
ஈரானிய-இஸ்ரேலிய நெருக்கடி: RON95 விலை உயராது – பிரதமர் அன்வார் உறுதி
இஸ்கந்தர் புத்திரி, ஜூன் 20- ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான புவிசார் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தாலும், RON95 பெட்ரோல் விலையை அரசு உயர்த்தாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இந்த முடிவு, அதிகரித்த எரிபொருள் விலைகளால் மக்கள் சுமையடையக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் பிகேஆர் தலைமைத்துவக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அன்வார், உலக எண்ணெய் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் பொதுவானவை என்றாலும், சமீபத்திய உயர்வு வியக்கத்தக்க அளவில் இருந்ததாகவும், இது இஸ்ரேல் இராணுவத்தின் ஈரான் மீதான தாக்குதலால் தூண்டப்பட்டதாகவும் கூறினார்.


“எண்ணெய் விலைகள் உயரும்போது, அது பெட்ரோனாஸ் போன்ற தேசிய எண்ணெய் நிறுவனங்களுக்கு நல்ல வருவாயைக் கொடுக்கும். ஆனால், அது மக்களைப் பாதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாங்கள் எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதில்லை,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிரதமர், விற்பனை மற்றும் சேவை வரி (SST) அமலாக்கம் குறித்தும் விளக்கமளித்தார். B40 மற்றும் M40 வருமானப் பிரிவினரை அழுத்தத்திற்கு உள்ளாக்காத வகையில் நிதி கொள்கைகள் கவனமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உதாரணத்திற்கு, இறக்குமதி செய்யப்பட்ட வாழைப் பழங்களுக்கு மட்டுமே SST விதிக்கப்படும் என்றும், உள்ளூர் வாழைப் பழங்களுக்கு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், அனைத்து அரசு நிகழ்வுகளிலும் உள்ளூர் பழங்கள் மற்றும் உணவைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இது உள்நாட்டுப் பொருட்களை ஆதரிக்கும் வகையில் அமையும் என்றும் அன்வார் ஆலோசனை வழங்கினார். வரி விதிப்பு நடைமுறையில் குழப்பம் அல்லது நியாயமற்ற தன்மை இருந்தால், வரிக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



