Malaysia

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் கலைமகள் விழா! கலை அம்சத்துடன் கொண்டாட்டம்

பத்துமலை, அக்.2— பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாரம்பரியத்தையும் பக்தியையும் ஒருங்கே பிரதிபலித்த கலைமகள் விழா, கலை அம்சத்துடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்ப்பள்ளிகளில் காலம் காலமாக நடைபெற்று வரும் இவ்விழா, கல்விக்கு அதிபதியாய் விளங்கும் கலைமகளை வணங்கி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. கலைமகள் விழா, பள்ளி மாணவிகளின் இறைவாழ்த்தோடு தொடங்கப்பட்டது. பத்துமலை சுப்ரமணியர் ஆலயக் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேளவாத்திய இசையுடன், ஆசிரியர்கள் சீர் தட்டுகளை பக்தியுடன் ஏந்திக் கொண்டு, பத்துமலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் சன்னதியில் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் பாரம்பரிய கலாச்சார மரபுகளோடும் ஆன்மிகப் பண்புகளோடும் நெருக்கமாக இணைந்தனர். பள்ளியின் சமயப் பிரிவு பொறுப்பாளராக விளங்கும் திருமதி இந்திரா ஜெகநாதன் தலைமையிலும், சைவ சமய ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் விழா பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இவ்வாண்டு விழாவில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வெளிப்படுத்திய உற்சாகமும் மகிழ்ச்சியும் முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக இருந்தது. இவ்விழாவின் இறுதியில், ஆலய உறுப்பினராக உள்ள திரு குமார் மற்றும் அவர்தம் நண்பர்கள் மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாணவர்களுக்கு இது மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. வழிபாட்டிற்குப் பின் மாணவர்கள் தங்களின் கற்றலையும் கற்பித்தலையும் வழக்கம்போல் தொடர்ந்தனர். இவ்விழா சிறப்பாக நடைபெற பல்வேறு தரப்பினர் பங்களிப்பு வழங்கினர். பள்ளியின் அறங்காவலர் தான்ஸ்ரீ ஆர். நடராஜா, பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் நல்கைத் திட்ட உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் எந்நேரமும் பள்ளிக்குப் பக்கபலமாய் இருந்து வருகின்றனர். அவர்களின் தொடர் ஆதரவால் தான் இவ்விழா இனிதே நிறைவேறியது என தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் தெரிவித்தார்.கலைமகள் விழா, கல்வி மற்றும் பண்பாட்டு மரபுகளை ஒருங்கிணைக்கும் சிறந்த நிகழ்ச்சியாக பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றில் இன்னொரு முக்கிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button