Malaysia

சொல்லாத பாசம்

தினேஷ்வரியின் சிறுகதைப் படைப்பு

ஊரே அடங்கிக் கிடந்த நள்ளிரவு மூன்று மணி. சுற்றியிருந்த அந்த நிசப்தத்தைக் கொடூரமாகக் கிழித்துக் கொண்டு செல்வியின் போன் விடாமல் அலறியது. தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கிக்கொண்டே திரையைப் பார்த்த செல்வி, தம்பியின் பெயரைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். “என்ன விக்ரம்… இந்த நேரத்துல? என்ன ஆச்சு?”. மறுமுனையில் விக்ரமின் குரல் உடைந்து கேட்டது, ”அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு கா! நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்லதான் ஐசியூல சேர்த்திருக்கோம். நீ… நீ உடனே கிளம்பி வா…”. அதை கேட்டவுடன் செல்விக்கு உலகமே சுற்றியது. நிதானத்திற்கு வந்தவுடன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த தன் கணவன் சிவாவிடம் விவரத்தைக் கூறினாள். “அப்பாக்கு ஹார்ட் அட்டாக்… நான் போய் பார்த்துட்டு வறேன். ஆனா, நா போனா அப்பா என்னை பார்ப்பாரா?”. “கண்டிப்பா உன்ன பார்பாரு. கோச்சுக்க மாட்டாரு. நானும் வரட்டா?” அவளுக்குத் துணையாக அவனும் கிளம்ப முற்பட, “வேண்டாம்.. நீங்க பாப்பாகூட இருங்க. நா மட்டும் போறேன்” என்றால் செல்வி. “நீ தைரியமா போயிட்டு வா” என்று சிவா தந்த நம்பிக்கையில் செல்வி மட்டும் அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டாள். கார் இருண்ட சாலையை நோக்கிப் பாய்ந்தபோது, அவளின் எண்ண அலைகள் ஏழு வருடங்களுக்கு முன்னால் சென்றன. “நான் அவ்ளோ சொல்லியும் கேக்காம இந்த அனாத பையன் சிவாவ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற. இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத! நீ செத்துப்போயிட்டதா நினைச்சிக்கிறேன்!” செல்வியின் அப்பா அவளை வார்த்தைகளால் சாகடித்தார். செல்விக்கு ஆதரவாக பேச வந்த அம்மாவைப் பார்வையால் சுட்டு எரிப்பது போல் முறைத்தார். அன்றிலிருந்து அப்பா செல்வியிடம் பேசுவதையும் பார்ப்பதையும் நிறுத்தி ஏழு வருடங்களாயிற்று. மருத்துவமனையை அடைந்தவுடன் செல்வி சுயநினைவுக்கு வந்தாள். சிவாவின் வார்த்தைகளை மனதில் வைத்து நம்பிக்கையுடன் மருத்துமனையினுள் நுழைந்தாள் செல்வி. அம்மாவையும் தம்பியையும் பார்த்துவிட்டு ஐசியூக்குச் செல்லும்போது அவள் இதயம் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. அப்பா வலது பக்க இரண்டாவது கட்டிலில் ஏகப்பட்ட ஒயர்களுக்கு நடுவில், சுவாசக் கருவிகளின் துணையோடு சுவாசித்துக்கொண்டிருத்தார். அப்பாவை அந்த நிலைமையில் பார்க்க அவளுக்கு மனம் வலித்தது.  செல்வி மெதுவாக அருகில் சென்று, “அப்பா…” என அழைத்தப்படி பாசத்துடன் அவரின் வலது கையை லேசாகப் பற்றினாள். பல வருடங்களுக்குப் பிறகு தந்தையின் கரத்தைத் தொட்டதும் அவளுக்கு அழுகை முட்டியது. அப்பா மெல்ல கண் விழித்து செல்வியைப் பார்த்தபோது, அவள் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. எதிரே நிற்பது செல்விதான் என்பதை உணர்ந்த அடுத்த கணம், கோபத்தில் அவளது கையைத் தட்டி விட்டார் அப்பா.  “நீ ஏன்டி இங்க வந்தே?” என்று சுவாசக் கருவியின் நடுவேயும் வார்த்தைகளைக் கொட்டினார். “அப்பா… உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு விக்ரம்…”. “வெளியே போ!” கையை நீட்டி சொன்னபடி, முகத்தைச் சுவற்றின் பக்கம் திருப்பிக் கொண்டார் அப்பா.  ‘இன்னமும் அப்பாவுக்கு என்மேல கோவம் போகலையா?’ என்ற ஏமாற்றத்தோடு அழுதுகொண்டே வார்டை விட்டு வெளியே வந்தாள். வெளியே நின்ற விக்ரமிடம், “எதனால திடீர்னு இப்படி ஆச்சு?” என்று கேட்டாள். விக்ரம் பெருமூச்சுடன், “போன மாசம் பிஸ்னஸ்ல பயங்கர லாஸ் கா. பிஸ்னஸ்க்கு வாங்குன கடனைக் கட்ட முடியல. கடன் கொடுத்தவன் வீட்டுக்கு வந்து நாலு பேருக்கு முன்னாடி அப்பாவை ரொம்ப கேவலமா சத்தம் போட்டுட்டு போயிட்டான். அதுக்கப்புறம் எப்படியோ அவனுக்குப் பணம் கொடுத்துட்டோம்… ஆனா, அந்த அவமானத்துல இருந்து அப்பா மீளவே இல்லை. தன் மானமே போயிடுச்சுன்னு அன்னைல இருந்து உடைஞ்சு போயிட்டாரு. அதுதான் இப்போ ஹார்ட் அட்டாக்கா வந்து நிக்குது” என்றான். “சரி கா, நீ இப்போதைக்குக் கிளம்பு. அப்பா ரொம்ப கோவமா இருக்காரு, அப்புறம் பேசிக்கலாம்”. அன்று மதியம், செல்வி சமைத்து, அம்மாவுக்கும் தம்பிக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றாள். அப்போது அப்பா நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். “அப்பா எதாவது சாப்பிட்டாராமா?”. “நர்ஸ் இப்போதான் வந்து கஞ்சி கொடுத்தாங்க”. “இதுல சாப்பாடு இருக்கு. நீங்களும் விக்ரமும் சாப்பிடுங்க” என அம்மாவிடம் சாப்பாடைக் கொடுத்துவிட்டு அப்பாவுக்கு அருகில் சென்று நின்றாள். சிறிது நேரத்தில் அப்பா கண் விழித்தார். பலவீனமாக இருந்த அந்த முகத்தில் அதிகமான கோபமும், லேசான தவிப்பும் மின்னியது. “உன்னை யாரு வரச் சொன்னா?”. “அப்பா… கோவப்படாதீங்க.. உங்களுக்கு எதாவது ஆகிட போகுது..” செல்வி பேச முயன்றாள்.  “எனக்கு ஒன்னும் இல்ல! என் கௌரவத்தை விட பெருசா உனக்கு அந்த சிவாதான் முக்கியம்னு போனவ தானே நீ? இப்போ எதுக்கு என் முன்னாடி வந்து அனுதாபம் காட்டுற? போயிடு… என் மூஞ்சில முழிக்காத!”.  அப்பாவின் வார்த்தைகள் செல்வியின் இதயத்தை ஈட்டியால் குத்துவது போல் இருந்தன. மேலும் அப்பாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என எண்ணி வெளியே சென்றாள். மாலை ஐந்து மணியிருக்கும். சிவா தன் மகள் ரேவதியைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தான். யாரோ வார்டுக்குள் நுழையும் சத்தம் கேட்டு, அப்பா படுக்கையிலிருந்து லேசாக எழுந்து அமர முயன்றார். சிவாவைப் பார்த்ததும் அம்மா, “வாங்க மாப்ள. உக்காருங்க” என்றார். தன் பழைய கௌரவப் பிடிவாதம் தடுத்ததால் சிவாவின் பக்கமிருந்த பார்வையை மௌனமாகத் திருப்பிக் கொண்டார் அப்பா. “பரவாயில்ல அத்தை, நீங்க உக்காருங்க. நா செல்விகூட நிக்கிறேன்”. சிவாவும் நிலைமை புரிந்து, வற்புறுத்தாமல் வார்டின் ஒரு மூலையில் தள்ளி நின்று கொண்டிருந்த செல்வியின் அருகில் சென்று நின்றான். ஆனால், சிவாவின் விரல்களைத் தன் பிஞ்சுக்கரங்களால் பற்றிக்கொண்டு நின்ற தன் குட்டிப் பேத்தி ரேவதியைப் பார்த்தவுடன், அப்பாவின் முகத்தில் இருந்த விறைப்பு அனைத்தும் நொடியில் மறைந்தது. இந்த போலி கௌரவத்தால் இத்தனை வருடங்களாகத் தன் சொந்த ரத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் கணநேரத்தில் அவரது பிடிவாதத்தை உடைத்தன. அவரது கண்கள் பாசத்தில் கனிந்தன. அவளையே இமைக்காமல் பார்த்தவர், தன் நடுங்கும் கைகளை அவளை நோக்கி நீட்டி, “இங்கே வாடா செல்லம்… தாத்தாக்கிட்ட வா…” எனத் தழுதழுத்த குரலில் சைகையால் அழைத்தார். ரேவதியும் பயமில்லாமல் ஓடிச் சென்று தாத்தாவின் கட்டிலில் ஏறி அமர்ந்துகொண்டாள். அவளது தலையைத் தன் பலவீனமான கைகளால் தடவிக்கொடுத்து, நெற்றியில் முத்தமிட்டார். ஏழு வருடங்களாகத் தன் பேத்தியிடம் காட்டாத பாசம், இப்போது ஒட்டுமொத்தமாக அவள் மேல் கண்ணீராக உருகி வழிந்தது. அப்பா தன் பேத்தியைக் கட்டிப்பிடித்து அழுவதைத் தூர நின்று பார்த்த செல்விக்கும் சிவாவுக்கும் கண்கள் குளமாயின. அப்பா தங்களை இன்னும் வார்த்தைகளால் ஏற்றுப் பேசத் தயங்கினாலும், பேத்தியிடம் காட்டிய அந்த அன்பு அவர்களின் மனதை ஓரளவு நிறைத்தது. ‘அப்பா மாறிவிட்டார், விரைவில் எங்களையும் ஏற்றுக்கொள்வார்’ என்ற நம்பிக்கையோடு அன்று இரவு செல்வி வீடு திரும்பினாள். அடுத்த நாள் மாலை, வெயிலின் தாக்கம் குறைந்து அந்தி சாயும் வேளையில் செல்வி மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள். வார்டுக்கு வெளியே இருக்கும் நீண்ட வராந்தாவில் விக்ரம் மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவனது முகம் சோர்விலும் தூக்கமின்மையிலும் வாடியிருந்தது. அவளைப் பார்த்தவுடன், “வா கா.. இப்போதான் வேலை முடிஞ்சு வரியா?”. “ஆமா விக்ரம். இன்னைக்கும் ஆபிஸ்ல லீவு கேட்டேன், ஆனா முக்கியமான மீட்டிங் இருந்துச்சு… அதான் லேட். அம்மா எங்க டா?”. “அம்மா வீட்டுக்குப் போயிருகாங்க. நா தான் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வச்சேன். அவங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல” அப்படியே நாற்காலியில் அமர்ந்த விக்ரம், “நேத்து அப்பா ரேவதியைக் கட்டிப்பிடிச்சு அழுதாருனு அம்மா சொன்னாங்க. உண்மையாவா? “ஆமா டா. அப்பா என் மேல உள்ள கோவத்துல ரேவதிகிட்டயும் பேச மாட்டாருனு நெனச்சேன்.. ஆனா என்னாலயே நம்ப முடியல… நேத்து அவளைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கும் போது அவரோட கண்ணீர்ல அவ்ளோ பாசம் தெரிஞ்சுது. ஏழு வருஷமா பாசமே இல்லாதவர் மாதிரி இருந்த மனுஷனா இப்படின்னு நினைச்சேன்” அவள் கண்களில் கண்ணீர் தழும்பின. “அக்கா… எனக்குப் புரியுது. ஏழு வருஷமா அப்பா உன்னை ஒதுக்கி வச்சிருந்த கோபம், வலி எல்லாம் உன் மனசுல இன்னும் இருந்தா, அது நியாயம் தான். ஆனா, ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ… அப்பா உன்னைத் துரத்துனதுக்கு அப்புறம் ஒரு நாள்கூட நிம்மதியா இருந்தது இல்லை. வெளிய தான் அந்தப் பிடிவாதத்தைக் காட்டிக்கிட்டாரே தவிர, உள்ளுக்குள்ள தன் மகளைப் பிரிஞ்ச ஏக்கத்துல ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துத் தான் பிழைச்சாரு. இப்போ கூட நீ இவ்வளவு நாள் இல்லாம, அவர் இந்த நிலமையில் இருக்கும் போது தான் நீ வந்து பார்க்கிறன்ற கோவம் தான் அவருக்கு”. அவன் வார்த்தைகள் அவள் மனதை ஏதோ செய்தன. “இல்ல டா. எனக்கு அப்பா மேல எந்த கோவமும் இல்ல.. எனக்கு மட்டும் உங்கள வந்து பார்க்கனும், உங்க கிட்ட பேசனும்னு ஆசை இல்லயா? நாங்க இப்போதான் சொந்தமா ஒரு வீடு கட்டிகிட்டு இருக்கோம். அது எல்லாம் முடிஞ்சு, கிரகப்பிரவேசத்துக்கு உங்க எல்லாரயும் வந்து கூப்பிடலாம்னு இருந்தோம். அப்போதான் அப்பாக்கு நான் ஒரு தப்பான ஆள கல்யாணம் பண்ணல என்ற நம்பிக்கை வரும். ஆனா, அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு” விக்ரம் தோளில் சாய்ந்து விம்மி அழுதாள். சற்று நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்ட செல்வி, “அப்பா என்ன பண்ணுறாரு?”. “அவரு தூங்குறாரு. நீ போய் பாரு… பயப்படாம போ. டாக்டர் நாளைக்கு அப்பாவ டிஸ்சார்ச் பண்ணலாம்னு சொன்னாரு”. “ம்.. சரி”.  செல்வி மிகுந்த தயக்கத்தோடும், படபடக்கும் இதயத்தோடும் வார்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். வார்டில் அமைதி நிலவியது. அப்பா கண்களை மூடி அமைதியாகப் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது முகம் முன்னைவிட மிகவும் சோர்ந்து காணப்பட்டது. செல்வி சத்தமில்லாமல் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். தூங்கும் தன் தந்தையின் முகத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அரை மணி நேரம் கடந்திருக்கும்… அப்பா மெல்லக் கண்களைத் திறந்து அசைந்தார். எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்த செல்வியைக் கண்டார். செல்வி பயத்துடன் படுக்கையை விட்டு சற்று பின்வாங்கினாள்; ‘மீண்டும் திட்டுவாரோ’ என்ற பயம் அவளுக்குள் இருந்தது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக இந்த முறை அப்பாவின் முகத்திலோ, கண்களிலோ எந்த ஒரு கோபத்தின் நிழல் கூடத் தெரியவில்லை. செல்வி துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, “அப்பா… தண்ணி வேணுமாப்பா?” என்று மிக மெதுவாகக் கேட்டாள். அப்பா அவளது கேள்வியைக் கேட்டு அவளையே உற்றுப் பார்த்தார். அவரது உதடுகள் ஏதோ பேசத் துடித்தன. ஆனால், இத்தனை வருடப் பிரிவின் பாரமும், தான் செய்த தவறுக்கான குற்ற உணர்ச்சியும் அவரது தொண்டையை அடைத்தது. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.  சிறிது நேரத்தில் அவர் மீண்டும் பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டார். அவர் பேசவில்லை என்றாலும், அவர் முகத்தில் கோபம் இல்லை என்பதே செல்விக்கு ஒரு பெரிய ஆறுதலைத் தந்தது. ‘நாளைக்கு நிச்சயம் அப்பா என்கிட்ட பேசிடுவார்’ என்ற நம்பிக்கையோடு அன்று இரவு வீடு திரும்பினாள் செல்வி. மறுநாள் காலை ஆறு மணிக்கு, செல்வியின் போன் மீண்டும் அந்தப் பழைய பயங்கர சத்தத்தோடு ஒலித்தது. “என்ன விக்ரம்… இவ்வளவு காலையில போன் பண்ற?”. மறுமுனையில் விக்ரம் கதறி அழுதான். “அக்கா… அப்பா… அப்பாக்கு விடியற்காலையில திடீரென மறுபடியும் அட்டாக் வந்துடுச்சு.. டாக்டர்ஸ் எவ்வளவோ ட்ரை பண்ணாங்க… ஆனா… ஆனா அவர் நம்மளை விட்டுட்டுப் போயிட்டாரு!” அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் செல்விக்கு அடிவயிற்றில் இடி விழுந்தது போல் இருந்தது. கையில் இருந்த போன் நழுவித் தரையில் விழுந்து சிதறியது. ‘ஐயோ! கடைசி வரைக்கும் அப்பா என்கிட்ட ஒரு வார்த்தை கூட அன்பா பேசாமலே போயிட்டாரே! என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லாமலே போயிட்டாரே!’ என்ற தீராத குற்ற உணர்வும், வலியும் அவளைத் துளைத்தது. இறுதிச் சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்தன. அப்பா இறந்து சில நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் மதியம், வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அம்மா ஒரு பழைய சாவிக் கொத்தை எடுத்துக்கொண்டு செல்வியிடம் வந்தார். “செல்வி… அப்பாவோட அலமாரிய கொஞ்சம் சுத்தம் பண்ணிடுமா. இந்தா சாவி…” எனக் கூறி அவளிடம் கொடுத்தாள். அப்பாவின் அறைக்குள் நுழைந்து அலமாரியைத் திறந்தாள். உள்ளே துணிகளுக்கு நடுவே, அழகாக அடுக்கப்பட்டிருந்த சில ரூபாய் நோட்டுக் கட்டுகளை அவள் பார்த்தாள். ஒவ்வொரு நோட்டுக் கட்டின் மேலும் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைச் சீட்டை உற்றுப் பார்த்த செல்வி அப்படியே உறைந்து போனாள். அதில் அப்பாவின் கைப்பட, ‘செல்வி வீடு கட்ட’, ‘செல்வி வளைகாப்பு’, ‘செல்வி தலை தீபாவளி’ என்று அவளுக்குச் சேர வேண்டிய அனைத்துச் சீர் பணத்தையும், இத்தனை வருடங்களாகத் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தார் அப்பா. அந்தப் பணக் கட்டுகளுடன் ஒரு கடிதமும் இருந்தது. நடுக்கத்துடன் அதை எடுத்துப் படித்தாள் செல்வி. அதில் எழுதியிருந்தது: “செல்வி, அனாதையான சிவாவுக்குக் குடும்பப் பொறுப்பு தெரியாமல் உன்னை ஏமாற்றிவிடுவானோ என்ற பயம்தான் எனக்குள் கோபமாக மாறியது. நீ சிவா கூட போனப்போ என் கௌரவம் தான் பெருசுனு உன்னை வார்த்தையால கஷ்ட்டப்படுத்தினேன். ஆனால், ஒரு வாரத்துக்கு முன்னாடி கடன் கொடுத்தவன் நாலு பேருக்கு முன்னாடி என்னை அசிங்கப்படுத்தினப்போ தான், இந்த கௌரவம் எவ்வளவு போலி, நீ என்மேல வச்சிருந்த பாசம் எவ்வளவு உண்மைனு புரிஞ்சது. நான் உன்னைத் தேடி வர நினைச்சேன், ஆனா என் வரட்டு கெளரவமும் குற்ற உணர்ச்சியும் என்னை தடுத்துடுச்சு. மனசு ஒரு மாதிரியா இருக்கு.  உனக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாம நான் சேர்த்த பாவம் தான் இந்த நோட்டுக் கட்டுகள். கண்டிப்பா ஒரு நாள் உங்கிட்ட இதை நேர்ல கொடுத்து மன்னிப்பு கேட்கணும்”. கடிதத்தைப் படித்து முடித்த செல்விக்கு, அப்பா தன் மேல் கோபமாக இல்லை, மாறாகத் தன் மீதான அளவற்ற பாசத்தாலும், தான் செய்த தவறை நினைத்த மாபெரும் குற்ற உணர்ச்சியாலும்தான் தன்னிடம் பேச முடியாமல் தவித்திருக்கிறார் என்ற உண்மை அவளது இதயத்தைச் சுட்டெரித்தது. “அப்பா!!” எனக் கடிதத்தைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, அந்த அலமாரியின் அருகிலேயே சுருண்டு விழுந்து கதறி அழத் தொடங்கினாள் செல்வி. அவளது கண்ணீர் துளிகள், அந்த கடிதத்தின் மேல் விழுந்து நனைத்துக் கொண்டிருந்தன.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button