
அர்ச்சகர் மீது பாலியல் குற்றச்சாட்டு சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரை இந்து தர்ம மாமன்றத் தலைவர் ரிஷிக்குமார் வேண்டுகோள்
கோலாலம்பூர், ஜூலை 9-
ஆலய அர்ச்சகர் ஒருவரின் பாலியல் முறைகேடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவருகின்ற செய்தி, மலேசிய இந்து தர்ம மாமன்றத்தையும் எட்டியது; இந்த விவகாரம் குறித்து உடனே காவல்துறையில் புகார் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாமன்றத்தின் தேசியத் தலைவர் ரிஷிக்குமார் வடிவேலு கூறினார்.
ஆன்மீகப் பணி என்பது ஆழ்ந்த சமய நம்பிக்கை, இறை சிந்தனை மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புனருடன் செய்யக்கூடிய ஒரு புனிதமான பொறுப்பாகும். இத்தகைய பொறுப்புமிக்க பணியில் உள்ள ஓர் அர்ச்சகர் அல்லது குருக்கள் மீது பாலியல் முறைகேடு போன்ற ஒரு கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்படுவது ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கையையும் ஆன்மீக விழுமியங்களையும் கேள்விக்கு உள்ளாக்கும் என்று இந்து மாமன்றத்தின் புதிய தலைவர்ர் வ. ரிஷிக்குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மலேசிய இந்து தரும மாமன்றம் எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் தெளிவானது; உறுதியானது. ஓர் அர்ச்சகர்மீது இத்தகைய பாலியல் முறைகேடு சுமத்தப்படும்பொழுது அது முழுமையாக விசாரிக்கப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின்படி மிக கடுமையான – விரிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாமன்றம் உறுதியுடன் உள்ளது.
தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும் சமூக நம்பிக்கை மீட்டெடுக்கப்படுவதையும் இது உறுதி செய்யும். குற்றம் இழைத்தவர் எவராக இருந்தாலும் அவர் எத்தகைய பொறுப்பில் இருந்தாலும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதே மாமன்றத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.
இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மை மற்றும் உணர்ச்சிப்பூர்வ வெளிப்பாட்டை சமூக ஊடகங்களில் பரப்பி விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துதல்; சம்பந்தப்பட்ட ஆலயத்தின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்குதல், பாதிக்கப்பட்ட நபருக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கையை சமூக வலைதளவாசிகள் தவிர்க்கும்படி, இந்து தரும மாமன்றம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. சட்டத்திற்கு மதிப்பளித்து நீதித்துறை தன் பணியை செய்ய துணை நிற்பது அனைவரின் கடமையாகும்; அதைப்போல, அடிப்படை மனித உரிமையும் தனி நபரின் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காதென்று கருதுகிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு இந்தியாவில் இருந்து நேரடியாக மலேசிய ஆலயங்களுக்கு அர்ச்சகர் அல்லது குறுக்களாக பணியமர்த்தப்படுபவர்களை, மலேசிய அர்ச்சகர் சங்கம் அல்லது மலேசிய குருக்கள் சங்கம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் ஆன்மீக அமைப்புகளில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; மேலும் அவர்கள் மலேசிய கலாச்சார சூழலுக்கும் இங்கள்ள சட்ட திட்டங்களுக்கும் ஏற்ற சிறப்பு பயிற்சியினைப் பெற்று அந்தந்த அமைப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதை ஆலய நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்
இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கு ஏதுவாக ஒழுக்க நெறிமுறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை இந்து சமய அமைப்புகளும் ஆலய நிர்வாகங்களும் கட்டம் கட்டமாக அமல்படுத்த வேண்டும் என மாமன்றம் மிகவும் விரும்புகிறது.
இத்தகைய நடவடிக்கைதான் நம் சமூகத்தின் ஆன்மீக ஒருமைப்பாட்டையும் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்யும்; தவிர நம் ஆலயங்கள் பக்தர்களுக்கு பாதுகாப்பான சரணாலயங்களாகவும் சமய-சமூக வளர்ச்சி மையங்களாகவும் நிலைத்திருப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்று ரிஷிக்குமார் வடிவேலு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



