
ம.இ.கா தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தல் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், ஏப்.18-
ம.இ.கா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மஇகாவின் கட்சித் தேர்தல் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் வரையில் நடைபெறும் வேளையில் தொகுதிகளின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும். இதன் தேர்தல் மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
தொகுதி பொறுப்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மே 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறுத் வேளையில் இதன் தேர்தல் மே 17,18,19ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக
மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
இந்தக் ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் முக்கியமாக ம.இ.கா தேர்தல் தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி ஆகிய பிரிவுகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறும். இதற்கான தேர்தல் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல்களை தொடர்ந்து தேசிய, மாநில பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் ஜூம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இரண்டு வார பிரச்சாரத்திற்கு பின் ஜூலை 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து பலரும் என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர். நான் கேட்பது போல் சொல்கின்றனர். யார் என்ன சொன்னாலும், அது அவர்களின் முடிவு. அவர்களை யாராலும் தடுக்க முடியாது.
தேர்தலில் போட்டி இருப்பது அவசியம். அதற்காக பொழுதுபோக்கிற்காக யாரும் போட்டி போட வேண்டாம். உண்மையிலேயே வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் போட்டியில் களமிறங்க வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இந்த முறை ம.இ.கா தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் என்று தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறினார்.



