
ஜிஎஸ்டி அமல்படுத்தப்படாது மக்களின் குறைந்த வருமானமே காரணம் – பிரதமர் அன்வார் உறுதி
கோலாலம்பூர், ஜூன் 20- மலேசிய மக்களின் தற்போதைய குறைந்த வருமானத்தைக் கருத்தில் கொண்டு, சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன் மற்றும் வாங்கும் சக்திக்கு முன்னுரிமை அளிப்பதே அரசாங்கத்தின் தலையாய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவும், நிதி நிலையை மேம்படுத்தவும் ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு சில தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த போதிலும், பிரதமர் அன்வார் இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். “ஜிஎஸ்டி ஒரு பயனுள்ள வரிவிதிப்பு முறையாக இருக்கலாம், ஆனால், அது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் மிக முக்கியமானது. மக்களின் வருமானம் இன்னும் குறைவான அளவில் இருக்கும்போது, அத்தகைய வரியை அமல்படுத்துவது அவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்,” என்று அவர் கூறினார்.
மடானி அரசாங்கம் (Kerajaan Madani) சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது. எனவே, வரிச் சீர்திருத்தங்கள் மக்களின் வாங்கும் சக்தியைப் பாதிக்காத வகையிலும், குறிப்பாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரைப் பாதுகாக்கும் வகையிலும் செயல்படுத்தப்படும் என அன்வார் தெரிவித்தார். ஜிஎஸ்டிக்குப் பதிலாக, தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சுமையை ஏற்படுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் வரி விதிப்புகளை அமல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது எனபது குறிப்பிட்டத்தக்கது.



