Malaysia

“என் மகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” “கனவை நிஜமாக்கிய ஒரு தந்தையின் போராட்டம்” கடின உழைப்பு மகளை டாக்டராக்கியது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நேரில் வாழ்த்து கூறி நெகிழ்ந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர், ஜூன் 23-
லாரி ஓட்டுநரான ஒரு தந்தையின் தியாகம், கடின உழைப்பு ஆகியவை ஒரு மருத்துவரை உருவாக்கியுள்ளது கண்டு மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மகளின் அயராத உழைப்பு அவரை இன்று ஒரு டாக்டராக உருவாக்கியுள்ளது. மருத்துவ கல்வி தேர்வில் அமர சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில் இறுதி தவணை தேர்வில் அமர கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவி சௌந்தர்யாவின் கல்விச் சுமையைத் தனது உதவியால் இறக்கி வைத்தவர் அமைச்சர் ஸ்டீவன் சிம்.

சௌந்தர்யா விவகாரத்தில் மனம் மகிழ்ந்த ஸ்டீவன் சிம் அவருக்கு நேரில் வாழ்த்து கூறியதை உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்து தமது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தையின் தியாகமும், மகளின் அயராத உழைப்பும் கைகோர்த்து இன்று சௌந்தர்யாவை ஒரு டாக்டராக உருவாக்கியுள்ளது. சுங்கை பட்டாணி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சௌந்தர்யாவின் பட்டமளிப்பு விழாவில் சௌந்தர்யா எதிர்பாராத விதமாக கலந்து கொண்டது பெருமை அளிப்பதாக ஸ்டீவன் சிம் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பல ஆயிரம் ரிங்கிட் கல்விக்கட்டண பாக்கி. 60 வயதான தந்தை ஒரு லாரி ஓட்டுநர். தள்ளாத வயதிலும், தன் மகளை ஒரு டாக்டராக்கும் கனவுடன் அவர் ஓயாமல் உழைத்ததை ஸ்டீவன் சிம் நினைவுகூர்ந்தார். “அவர்களது வீட்டிற்குப் படிப்புச் செலவு கட்டணத்தை கொடுக்கச் சென்றபோது, அந்தத் தந்தை என்னிடம், ‘நான் லாரி ஓட்டுநர், என் அப்பா ரப்பர் தோட்டத் தொழிலாளி, ஆனால் என் மகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்’ என்று சொன்ன வார்த்தைகள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளன,” என்றார் ஸ்டீவன் சிம்.

ஐந்து ஆண்டுகள் வியர்வையும் கண்ணீருமாகப் போராடி, இன்று சௌந்தர்யா ஒரு மருத்துவராகப் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், மூன்று முறை விருது, சிறந்த மாணவிக்கான பதக்கம் என அடுக்கடுக்கான சாதனைகளுடன் சௌந்தர்யா பட்டமளிப்பு விழாவில் ஜொலித்தார்.

பினாங்கு மருத்துவமனை ஒன்றில் அடுத்த வாரம் டாக்டர் சௌந்தர்யா தனது பணியைத் தொடங்கவுள்ளார்.
“நான் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், டாக்டர் சௌந்தர்யா தன் தாய், தந்தையின் தியாகத்தை எப்போதும் மறக்கக் கூடாது. வெள்ளைக் கோட் அணியும்போது, தேவைப்படுபவர்களுக்கு மனப்பூர்வமாக உதவ வேண்டும்,” என்று தாம் சௌந்தர்யாவுக்கு அறிவுறுத்தியதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

ஏழை நோயாளிகளைச் சந்திக்கும்போது, தான் படித்த சிறிய வாடகை அறையையும், இரவு நேரங்களில் துணையாக இருந்த ரொட்டியையும், மேகியையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், வெறும் அறிவால் மட்டுமல்லாமல், அன்பான இதயத்துடனும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“உங்களது சேவை சிறக்க வாழ்த்துகள், டாக்டர் சௌந்தர்யா. இந்த உலகத்திற்குச் சிறந்த மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரிய மனது கொண்ட மருத்துவர்களும் தேவை,” என்று ஸ்டீவன் சிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button