
இளம் விளையாட்டாளர்கள் அடையாளம் காண ஜொகூர் மாநில தமிழ்பள்ளிகள் முயற்சி
ஜொகூர், செப்.29 – ஜொகூர் மாநில அளவிலான தமிழ்ப்பள்ளிகளுக்கான குறுக்கோட்டப் போட்டி 2025ஆம் ஆண்டு ஆறாவது முறையாக லாபிஸ் தமிழ்ப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. “கெலாப் ஓலாராக இன்தெகிராசி (Kelab Olaraga Integrasi)”, ஜொகூர் மாநில கல்வி இலாக்கா மற்றும் ஜொகூர் மாநில தலைமையாசிரியர் மன்றம் இணைந்து இந்த மாபெரும் குறுக்கோட்டப் போட்டியை சிறப்பாக நடத்தியது. மாநில அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கெடுப்பதோடு தங்களது அனுபவத்தையும் தரத்தையும் உயர்த்திக் கொள்ளும் இந்த அரிய வாய்ப்பு பலரது ஒருங்கிணைந்த முயற்சியால் ஆறு ஆண்டு காலமாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த பெருமை “கெலாப் ஓலாராக இன்தெகிராசி” தலைவர் திரு. ஆனந்தராஜா த/பெ வி. ராமன் மற்றும் அவர்தம் உறுப்பினர்களையும் சாரும். அதுமட்டுமல்லாமல் பலவகையில் உதவியும் ஆதரவையும் வழங்கிய முன்னாள் மலேசிய நெடுந்தூர ஓட்டக்காரர் டத்தோ மு. ராமச்சந்திரன், ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு. இரா. இரவிச்சந்திரன், ஜொகூர் மாநில தலைமையாசிரியர் மன்ற தலைவர் திரு. ச. டோமினிக் மற்றும் லாபிஸ் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு. பெ. கோவிந்தன் ஆகியோரின் பங்களிப்பும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்த குறுக்கோட்டப் போட்டியில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 47 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் மொத்தம் 152 மாணவர்களும் பெண்கள் பிரிவில் 153 மாணவர்களும் பங்கேற்று இந்நிகழ்வுக்கு பேராதரவு வழங்கினர். இந்த நிகழ்ச்சி வெற்றியடைய பெரும் பங்கு வகித்த நன்கொடையாளர்களுக்கும் நன்றிகள் உரித்தாகின்றன. இந்த ஆறாவது குறுக்கோட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவு வெற்றியாளர் ரினி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த த. ஹவின்ராஜ் ஆவார். பெண்கள் பிரிவில் வெற்றியாளர் தாஜூல் தமிழ்ப்பள்ளி மாணவி ச. சக்தீஸ்வரி ஆவார். வெற்றியாளர்களுக்கு வெற்றிப் பதக்கங்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆண்கள் குழு பிரிவில் முதலிடம் லாடாங் ரினி தமிழ்ப்பள்ளி பெற்றது. பெண்கள் குழு பிரிவில் முதலிடம் கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளி கைப்பற்றியது. ஆர்வத்துடனும் முயற்சியுடனும் கலந்து கொண்டு வாகை சூடியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் அங்கமாக ஒட்டு மொத்த வெற்றியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இப்போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. தொடர்ந்து ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், லாடாங் கேலான் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும், ரினி தமிழ்ப்பள்ளி நான்காம் இடத்தையும், லாபிஸ் தமிழ்ப்பள்ளி ஐந்தாம் இடத்தையும் பெற்றன. இந்த மாபெரும் குறுக்கோட்டப் போட்டி மாணவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



