
கேவியஸ்சுக்கு எதிராக இளைஞரணி தலைவர் சத்யா சுதாகரன் போலீஸ் புகார்
கேவியஸ் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? மைபிபிபி தலைமைத்துவத்தை டத்தோ லோகபாலா மோகன் எடுத்து விட்டார் கேவியஸ்சுக்கு எதிராக இளைஞரணி தலைவர் சத்யா சுதாகரன் போலீஸ் புகார்
கோலாலம்பூர், ஜன.30-
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசியத் தலைவராக டத்தோ லோகபாலா மோகன் தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ளதால் தன்னை தலைவர் என்று கூறிக்கொள்ளும் தான்ஸ்ரீ கேவியஸ் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும் என்று இளைஞர் பிரிவுத் தலைவர் சத்யா சுதாகரன் சூளுரைத்துள்ளார்.
நாங்கள் இளைஞரணியினர் டத்தோ லோகபாலாவுக்கு பிளவுபடாத ஆதரவை வழங்கியுள்ளோம். டத்தோ லோகபாலா தலைமைத்துவத்தில் கட்சி சிறப்பாக இருந்து வருகிறது. மைபிபிபி கட்சியின் தேசிய தலைவராக இருந்த டத்தோ மெக்லின் டிக்குருஸ் அண்மையில் காலமானார். அதன் பிறகு தேசிய தலைவராக டத்தோ லோகபாலா பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆகையால், தேவையில்லாமல் தன்னை தலைவர் என்று கூறிக்கொள்ளும் தான்ஸ்ரீ கேவியஸ் அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சத்யா தேசம் டிவியிடம் தெரிவித்தார்.
கேவியஸ் கடந்த 2018இல் தூங்கிய தூக்கத்தில் இருந்து இன்னும் எழவில்லை போலும். அவர் முகநூல், போன்ற சமூக வலைத்தளங்களில் இன்னமும் தன்னை தலைவர் என்று கூறி அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார். நாங்கள் இதனை வன்மையாக கண்டித்து இளைஞரணி சார்பில் போலீஸ் புகார் செய்துள்ளோம். நாடு தழுவிய அளவில் இளைஞரணியினர் போலீஸ் புகார் செய்து வருகின்றனர். அவரது நடவடிக்கைகள் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதோடு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதால் போலீஸ் புகார் தொடர்ந்து செய்யப்படும் என்று சத்யா சொன்னார்.
கேவியஸ் தீய நோக்கத்தில் இதனை செய்து வருகிறார். அவரோடு தன்னை இளைஞரணி தலைவர் என்று கூறிக்கொள்ளும் கேவின் ஓங்கும் தீய நோக்கத்தில் கேவியசுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இவர்களின் நடவடிக்கை கட்சிக்கு பாதிப்பை கொண்டு வரும். நாங்கள் இப்போது தடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் கட்சி உறுப்பினர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள் என்று சத்யா குறிப்பிட்டார்.
டத்தோ லோகபாலா மோகன் தலைமைத்துவத்தில் கட்சி இன்று மிக சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. நாங்கள் லோகபாலாவுக்கு பிளவுபடாத ஆதரவு வழங்குகிறோம். மைபிபிபி கட்சியின் தலைவர் என கூறிக்கொள்ளும் கேவியஸ் மக்களை குழப்பி வருகிறார். இதனை அடிப்படையாக கொண்டு கேவியஸ் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக சத்யா கூறினார்.
கேவியஸ் தாம் தான் கட்சியின் தலைவர் என கூறி வருகிறார். சமூக ஊடகங்களில் வெளியிடும் போஸ்டர்களில் நான் தான் மைபிபிபி கட்சியின் தலைவர் என குறிப்பிட்டு வருகிறார். மைபிபிபி கட்சியில் நிலவி பிரச்சினைகள் அனைத்தும் மக்களுக்கும் தெளிவாக தெரியும்.
குறிப்பாக கேவியஸ் கட்சியின் உறுப்பினரும் இல்லை. அதே வேளையில் கட்சிக்கு எதிரான வழக்கிலும் அவர் தோல்வி கண்டு விட்டார். ஆகவே அவர் இனியும் கட்சியின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. அதே வேளையில் அவர் இனியும் மைபிபிபியின் தலைவர் எனக் கூறிக் கொள்ளக் கூடாது. இந்த விவகாரத்தில் போலீஸ்படையும் ஆர்ஓஎஸ்சும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே வேளையில் அடுத்ததடுத்து போலீஸ் புகாரும் செய்யப்படும் என்றும் சத்யா சொன்னார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



