Uncategorized

சிலம்பொலி 6 நாட்டிய நிகழ்வு! 39 மாணவர்கள் பங்கேற்றனர்!

ஈப்போ, செப்.25 – ஈப்போவில் இயங்கி வரும் அபிநயா சேத்ரா நுண்கலாலயம் நாட்டிய பள்ளியின் சிலம்பொலி 6 நிகழ்வில் 39 மாணவர்கள் பங்கேற்று 3 மணி நேரம் தங்களின் நாட்டிய படைப்புகளை படைத்து ரசிகளின் பாராட்டைப் பெற்றனர். ஈப்போவில் உள்ள கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் சிலம்பொலி 6 எனும் நாட்டிய நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. அந்த நாட்டிய பள்ளியின் ஆசிரியர் ஸ்ரீமதி நா. விக்னேஸ்வரி சந்திரமோகன் பெரும் முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்வை பெரும் திரளான மக்கள் கண்டு களித்தனர். இந்த நிகழ்வில் 14 மாணவிகளின் சலங்கை பூஜையும் இடம் பெற்றது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடன வகுப்பை தொடங்கியதாகவும் அதற்கு முன்பு நடன வகுப்பில் துணை நடன ஆசிரியராக சேவையை வழங்கி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுவரை பல சலங்கை பூஜை மற்றும் ஒரு அரங்கேற்ற நிகழ்வை செய்துள்ளதாக விக்னேஸ்வரி தெரிவித்தார். இந்த நாட்டியப் பள்ளி கிள்ளான், தாப்பா, கோப்பெங் ஆகிய இடங்களில் வழிநடத்தப்பட்டு வருவதாகவும் இதில் பயிலும் மாணவர்களில் 25 மாணவர்கள் சிலம்பொலி 6 நிகழ்வில் கலந்து நடனம் ஆடியதாகவும் அவர் குறிப்பிட்டார். பரதக் கலை தெய்விக கலை, இதனை முறைப்படி கற்கும் மாணவர்கள் நல்ல அறிவாற்றல் உள்ளவர்களாக வருவார்கள் என்றும் அதனை கற்க பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பரத நாட்டிய நிகழ்வுகளுக்கு அனுப்பவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் சுற்றுலா, கலை பண்பாடுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஷாஹாருடின் அபு சோஹாட் சிறப்பு வருகை புரிந்து மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். இதில் பேசிய அவர், இந்த நாட்டில் இன பாகுபாடின்றி அனைத்து சமூகத்தினரின் கலை கலாச்சார வளர்ச்சிக்கு அரசு ஆதரவு வழங்கி வருவதாக குறிப்பிட்டார். இதில் டத்தோஸ்ரீ என். நவரத்தனம் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button