
ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஆலயத்தின் வரலாறு தெரியுமா? புரணி பேசுபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தகுந்த பதிலடி கொடுக்கப்படும் டத்தோஸ்ரீ சரவணன் அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 22-
ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஆலயத்தின் வரலாறு தெரியாமல் புரணி பேசுபவர்களுக்கு ஞாற்றுக்கிழமை தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்துள்ளார்.
இந்த 130 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் கடந்த 2006ஆம் ஆண்டு உடைப்படவிருந்த நிலையில் ஆலயத்தை மஇகாதான் காப்பாறியதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
இந்த ஆலயத்தை கட்சியின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலு, டத்தோ பஞ்சமூர்த்தியுடன் இணைந்து நானும் காப்பாற்றினோம்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை வருவதால் இந்த ஆலயத்தை சற்று தள்ளிக் கட்டிக் கொள்ளுங்கள் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கள் ஒரு 100 மீட்டர் பின்னால் ஆலயம் கட்டப்பட்டது.
அப்போது துன் சாமிவேலுவின் ஆதரவில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின் நான் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த போது இந்த ஆலயத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் அதற்கு பிறகு நிலம் விற்கப்பட்டது என நான் நம்புகிறேன். இப்படி இந்த ஆலயம் குறித்து முழுமையான வரலாறு தெரியாதவர்கள் இப்போது சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவாகரத்தை அரசியலாக வேண்டாம் என்றும் அரசாங்கம் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
அவரை போலவே மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களும் இந்த பிரச்சனையை சர்ச்சையாக வேண்டாம் என்றும் சுமூகமான முறையில் தீர்வை காண்போம் என்றும் தன்னை கேட்டுக் கொண்டதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே இந்த பிரச்சனையில் நான் தலையிடாமல் இருந்தேன். நாங்கள் அமைதியாக இருப்பதால் பலரும் எங்கள் மீது ஏறி குதிரை ஓட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் மஇகாதான் தவறு செய்தது என்றும் நான் துணை அமைச்சராக இருந்த போது இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் பொய்யான தகவல்களை பரப்பத் தொடங்கி விட்டனர்.
இந்த ஆலயம் Haramமா அல்லது Halalலா என்பதை தேசிய தலைவரின் ஆதரவுடன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்தி உண்மையை தெளிவுபடுத்துவேன்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆலயத்தின் வரலாறு தெரியாமல் புரணி பேசி வரும் நபர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் சூளுரைத்துள்ளார்.



