Uncategorized

லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்: பிரதமருடன் தீபாவளி விழா

கோலாலம்பூர் அக்டோபர் 1: லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், 16-ஆம் ஆண்டு பிரதமருடன் தீபாவளி விழா வரும் அக்டோபர் 11-ஆம் தேதி கோலாலம்பூர் லெபோ அம்பாங் பகுதியில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு, பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்துகொள்வார் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகச் சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த பிரமாண்டமான நிகழ்வு அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 11.59 மணி வரை நடைபெற உள்ளது. பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்கசர் டத்தோஸ்ரீ ஜலிஹா முஸ்தாஃப்பா மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் லோகநாதன் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் இடம் பெறும் அம்சங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மின்னல் எஃபெம் (Minnal FM) அறிவிப்பாளர்களுடன் இணைந்து சுவாரஸ்யமானப் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மேல், மலேசியக் கலைஞர்களின் அற்புதமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மேடையேற உள்ளன. பொதுமக்களுக்கு இந்த விழாவில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்து பள்ளிகளில் இருந்து 25 மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் லோகநாதன் தெரிவித்தார். அக்டோபர் 10-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் நள்ளிரவு வரை லெபோ அம்பாங் சாலை முழுமையாக மூடப்படும். எனவே, பொதுமக்கள் போக்குவரத்துக் காரணமாக சிரமங்களைத் தவிர்க்க, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு லோகநாதன் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார். இந்தத் தீபாவளி விழாவில் பொதுமக்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button