Malaysia

பிறந்தநாள் பரிசு

திவியனின் சிறுகதைப் படைப்பு

“செல்லோ எழுந்திரி மா! ஸ்கூல்க்கு மணி ஆச்சு ல…அப்பா உன்னோட சாப்பாடுலாம் எடுத்து வச்சிட்டென்” “சரிப்பா…நான் குளிச்சுட்டு வரேன்”, என்று கூறி தன் படுக்கையை விட்டு எழுந்திருக்கிறாள் மாதவி. ஏதோ தன் தலையில் 10 கிலோ அரிசி மூட்டையைக் கட்டி தூக்க சொன்னது போல அப்படுக்கையை விட்டு தன் தலையைத் தூக்கினாள். இரவு முழுவதும் அவளையே பார்த்து தொங்கி கொண்டிருந்த துண்டை அரைக்கண்ணோடு எடுத்து குளியலறையை நோக்கி நடந்தாள். 20 நிமிடங்கள் கழிந்தன. “எங்கம்மா மணி ஆச்சு…போலாம் வா,” “தோ வந்துட்டேன் அப்பா… எங்க உங்க குச்சி..வாங்க போலாம்,” என்று மாதவி தன் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் brickfields சாலை ஓரகடைகளில் நடந்து சென்றனர். சில நிமிடங்கள் கடந்து, “அப்பா தோ உங்க இடம் வந்துருச்சு..இங்க உட்காந்துகொங்க. எப்போதும் போல யாரையும் சீக்கிரம் நம்பிராதிங்க. நான் ஸ்கூல் போயிட்டு வரேன்,” என்று கூறி மாதவி தன் அப்பாவின் கரங்களைப் பிடித்து ஒரு கடையின் முன் உட்கார வைத்து விட்டுப் பள்ளிக்குச் சென்றாள். “யாரு மாறன்னா? வந்துட்டியா?” என்று குமரன் கேட்க  “ஆமாப்பா இப்போதான் வந்தேன். என் பிள்ளை ச்சூல்க்கு மணி ஆச்சுன்னு வேகமா விட்டுட்டுப் போறா.. அப்புறம் இன்னிக்கு வியாபாரம் எப்டி போது? நம்ப பென்சில் விக்கிறதும் மக்கள் அதை பார்த்து வாங்காமல் பிச்சை போட்டு போறதும்…அது சரி நம்ப விதி அப்டி” என்று மாறன் கூறினார். “ஆமாப்பா ஏதோ கடவுள் புண்ணியத்துல காலு கையாவது நல்ல இருக்கே..இல்லனாக்க ஊரே சிரிச்சிருக்கும்,” என்று கூறி இருவரும் சிரித்து கொண்டனர். மணி மாலை 7:30 தொட்டது. “குமரா… இன்னிக்கு மாதவி ஓட பிறந்தநாள்…அவள் நெனச்சிக்கிட்டா இந்த அப்பா மறந்துட்டேன் அப்டின்னு… எனக்குக் கண்ணு தானே தெரியாது, என் பிள்ளையோட பிறந்தநாள் கூடவா தெரியாத அப்பாவா இருப்பேன்… இந்நேரம் அவள் வீட்டுக்குப் போயிருப்பாள் ஸ்கூல் முடிஞ்சு. அதனால  ஒரு கேக் வாங்கிட்டுப் போய் அவள் சிரிக்கிர சத்தத்தயாவதுக்  கேட்டா மனசு சந்தோசமா இருக்கும். இங்கேதான் ஒரு கேக் கடை இருக்கும்ல நா அப்டியே அங்க போய்ட்டுக் கேக் வாங்கிட்டுத் தான் வீட்டுக்குப் போவேன். நீ மொதல்ல வீட்டுக்குப் போ பா,” என்று மாறன் குமரனைப் பார்த்துக் கூற  “ஆஹா வீட்டுல இன்னிக்கு ஒரே அப்பா பிள்ளை நாடகம் ஓடுமே… அதை பாக்க கடவுள் எனக்கும் கண்ண கொடுக்கல உனக்கும் கண்ண கொடுக்கல… சரி நா மொதல்ல போறேன்,” என்று கூறி தன் நடைப் பயணத்தை ஆரம்பித்தார் குமரன்.  மாறனுக்கோ அம்மா இல்லாமல் வளர்ந்த மாதவியின் மீது அளவு கடந்த அன்பு. எவ்வளவு அன்பு என்றால் தன் பிள்ளைக்கு, எதற்கும் உதவாத அப்பாவாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் சாலை ஓரத்தில் பென்சில், பொம்மைகள், திசுக்கள் போன்ற பொருள்களை விற்று வந்து மாதவிக்குப் பிடித்ததையும் அவளது பள்ளி செலவையும் பார்த்து வந்தார். ஆனால், இவை அனைத்தையும் பார்வை இல்லாமல் ஒற்றைக் குச்சியை வைத்துக்கொண்டு அவரது நண்பரான குமரனோடு செய்வதில் தான் அவரின் அன்பு வெளிப்படுகிறது. “இங்க தானே இருக்கும் மாதவிக்குப் பிடித்த கேக் கடை… நான் எப்போது இங்கு கேக் வாங்கினாலும் விரும்பி சாப்பிடுவாள்,” என்ற எண்ணத்தின் பாய்ச்சலோடு ஒரு கேக் கடையை நோக்கி நடந்தார் மாறன். அவருக்குக் கண்களாக அவரின் குச்சி கேக்குக் கடைக்கு வழிகாட்டி கூட்டிச் சென்றது. கேக் கடையில் தொங்கி ஆடிக்கொண்டிருக்கும் மணி ஓசை கேட்டு இந்தக் கடைதான் என்று முடிவு செய்து அந்தக் கேக் கடைக்குள் நுழைந்தார். “என்னது மறுபடியும் இவனா..! அன்னிக்கு வந்து கண்ணு தெரியாம கஸ்டமர் கேக்கைத் தள்ளிவிட்டான். அதுக்குக் காசு கூட இவன்கிட்ட கேக்க முடியல…இன்னிக்கு எதுக்கு வந்துருக்கானோ..,” என்று கடைக்காரர்களாகிய செல்வாவும் கிரணும் முணுமுணுத்துக் கொண்டனர். “வணக்கம் பா. கடைல ஆளு இருக்கிங்களா?” என்று மாறன் கேட்க “ஆ இருக்கோம்! இருக்கோம்! என்ன வேணும் இப்போ,” என்று வேண்டாவெறுப்பாய் கிரண் கேட்டான். “அது இல்லப்பா..ஏற்கனவே இங்க ரெண்டு தடவ கேக்கு வாங்கிட்டுப் போனப் போ என் பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குச் சொன்னா…இன்னிக்கு அவளோட பிறந்தநாள் வேற அதா அவளுக்குக் கேக்கு வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன். ஒரு 30 வெள்ளிக்குக் கேக்குக் கிடைக்குமா பா?” என்று மாறன் தயக்கத்துடன் கேட்டார்.  “இவனுக்கே கண்ணு தெரியல…இதுல பிள்ள வேற..,” என்று செல்வா கிரண்ணைப் பார்த்து மெல்ல சிரித்தான். “ஹா கேக்குத் தான… 30 வெள்ளிக்குப் பிறந்தநாள் கேக்கு எங்க இருக்கு இப்போ… சரி பரவால ஒரு கேக்கு இருக்கு அதை தரேன்,” என்று கூறி கிரண் அவனும் அவன் நண்பனும் சிறிது நேரமுன் அவர்கள் இருவரும் உண்ட மீதக் கேக்கை எடுத்தான். “சரி பிள்ளைன்னுச் சொன்னிங்க… பிள்ளைக்கு எத்தனை வயசு? கேக்ல போடணும் ல,” என்று செல்வா கேட்க “என் பிள்ளைக்கு இப்பதான் பா 15 வயசு. ஸ்கூல் ல நல்லா படிக்கிறா. இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிச்சிட்டு வேலைக்குப் போயிருவா… போய் என்ன நல்லா பாத்துப்பா,” என்று கூறி பெருமூச்சி விட்டார். சிறிது நேரம் அமைதி அவர்களைச் சூழ செல்வாவும் கிரணும் கண்களிலேயே ஏதோ பேசிக்கொண்டனர். “சரி. உங்க கேக்குக்கு நாங்க காசு கட்டுறோம். உங்களுக்கு வேற கண்ணு தெரியல. பிள்ளைக்குப் பிறந்தநாள் வேற சொல்றிங்க. நாங்களே உங்கள வீட்டுல விடுறோம். கடை சாத்துற நேரம் தான்,” என்று கூறி கேக்குப் பையை மாறனின் கைகளில் கொடுத்தான் கிரண். “இந்தக் காலத்துல இப்படி பையனுங்க உதவி செய்றது ரொம்ப அரிது. ரொம்ப நன்றிப்பா,” என்று கூறினார் மாறன். இருவரும் கடையை அடைத்துவிட்டு மாறனைத் தன் வாகனத்தில்  ஏற்றி கொண்டு மாறன் வழிக்காட்ட அவரின் வீட்டை நோக்கி சென்றனர். என்னம்மோ தெரியவில்லை இன்று மட்டும் இரவு பாரமாகுவதைப் போல தெரிந்தது.  வாகனத்தில் இருவரும் கண்ணில் பேசிக்கொண்டு சிரித்தனர். “என்னப்பா? ஒன்னுமே சொல்லாம சிரிகிரிங்க. எனக்கும் சொன்னா நானும் சிரிப்பேன் ல,”  என்றான் மாறன். “அதெல்லாம் ஒன்றுமில்லை. ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கு ஒரு நல்ல விருந்து சாப்புட போறோம். இதுக்கு முன் இருந்த விருந்துகள் எதோ காசு கொடுத்து தான் போனும்…,” என்று ஒருவன் கூற “அப்போ இன்னிக்கு காசு கொடுக்காம சாப்புட போறிங்களா? அப்படி எங்க போடுறாங்க? அதுவும் மணி 10 ஆகுது. அந்தச் சாப்பாடு நல்லா இருக்குமா? நல்லா இருந்தா எனக்கும் என் பிள்ளைக்கும் எடுத்து வரிங்களா?” என்ற கேள்விகளைத் தொடுத்தான் மாறன். இன்னிக்குத் தான் நாங்களும் சாப்புட போறோம். நீங்க சாப்புட முடியுமா தெரியல. நல்ல இருந்தா சொல்லுறோம்,” என்று சிரித்துக் கொண்டே கூறினான் கிரண்.  சட்டென்று ஒருவன் மோட்டார் வண்டியில் அவர்களின் வாகனத்தை விரட்டி புடிப்பதைப் போல கத்திக் கொண்டே துரத்தினான். கிரண் வாகனத்தின் கண்ணாடியை மெல்ல இறக்கி பார்த்தான். செல்வா வாகனத்தைச் சாலையின் ஓரத்தில் மெதுவாக நிறுத்தினான். பார்த்தால், அது குமரனின் பையனான அசோக். “அங்கிள் எங்க இத்தன மணிக்கு யாருக்குடையோ கார்ல போறிங்க?” என்று வாகனத்தினுள் அமர்ந்திருந்த மாறனைப் பார்த்துக் கேட்டான். “அடேய் அசோக்! நீயா…தோ உன்னோட தங்கச்சிக்குத் தான் பா கேக் வாங்கித்து போறேன். இன்னிக்கு அவளோட பிறந்தாள் வேற. ஏற்கனவே தாமதம் ஆகிருச்சு. இவுங்க ரெண்டு பேரு கேக் கடை காரவுங்க என்னை அப்படியே வீட்டுல விட்டுறேன்னு சொன்னாங்க பா,” என்று ஒத்த பதிலில் அனைத்தையும் கூறினார் மாறன். “சரி வாங்க நானும் அந்த ஏரியாக்குத் தான் போறேன். உங்கள விட்டுறேன்,” என்றபொழுது “சரிப்பா தோ வரேன்,” என்று கூறி கிரணுக்கும் செல்வாவுக்கும் நன்றி சொல்லிவிட்டு அசோக்கின் வண்டியில் ஏறினார்.  “அடச்சே! என்னடா இப்டி பாதில போய்ட்டான். இன்னிக்கு அவனோட மகளைப் பயன்படுத்தலாம்னு பாத்தாக்க இப்டி ஆச்சு,” என்று செல்வா கூற “சரிடா இரு. இவனைப் பின்தொடர்ந்து செல்லலாம். எப்படி இருந்தாலும் அவன் வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்க தான சொன்னான். இரவோடு இரவா வீட்டுக்குள்ள பூந்துரலாம்,” என்று கூறி வாகனத்தை அந்த மோட்டரைப் பின்தொடர்ந்தான்.  சில சாலைகளையும் ஒத்தடி பாதையும் கடந்து மாறனின் வீட்டை வந்தடைந்தார்கள். மாறன் அசோக்கிடம் நன்றி கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான். ஆனால், அசோக் மோட்டர் வண்டியைச் சிறிது தூரம் நிறத்தி விட்டு மாறனை அமைதியாகப் பின்தொடர்ந்தான். மாறன் வீட்டினுள் சென்றதும், அசோக் வீட்டின் கண்ணாடியின் மூலம் மாறனுக்குத் தெரியாமல் உள்ளே சென்றான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கிரணும் செல்வாவும் வாகனத்தை நிறுத்தி விட்டு என்ன நடக்கிறது என்று பார்க்க கிழே இறங்கி வீட்டின் அருகினில் சென்றனர். கண்ணாடி வழியாகப் பார்த்தனர்; கேட்டனர். மாறனின் மகளான மாதவி அந்த அசோக்கைப் பார்த்துக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மாறனோ அசோக் வீட்டினுள் வந்தது தெரியமால் “அம்மா..மாதவி..எங்க இருக்க? இங்கப் பாரு அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் அப்டின்னு,” என்று மாதவியை அழைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது புரிந்து கொண்டனர் கிரணும் செல்வாவும், அசோக் மாதவியின் காதலன் என்று. மாதவியைக் அவ்வளவு நேரம் கூப்பிட்டும் அவள் வராததால் தூங்கிவிட்டல் என்று எண்ணி “சரிமா நீ தூங்கிட்ட போல..கதவையும் திறக்கல..நாளிக்குக் கேக் வெட்டலாம்,” என்று கனத்த இதயத்துடன் கூறிவிட்டு மாதவியின் அறையின் கதவை விட்டு மெல்ல காலடி எடுத்து வைத்து அடுப்பரைக்குச் சென்றார். அசோக்கும் சில நிமிடங்கள் கழித்து வந்த வழியாகவே வீட்டை விட்டு வெளியேறினான். மாறனின் வீடு பலகை வீடு என்பதால் சில இடங்கள் பழைமையாகவே இருந்தன. முக்கியமாகக் கண்ணாடியில் இரும்புகள் இல்லை. கண்ணாடியைச் சற்று நகர்த்தினால் ஒரு சிறு உருவம் கொண்ட மனிதன் சுலபமாக நுழைந்து விட முடியும். ஒரு வளர்ந்த மனிதனோ, சிறிது சிரமப்படும் வகையில் இருக்கும். அந்த வீடை சுற்றி ஆள் நடமாட்டமும் இல்லை. இதனை அறிந்த கிரணும் செல்வாவும் ஒரு திட்டம் தீட்டினர். சிறிதும் தாமதிக்காமல், மாறனின் வீட்டினுள் சத்தம் போடாமல் சென்றனர். மாதவியைப் பின்னாடியிலிருந்து வாயையும் கையையும் பிடித்து அவளின் அறையினுள் சத்தம் இல்லாமல் இழுத்து சென்றனர். ஒரு பக்கம் மாறன் அடுப்பறையில் காலமான அவரின் மனைவியின் நினைவில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் கிரணும் செல்வாவும் மாதவியின் அறையினுள் மாதவியை 15 வயது குழந்தை என்றும் பாராமல் மோசமாகக் கற்பழித்தனர். சில நிமிடங்கள் கழிந்தன. மாதவி மயக்கத்தில் இருக்க கிரணும் செல்வாவும் வந்த வழியாகவே வீட்டை விட்டு வெளியேறினர். சேவல் கூவியது. மாறன் அடுப்பறையிலிருந்து எழுந்து வந்தார்.  மாதவியோ “அப்..அப்..அப்பா,எங்கே கேக்?வாங்க வெட்டலாம்,” என்று கூறினாள். அவள் கைகளோ நடுங்கின. உதடுகளும் உடம்பும் காயங்களில் மூழ்கி இருந்தன. “அப்பாவோ நமக்காக வாழ்கிறார். நமக்கு இப்படி நேர்ந்தது என்று சொன்னால் இடிந்து போய் விடுவர். பாவம் அவரால் என்ன செய்ய இயலும்? அசோக்கிடம் சொன்னால் அவனால் என்ன செய்ய இயலும்? பாவம் அவன். மற்றவன் ருசித்த உடம்பை எப்படி ஏற்பான்? எனக்கோ 15 வயது தான். என்னால் என்ன செய்ய இயலும்?” என்ற எண்ணங்களால் இரவு முழுவதும் மூழ்கி இருந்த மாதவிக்கு அவளின் ஆயுதம் அமைதி மட்டுமே என்று உணர்ந்து “அப்..அப்..அப்பா,எங்கே கேக்?வாங்க வெட்டலாம்,” என்று கூறினாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button