Malaysia

ஐ.பி.எப். கட்சி தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் – தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் திட்டவட்ட அறிவிப்பு.

ஈப்போ, செப்.28 – கடந்த 33 ஆண்டு காலமாக தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கி வரும் ஐ.பி.எப். கட்சியின் ஆதரவு தொடரும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ தி. லோகநாதன் திட்டவட்டமாக அறிவித்தார். “நாங்கள் தேசிய முன்னணி உறுப்புக் கட்சியில் இடம் பெறாவிட்டாலும், கடந்த காலங்களில் கட்சியின் தேசியத் தலைவர்கள் வழங்கி வந்த ஆதரவை தொடர்ந்து வழங்குவோம்” என்று அவர் வலியுறுத்தினார். ஈப்போவில் உள்ள அம்னோ மண்டபத்தில் நடைபெற்ற மாநில ஐ.பி.எப். கட்சியின் 33ஆவது மாநாட்டை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தேசிய முன்னணி ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தபோது முன்வைத்த கோரிக்கைகளில் தேவைகள் நிறைவேற்றப்பட்டன என்றும், இன்று கூட்டணி அரசாங்கத்தில் தேசிய முன்னணி இருப்பதால் சில சிக்கல்கள் இருக்கலாம் என்றும் அவர் விளக்கம் அளித்தார். தேசிய முன்னணியில் ஐ.பி.எப். கட்சி உறுப்புக் கட்சியாக விரைவில் இடம் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். மேலும், கட்சியை வலுப்படுத்த தலைவர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு வருகிறார்கள் என்பதையும் பாராட்டினார். “இந்தக் கட்சி சமுதாய போராட்டம் நிறைந்த கட்சி, அதன் வளர்ச்சிக்கு தலைவர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். மாநாட்டில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணியின் அரசியல் செயலாளர் முகமட் அமிடி பஹாருடின் உரையாற்றி, கடந்த 35 ஆண்டுகள் தேசிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவைக் பாராட்டியதுடன், தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இடம் பெறும் நாள் வரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். மேலும், மாநாட்டிற்கான செலவுகளுக்காக டத்தோஸ்ரீ சராணி வெ.20 ஆயிரம் நிதி வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. மாநில ஐ.பி.எப். தலைவர் மாணிக்கம் உரையாற்றியபோது, மாநிலத்தில் இந்தியர்களின் நலனை காப்பதில் ஐ.பி.எப். கட்சி தொடர்ந்து சேவை செய்து வருவதை வலியுறுத்தினார். மாநில ஐ.பி.எப். தேசிய முன்னணிக்கு தனது ஆதரவை வழங்குவதுடன், அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவித்தார். “எந்தக் காலகட்டத்திலும் நாங்கள் தேசிய முன்னணியை புறக்கணித்ததில்லை, இன்னமும் தேசிய முன்னணியை ஆதரித்து வருகிறோம். தேர்தல் காலங்களில் மழையோ வெயிலோ உழைத்து வந்துள்ளோம், மாநில அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை கவனிக்க வேண்டும்” என்று டத்தோ லோகநாதன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button