
மஇகாவில் இல்லாதவர் மஇகாவைவிட்டு விலகுகிறாராம் கிள்ளானில் அரசியல் நாடகம் சிவசுப்பிரமணியன் சாட்டை
கோலாலம்பூர், அக்.16-
மஇகாவைவிட்டு பலகாலமாக தள்ளி நிற்பதுடன், மஇகாவிற்கு தொடர் துரோகமும் இழைத்து வரும் ஒருவர், மஇகாவை விட்டு விலகுவதாகவும் அவர் இன்னொரு கட்சியில் சேரர்வதாகவும் ஒருவர் கிள்ளானில் அரங்கேற்றியுள்ள ஓரங்க நாடகம் கண்டிக்கத்தக்கது என்று ம.இ.கா தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 12-ஆவது பொதுத் தேர்தலுக்குமுன், ஹிண்ட்ராஃப் போராட்டம் நடத்தியவர்களுடன் கைகோர்த்து ‘கேஸ்’ இயக்கத்தின் சார்பில் ஆலயங்கள்தோறும் சென்று மஇகாமீது பழிசொல்லி, அவதூறு பரப்பியவர்களுடன் தானும் இணைந்து, சொந்தக் கட்சிக்கு இரண்டகம் செய்த ஒருவர், இப்பொழுது மஇகா-வை விட்டு விலகுவதாகவும் இன்னொரு கட்சியில் சேருவதாகவும் ஊடகவெளியில் நாடக வெளிச்சம் தேடுகிறார்.
சுற்றுப் பயணிகள், தெரிந்தவர்கள் என சுமார் இருபது பேரைத் திரட்டிக்கொண்டு, இரு துணை அமைச்சர்களையும் சேர்த்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் இப்படிப்பட்ட காட்சியை அரங்கேற்றி இருக்கிறார்.
ம.இ.காவுடன் அண்மைக் காலமாக ஒட்டும் இன்றி, உறவும் இல்லாமல் இருப்பதுடன், மஇகா மத்திய செயலவை முன்னாள் உறுப்பினர் என பல ‘முன்னாள்’, ‘முன்னாள்’ அடையாளங்களைச் சேர்த்துக் கொண்டு, இந்நாள் அடையாளம் எதுவும் இன்றி, தனி மனிதாக இருக்கும் இவர், மீராக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்குத் தாவித்தாவி முடித்தபின், இப்பொழுது இன்னொரு கட்சியில் சேருவதாக பம்மாத்துவேலை காட்டுகிறார்.
மலேசிய இந்திய சமுதாயத்தின் காக்கும் கரங்கள் மஇகா என்பதை, இந்திய சமுதாயம் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளதால், இந்த அரசியல் பேரிய்ககம் முன்னிலும் சிறப்பாக தற்பொழுது தேசியத் தலைவர் டான்சி டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்-துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் ஆகியோரின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அதேவேளை, போகிற இடத்திலாவது விசுவாசமாக விளங்கட்டும் என்றும் இனியும் மஇகா-வை சீண்டுவதை விட்டுவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.



