Malaysiaசிறுகதை

நானும் ஓர் ஆண் தானே?

ஷர்வினாவின் சிறுகதைப் படைப்பு, UPLOAD BY: KRISHAN THIVAGARAN

இது கோடைக்காலத்தின் இறுதி நாள். வழக்கத்திற்கு மாறாக, அன்றைய விடியல் பரபரப்புடன் தொடங்கியது. ஒவ்வொரு உயிரும் தங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடன் செய்யத் தொடங்கியிருந்தன. உலகமே ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்தச் சக்கரத்தில், நான் மட்டும் ஒரு ஓரமாகத் திகைத்து நின்றிருந்தேன். அவ்வப்போது வீசும் தென்றல், என் மேனியில் படர்ந்திருந்த வியர்வைத் துளிகளை மெல்லத் துடைத்துச் சென்றது. ஒவ்வொரு நாளும் சலிப்பான அதே வழக்கத்தோடுதான் விடியும். ஆனால், இன்று, வழக்கத்திற்கு மாறான வாகன நெரிசல் மட்டும் கூடுதலாக இருந்தது. “சீக்கிரம் கிளம்ப வேண்டும்” என்று மனதிற்குள் நினைத்தாலும், அங்கிருந்து நகர முடியாத சூழல் என்னைச் சூழ்ந்திருந்தது. என்னை யாரோ நெருங்குவதை நான் உணர்ந்தேன். என் முதலாளி எவ்வித சலனமுமின்றி என்னைக் கடந்து சென்றார். “இன்னைக்கும் ரெண்டு கஸ்டமர்கள் வருவாங்க, பார்த்துச் சூதானமா நடந்துக்கோ” என்று கூறிவிட்டுச் சென்றார். “சரி” என்று நான் பதில் கூறினாலும், என் மனம் எதையோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. விருப்பமில்லாமல், சூழ்நிலைக் கைதியாக இந்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நினைக்கும்போது மனம் பித்துப்பிடிப்பது போல் இருந்தது. வறுமையும் வாழ்வாதாரமும் என்னை இந்த வேலையில் கட்டிப்போட்டிருந்தன. “இதுதான் என் விதி” என்று அடிக்கடி என்னைத் தேற்றிக்கொள்வேன்.சமூகத்தின் பார்வையில் ஒரு ஆணாக நான் வலிமையானவனாகத் தெரிந்தாலும், நான்கு சுவர்களுக்குள் என் உணர்வுகள் ஒவ்வொன்றும் சிதைக்கப்படுவதை யாரிடம் சொல்ல முடியும்? என்னை அணைக்க வரும் கரங்களும், என் உடலைத் தீண்டும் பார்வைகளும் எனக்கு அசிங்கத்தையே மிச்சப்படுத்துகின்றன. அந்தத் தருணங்களில் என் மனசாட்சி என்னை நோக்கித் துப்பும் ஓசை எனக்கு மட்டுமே கேட்கும்.பணம் என்ற ஒற்றை இலக்குக்காக, ஒரு காட்சிப் பொருளாக மாறிப்போன இந்த வாழ்வு எனக்கு மிகுந்த சலிப்பைத் தருகிறது. என்னைச் சுற்றி நடக்கும் உரையாடல்களும், வாடிக்கையாளர்களின் வக்கிரமான சிரிப்புகளும் என் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கும். “நீயும் ஒரு ஆண் தானே, இதையெல்லாம் தாங்கிக்கொள்ள மாட்டியா?” என்று என் உள்மனம் என்னைக் கேலி செய்வது போல ஒரு பிம்பம் தோன்றும். ஆனால், அந்த ஆண்மை என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல, அது ஒருவனின் சுயமரியாதை சார்ந்தது என்பதை இந்த உலகம் புரிந்து கொள்வதே இல்லை. கடிகார முட்கள் நகர நகர, என் உள்ளுக்குள் இருக்கும் பதற்றம் அதிகரித்தது. இருப்பினும், “திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை” என்பார்கள். அதுபோலத்தான் எனக்கு அவளும். என் ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்த வீடு. அங்கு வசிக்கும் அப்பெண். அவளுடைய மூச்சுக் காற்று கூட ஒருபோதும் என்னைத் தீண்டியதில்லை; ஆனால், என் இருண்ட வாழ்வின் ஜன்னல் வழியாகத் தெரியும் ஒரே ஒரு ஒளிக்கீற்று அவள். அவளைக் காண்பதுதான் என் நாளின் தொடக்கம்; அவளைப் பார்ப்பதில்தான் என் நாளே முழுமையடைந்தது. அவளிடம் என் காதலைச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் வாழ்வின் ஒரே இலட்சியம். என் கனவுகள் அனைத்தும் அந்த ஜன்னலைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தன. நேரம் நகர்ந்துகொண்டிருக்க, நான் அவளையே கவனித்துக் கொண்டிருந்தேன். நேரம் மெல்ல நகர, என் கண்கள் அவளையே நோட்டமிட்டன. அப்போதுதான் முதலாளி சொன்னது போல, முதல் வாடிக்கையாளர் வந்தார்.

“என்ன, போலாமா?” என்று அவர் கேட்டார்.அவர் முகத்தைப் பார்த்தாலே மிகுந்த அவசரத்தில் இருப்பது தெரிந்தது. என் வருத்தத்தை மறைத்துக்கொண்டு, முகத்தில் வளர்பிறை போல சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கனிவாக அவருக்கு வேண்டியவற்றைச் செய்தேன். என் உடம்பில், கூர்மையான ஒரு ஊசி இரங்கியது. என் மேனியில் ஏதோ ஒரு நஞ்சு பாம்பு ஊர்ந்தது போல இருந்தது. என் உடம்பில் இருந்த எதோ ஒன்றை அவர் எடுத்துக் கொண்டு திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினார். இதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அடுத்தவர் மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டிய பொம்மை போல நான் இருந்தேன்.மீண்டும் பழைய இடத்திற்கு வந்து நின்றேன், என் கண்கள் அவளைத் தேடியது. என் காயங்களை ஆற்றும் மருந்து அவளிடமே உண்டு. அவளின் வருகை என் கண்களில் அலைமோதும் முன்னரே, இரண்டாவது வாடிக்கையாளர் வந்தார். “ரொம்ப அசதியா இருக்கு, கொஞ்ச நேரம் இருங்க சார்” என்று நான் கூறினேன். அவர் வந்தபோதே ஒருவித இறுக்கமான சூழல் நிலவியது. என்னைப் பார்த்ததுமே அவருக்கு ஏதோ பிடிக்கவில்லை. முகம் சுளித்தபடியே வந்த வழியே திரும்பிச் சென்றார். அவர் சென்ற விதம் எனக்கு மிகுந்த அருவருப்பையும் வலியையும் தந்தது.”நான் என்ன கொலைக்குற்றமா பண்ணிட்டேன்? ஏன் என்னுடைய மனச இப்படி காயப்படுத்துறாங்க?” என்று அருகில் இருந்த என் நண்பனிடம் கேட்டேன். என் நண்பன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். “டேய், ஒன்னும் பண்ணலையேன்னு சந்தோசப்பட்டுக்கோ. இந்த உலகத்துல ஏதாவது நடந்தாலும் குத்தம், நடக்கவில்லை என்றாலும் குத்தம். இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத,” என்றான். நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டோம். ஆனால், அவன் கூறியதில் இருந்த கசப்பான உண்மை என் மனதை மேலும் சுட்டது. ஒரு ஆணாக, என் கடமையைச் சரியாகச் செய்தும், ஏன் இந்த அவமதிப்பு? என் வலியும், வேதனைகளும், சமூகத்தின் பார்வையும் என்னைச் சிதைத்துக் கொண்டிருந்தன. இந்தத் துயரத்திலிருந்து தப்பிக்க, அந்தப் பெண்ணிடம் என் காதலைச் சொல்லி அவளோடு இணைந்துவிட்டால், இந்த உலகத்து வேலையும் வேதனையும் எனக்குத் தேவையில்லை என்று ஒரு கனவுக் கொண்டேன்.”டேய், அவகிட்ட என்னுடைய காதலைச் சொல்லிவிடவா?” என்று தயக்கத்தோடு கேட்டேன். அதற்கு அவன், “எப்பா சாமி, இன்னைக்குத்தான் நீ சரியா யோசிக்கிறாய்! நாளை முதலாளி வருவதற்கு முன்பே எழுந்து, எல்லாரும் பார்க்கும் முன்னால் அவளிடம் சொல்லிவிடு,” என்று நம்பிக்கையளித்தான். அது எனக்குக் குலதெய்வத்தின் வாக்காகவே பட்டது. மறுநாள் காலை விடியும்போது வானம் மங்கலாகவும், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி அழுவது போலவும் காணப்பட்டது. அவள் எழுந்துவிட்டாளா என்று பார்த்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், இடி முழக்கத்துடன் பெருமழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்தபடி நான் காத்திருந்தும், அவள் இன்னும் எழவில்லை. அவள் எழுந்து வருவாள், என் கனவுகள் நனவாகும் என்று நம்பினேன்; ஆனால் இயற்கை கூட என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை. மழையின் சத்தம் என்னை மிகவும் பாதித்தது. அவள் ஜன்னலைத் திறக்க மாட்டாளா, அவளைப் பார்க்க மாட்டேனா என்று தவித்தேன். அந்த வேகம் என் காதலை மேலும் தூண்டியது. எப்படியாவது அவளிடம் என் அன்பைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவள் எழுந்தவுடன் அவளை நோக்கிச் சென்றேன். அந்தப் பயணம் மிகக் குறுகியது என்றாலும், என் மனதிற்கு அது பல மைல் தூரம் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது. அவளைச் சந்திக்கும் அந்த நொடிக்காகக் காத்திருந்தேன். ஆனால், எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. கண்களை மூடித் திறந்தபோது, அவளுடைய உடலோடு என் உடல் பாதியாகக் கலந்திருப்பது போன்ற மாய உணர்வு ஏற்பட்டது. நான் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது தரைமட்டத்தில் விழுந்து கிடந்தேன். கொட்டும் மழையில், என் உடலிலிருந்து ஓர் இதழ் மட்டும் பிரிந்து செல்வது போல் உணர்ந்தேன். அந்த இதழ்தான் என் கனவு, என் காதல், என் ஆசை. அது காற்றோடு காற்றாகப் பறந்து சென்றது. அவள் என்னை விட்டுப் பிரிந்து சென்றது போன்ற ஓர் உணர்வு என்னைத் தாக்கியது. “இனிமேல் அவளை அடைய முடியாது” என்ற உண்மை என்னைச் சுக்குநூறாக உடைத்தது. அவளுடன் இனி சேர முடியாது என்பதை உணர்ந்தேன்.”நானும் ஒரு ஆண் தானே! மற்றவர்களைப் போலவே நானும் கனவு கண்டேனே.. நான் கனவு கண்ட வாழ்க்கையும், நான் விரும்பிய அந்தப் பெண்ணும் என்னிடமிருந்து தூரம் போனார்கள். நான் ஒரு ஆண் என்ற அந்தஸ்து எனக்கு என்ன கொடுத்தது? ஒரு சாதாரண மரத்தில் இருக்கும் மலர் என்ற எண்ணத்தை மறைத்து, என்னை பித்தனாக்கியதுதான் மிச்சம். பொறுப்பு, கடமை, சகிப்புத்தன்மை மற்றும் ஏமாற்றம்… இவைதான் என் வாழ்க்கையின் பரிசுகள்.”மழை நின்றபாடில்லை. என் கண்ணீரும் மழையோடு கலந்து போனது. அந்தத் தரைமட்டத்தில், என் இதழ்கள் உதிர்ந்து கிடக்க, அதே இடத்தில் மற்றொரு மலர் அரும்பத் தொடங்கியது. வாழ்க்கை இப்படியே சுழன்று கொண்டிருக்கிறது. கனவுகள் மாறலாம், ஆனால் ஆசை மாறப்போவதில்லை. அந்த மழையின் ஈரப்பதத்தில் என் காதல் ஒரு துளியாகக் கரைந்து போனது. உலகம் அமைதியானது.ஆனால் என் கனவு, அந்த மலரின் இதழ் போலத் தனிமையிலேயே உதிர்ந்து போயிருந்தது.நாளை, மழை நின்றதும் அவளைச் சென்றடைய வேண்டும். ஒரு சாதாரண மலராக அல்ல, ஒரு ஆணைப் போலத் துணிந்து அவளுடைய பார்வையில் என் காதலைப் பதிய வைக்க வேண்டும். உதிர்ந்தாலும் பரவாயில்லை, நான் அவளுக்குச் சொந்தமானவனாகவே இறக்க விரும்புகிறேன். அந்தப் பெண் அறியட்டும், இந்த மலருக்குள் ஒரு காதல் கவிஞனின் இதயம் துடித்துக் கொண்டிருந்தது என்பதை. என் இதழ்கள் உதிர்வது தோல்வியல்ல, அது என் ஆசை நிறைவேறாத அந்த வலியின் மௌன மொழி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button