்? என்று அவர் வினவினார். “பாஸ் கட்சி சமூகத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் என்றால், அரசாங்கத்திடம் சட்டம் மற்றும் 3R தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் இல்லையா? சட்டம் ஒழுங்கை பாஸ் கட்சி மீறியிருந்தால், அது ஏன் இன்னும் சட்டப்பூர்வமான கட்சியாக இயங்க அனுமதிக்கப்படுகிறது?” என்றும் அவர் கேட்டார். அரசியல் விவாதங்கள் என்பது வாழ்க்கைச் செலவு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சில கட்சிகள் மீதான எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குவதில் இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார். பாஸ் கட்சி குறித்த ஜசெகவின் இத்தகைய விவரிப்பு, இறுதியில் மலாய் சமூகத்தினர் மத்தியில் ஜசெக மீதான எதிர்மறையான பிம்பத்தைத்தான் வலுப்படுத்துகிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குற்றம் சாட்டினார் “இப்பிரச்சினை எவ்வளவுக்கவ்வளவு கிளப்பப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மலாய்க்காரர்கள் ஜசெகவை விட்டு விலகிச் செல்வார்கள். தாங்களும் மலாய்க்காரர்களின் நலன்களுக்காகப் போராட முடியும் என்பதை ஜசெக ஏன் காட்டவில்லை? குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படுவதை நிறுத்திவிட்டு, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதிகாரத்திற்காக இத்தகைய வாதங்களையும் வெற்றுப் பேச்சுகளையும் மக்கள் வெறுத்துவிட்டனர் என்பதை ஜசெக உணர வேண்டும்,” என்று அவர் திட்டவட்டமாகக் சொன்னார். முன்னதாக, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பாஸ் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மஇகா மற்றும் மசீச (MCA) ஆகியவற்றின் நிலைப்பாட்டை அந்தோணி லோக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



