
கருமேகங்கள் வானத்தை முழுமையாகச் சூழ்ந்திருந்தன. சட்டென்று தொடங்கிய பெருமழை, அந்தச் சாலையை நனைத்துக்கொண்டிருந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்ததால், சாலையில் நடமாட்டம் ஏதுமில்லை. அலுவலக வேலை முடித்துவிட்டு வந்த சரண்யா, கையில் ஒரு குடையைப் பிடித்தப்படி தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த இடி மின்னலுடன் கூடிய மழையின் சத்தமும் உடலை நடுங்க வைக்கும் குளிர்ந்த காற்றும் அவளுக்குள் பயத்தைக் கிளப்பியது. அவள் பதட்டத்துடன் வேகமாக நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று அவளுக்குப் பின்னால் ஏதோ ஒரு நிழல் வருவது போலவும்; பின்தொடர்வது போலவும் உணர்கிறாள். சரண்யா தன் நடையின் வேகத்தை அதிகரித்தாள். பயம் அவளது தொண்டையை அடைத்தது. இருந்தாலும் அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். ஒரு உருவத்தை கண்டாள். பயத்தில் உறைந்து போன அவள், தப்பிக்க வழி தேடினாள். சற்றுத் தொலைவில் ஒரு மளிகைக் கடை திறந்து இருப்பதைக் கண்டாள். மூச்சிரைக்க ஓடிச் சென்று அந்தப் பெரிய கடைக்குள் நுழைந்து கொண்டாள். அவள் கடைக்குள் நுழைந்ததும், அவளைப் பின்தொடர்ந்து வந்த அந்த உருவம் கடைக்கு வெளியே வாசலிலே நின்றுவிட்டது. கடையின் வெளிச்சத்தில் நின்றுகொண்டு, தன்னைத் தொடர்ந்தது யார் என்று பார்க்க அவள் மெதுவாக வாசலுக்கு வந்து உற்று நோக்கினாள். அங்கே ஒரு சிறிய, அழகான நாய்க்குட்டி நின்றுகொண்டிருந்தது. மழையில் நனைந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி, அவளைப் பாவமாக பார்த்தது. சரண்யா பயம் நீங்கி, அதன் அருகே மெதுவாகச் சென்றாள். அப்போதுதான் அவள் கவனிக்கிறாள். அந்த நாய்க்குட்டியின் பின் காலில் அடிப்பட்டு காயமாக இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அந்த நாய்க்குட்டியின் உடல் வலியினாலும் குளிரினாலும் நடுங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஏதோ ஒரு உணர்வு அவளுக்குள் தென்பட்டது. அப்பொழுது அவளது மனிதாபிமானம் வெளிய எட்டிப் பார்த்தது.“ஐயோ, பாவம்! காலில் எவ்வளவு காயம்” என்று பதறினாள். சற்றும் யோசிக்காமல் அந்த நாய்க்குட்டியைத் தன் கைகளில் சுமந்து கொண்டாள். அடுத்த நிமிடமே, அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாள். மருத்துவர்கள் அந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளித்து, கட்டுப் போட்டனர். சிகிச்சை முடிந்ததும், “இதை இப்போது எங்கே கொண்டு செல்வது? என்ற கேள்வி சரண்யா மனதில் எழுந்தது. அவளுடைய வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. அவளின் பெற்றோருக்கு பிராணிகள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. “இந்தக் காயத்தோடு இதை வெளியில் விட்டால் யார் இதைப் பார்த்துக் கொள்வார்கள்? இப்படியே விட்டு போன இறந்திடுச்சுனா என்ன பண்றது?” என்ற தவிப்பில், துணிச்சலாக அதைத் தான் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறாள். நேரம் ஆயிற்று, வேலைக்குச் சென்ற தனது மகள் இன்னும் வரவில்லை என்று பெற்றோர்கள் யோசிக்க, அவளும் வருகிறாள். அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடனே புயல் வீசியது. நனைந்த உடம்போடு கையில் நாய்க்குட்டியுடன் நின்ற அவளைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். “கையில என்னது சரண்யா?” என்று பெற்றோர்கள் வினா எழுப்பினர். “உனக்குத் தான் தெரியுமில்ல, நம்ம வீட்ல நாய் பூனைக்கெல்லாம் இடமில்லைன்னு? அப்புறம் ஏன் இதைத் தூக்கிட்டு வந்த?” என்று அப்பா சத்தமிட்டார். சரண்யா பதட்டதோடு, “இல்லப்பா, இதுக்குக் கால்ல அடிபட்டிருக்கு. வெளிய விட்டா செத்துடும். கொஞ்ச நாள் மட்டும் இருக்கட்டும் பா…” என்று அந்த நாய்க்குட்டிக்காகப் பரிந்து பேசினாள். சரண்யா அவ்வளவு கெஞ்சுவதைப் பார்த்த பெற்றோர்,, ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு, ஏற்க மனமில்லாமல் அந்த நாய்க்குட்டியை வீட்டில் வைத்திருக்க அனுமதித்தனர். வாரங்கள் உருண்டோடின. ஆரம்பத்தில் அந்த நாய்க்குட்டியைப் பிடிக்காத பெற்றோர், தங்கள் மகளின் மகிழ்ச்சிக்காக அதை வீட்டில் இருக்க அனுமதித்தார்கள். நாய்க்குட்டியின் காலும் மெதுவாகக் குணமடைந்தது. அது வீட்டில் எல்லோரையும் பார்த்து வாலாட்டத் தொடங்கியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, சரண்யாவின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவளுக்கு அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரித்தது. அதிகாலை செல்வாள்; நள்ளிரவில் வீடு திரும்புவாள். இதன் விளைவாக, அவள் கொண்டு வந்த நாய்க்குட்டியைக் கவனிக்க நேரமே இல்லாமல் போனது. பாவம், அந்த நாய்க்குட்டி நாள் முழுவதும் வீட்டிற்குள் தனியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டது. அவளின் பெற்றோருக்கு ஆரம்பத்திலிருந்தே அந்த நாய்க்குட்டியின் மீது ஈடுபாடு இல்லாததால், “அவள் ஆசைப்பட்டு கொண்டு வந்த இந்த நாயை, அவளே பார்த்துக் கொள்ளட்டும்” என்று இறக்கமே இல்லாமல் அவளின் பெற்றோர் அதனை சரியாகக் கவனிக்கவில்லை; உணவளிப்பதில்லை; கொஞ்சுவதில்லை. ஒரு நாள், பசி தாங்க முடியாமல் அந்த நாய்க்குட்டி சமையலறை வாசலில் நின்று கொண்டு பரிதாபமாகக் முகத்தை வைத்து கொண்டு அம்மாவை பார்த்து குரைத்தது. அந்த நாய்க்குட்டியின் பாவமான முகத்தையும் அழுகைக் குரல் போல இருந்த அந்த சத்தத்தையும் கேட்டு, கல்லுப் போல் இருந்த தாயின் மனம் உருகியது. சற்றும் யோசிக்காமல், வீட்டில் அனைவருக்காக சமைத்து வைத்திருந்த சாதத்தில் கொஞ்சம் எடுத்து, அதற்கு ஒரு தட்டு நிறைய சாதத்தை வைத்தாள். பசியில் இருந்த அந்த குட்டி, அதை ஆசையோடு சாப்பிட்டதைப் பார்த்ததும், “ச்சே, இந்த பிஞ்சு நாய்க்குட்டியவ இவ்ளோ நாள் கண்டுக்கமா இருந்தேன்… இவ்ளோ கொடுமைக்காரிய இருந்துதேனே…” என்று மனம் நொந்து போனாள். அன்று தொடங்கி, தாயின் கல்லு மனம் கரைந்து, அவள் மனதில் ஒரு மெல்லிய பாசம் பிறந்தது. வீட்டில் மகள் இல்லாத நேரங்களில், அம்மா அதற்கு உணவளிப்பதும், அது வாலாட்டுவதைப் பார்த்து ரசிப்பதுமாக, அந்த நாய்க்குட்டி மேல் ஒரு தனி பாசமும் அரவணைப்பும் வளரத் தொடங்கியது. அதனுடன் தினமும் விளையாடும் வேளையில், அம்மா கவலைகள் யாவும் மறந்து சந்தோஷமாக தனது நாட்களைக் கடக்கிறாள். ஒருபுறம் அம்மா சந்தோஷமாக இருக்க, மறுபுறம் அலுவலகத்தில் அதீத வேலைப் பளுவால், சரண்யா நிம்மதியை முழுமையாக இழக்கிறாள். அலுவலக மேலதிகாரிகளிடம் இருந்து வரும் அழுத்தமும், சரியான தூக்கமின்மையும், அவளை எப்போதும் எரிச்சலாகவும் மனவுளைச்சலாகவும் வைத்திருந்தது. வழக்கம்போல அன்றைய தினமும் நள்ளிரவைத் தாண்டி, மிகுந்த சோர்வுடனும் பசியுடனும் அவள் வீட்டிற்குள் நுழைந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் “மா… மா… எங்க இருக்கே? பசிக்குது மா..” என்று அம்மாவை கூவி அழைத்தாள். அந்த நேரம் பார்த்து, பல நாட்களாகத் தன்னிடம் விளையாடாத சரண்யாவைக் கண்டதும், அந்த நாய்க்குட்டிக்கு ஒரே சந்தோஷம் தாங்கவில்லை. ஓடி வந்து அவளுடைய கால்களைக் கட்டிக் கொண்டு, தன் நகங்களால் கீறி விளையாட முற்பட்டது. “என்னோடு விளையாடு” என்பது போல அது குரைத்துக் கொண்டே அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஏற்கனவே அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கடுமையான தலைவலியிலும், கோபத்திலும் அதோடு பசியிலும் இருந்த அவளுக்கு, அந்த நாய்க்குட்டியின் செயல் அவளுக்கு எல்லையற்ற எரிச்சலை ஊட்டியது. ஒரு காலத்தில் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்த அந்த நாய்க்குட்டி, இப்பொழுது அவளுக்கு எரிச்சலை கொடுக்கிறது.”சீ போ! தள்ளி நில்லு!” என்று கத்தினாள். ஆனால், திரும்பவும் அந்த நாய்க்குட்டி அவளிடம் ,மீண்டும் மீண்டும் அவளிடம் விளையாட முற்பட்டது. “எத்தன வாட்டி சொல்றேன் அங்கே போனு உனக்கு சொன்ன புரியாத சீ அங்கிட்டு போ!” கத்திக்கொண்டே கோபத்துடன், தன் காலால் அந்தச் சிறிய நாய்க்குட்டியை ஓங்கி உதைத்தாள். அந்த பலமான உதையில், அந்தப் பிஞ்சு நாய்க்குட்டி உதைத்த வேகத்தில் பறந்து சென்று, வீட்டின் மூளையில் இருந்த சுவரில் பலமாக மோதி கீழே விழுந்தது. வலி தாங்க முடியாமல் அது வேகமாக அலறியது. நாய்க்குட்டியின் சட்டம் கேட்டு அம்மாவும் அப்பாவும் பதறிப் போயி வந்தனர். கீழே நாய்க்குட்டி விழுந்து கிடந்ததைப் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஓடி வந்து அவளைக் கடிந்து கொண்டனர். “என்னடி பண்ற? பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு?” என்று அப்பா கத்தினார். “ஐயோ என்ன பண்ணி வெச்சிருக்கே நீ! நீயெல்லாம் என்ன மனிஷியா? இல்ல மிருகமா?” என்று அம்மா கோபத்துடன் சரண்யாவை கத்தினாள். தாய் சற்றும் தாமதிக்காமல் ஓடிச் சென்று அந்த நாய்க்குட்டியைத் தூக்கினாள். அதன் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அந்த நாய்க்குட்டி மயக்க நிலைக்குச் சென்றது. பெற்றோர் பதறியடித்துக் கொண்டு, அந்த நாய்க்குட்டியை நள்ளிரவிலேயே அருகில் இருக்கும் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவளும் அவர்களுடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அந்த நாய்க்குட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அப்பா அவளிடம், “உனக்கு எவ்வளவு கோபம், வேலை அழுத்தம் இருந்தாலும், நீயே ஆசைப்பட்டு வீட்டுக்குக் கொண்டு வந்த ஒரு வாயில்லா ஜீவனிடம் அந்த கோபத்தை எப்படிக் காட்டலாம்? உன் கோபத்திற்கு இந்த வாயில்லா ஜீவன் என்ன பாவம் செய்தது? பார், அதோடே தலையில் எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் போகுது!” என்று கோபமாக அதன் காயத்தைச் சுட்டிக்காட்டி கூறினார். அப்பா அவ்வளவு திட்டியும் அவள் அதற்குக் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. மாறாக, அவள் அலட்சியமாக “எல்லாம் இந்த நாயால தான் வந்துச்சு. இதே எப்ப பாத்தேனோ அப்பதான் எல்லாமே ஆரம்பிச்சுச்சு. இது இந்த வீட்டுக்குள்ள வந்ததில்ல இருந்துதான் எனக்கு ஒரே தொல்லை, நிம்மதியே இல்லை. எல்லாப் பிரச்சனைக்கும் இதுதான் காரணம்! இதை நான் எங்கிருந்து கொண்டு வந்தேனோ, அங்கேயே கொண்டு போய் விட்றேன்!” என்று கத்தினாள். அவளது பெற்றோர்கள் மாறி மாறி அவளை திட்டி தீர்த்தனர். இருந்தாலும், சரண்யா அவளது முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. சிகிச்சை முடிந்து காலையில் விடிந்ததும், அவள் சொன்னபடியே செய்தாள். காரில் அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு, சில வாரங்களுக்கு முன்பு எந்த இருண்ட, மழை பெய்த சாலையில் அது சரண்யாவை பின்தொடர்ந்து வந்ததோ, அதே சாலைக்குக் கொண்டு சென்றாள். இன்னும் முழுமையாகக் குணமாகாத, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டியை, இரக்கமின்றி அதே சாலையில் இறக்கிவிட்டுவிட்டு, அவள் தன் காரில் ஏறிப் புறப்பட்டாள். அந்த நாய்க்குட்டி தள்ளாடியபடியே அவளது காரின் பின்னாலேயே ஓட முயன்று, பின் சக்தியிழந்து சாலையில் நின்றது. இது அவளின் பெற்றோருக்கு தெரியாது. முக்கியமாக அவளின் அம்மாவிற்கு தெரியாது. பாவம் தனியாக அம்மா வீட்டில் இருக்கும்போது இந்த நாய்க்குட்டிதான் அவருக்கு துணையாக இருந்தது. இப்பொழுது அந்த நாய்க்குட்டி இல்லை என்றதும், அம்மா மிகவும் கவலை அடைந்தார். அதேசமயம் மனிதர்களின் போலியான அன்பின் முகமும் முடிவுக்கு வந்தது.



