
இ.பி.எஃப். கணக்கு 2ஐ சுகாதாரக் காப்பீட்டிற்குப் பயன்படுத்துவதா? அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் டத்தோ என். சிவக்குமார் வலியுறுத்தல்!
கோலாலம்பூர், ஜூன் 24-.
ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) கணக்கு 2 சேமிப்பைச் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களைச் செலுத்தப் பயன்படுத்திக் கொள்ள அரசு முன்மொழிந்துள்ளதை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டி.எஸ்.கே. அமைப்பின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முன்மொழிவு லட்சக்கணக்கான மலேசியர்களின் ஓய்வூதியச் சேமிப்பின் நீண்டகால எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், இது குறித்து ஆழமாக ஆராயப்பட வேண்டும் என டத்தோ சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரக் காப்பீட்டிற்கான அணுகலை, குறிப்பாக பி40 மற்றும் எம்40 வருவாய்ப் பிரிவினருக்கு விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், ஓய்வூதியச் சேமிப்பைப் பயன்படுத்தித் தொடர்ச்சியான மற்றும் மாறுபடும் பிரீமியம் கட்டணங்களைச் செலுத்தும் யோசனை கவலைகளை எழுப்புகிறது என்று டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.
சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்கள் வயது, உடல்நல நிலை, காப்பீட்டுத் தொகை மற்றும் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்து நிலையற்றதாக இருக்கும் என்பதையும், இவை காலப்போக்கில் அதிகரிக்கும் என்பதையும் டத்தோ சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.
ஒரு குடும்பத்திற்கான காப்பீட்டுத் திட்டம் KWSP சேமிப்பிலிருந்து பெரிய தொகையை எடுக்க வழிவகுக்கும், இது ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்குச் சேமிக்கப்பட்ட நிதியைப் பாதிக்கக்கூடும். ஓய்வூதியச் சேமிப்பு என்பது மக்களின் முதுமைக் காலத்திற்கு முக்கியப் பாதுகாப்பு என்பதால், ஒரு சுமையை மற்றொரு சுமையால் மாற்றக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.
இதற்கு மாற்றாக, டத்தோ சிவக்குமார் சில நிலையான தீர்வுகளை முன்மொழிந்தார். சம்பளம், வயது மற்றும் குடும்ப அமைப்புக்கு ஏற்ப, நியாயமான பிரீமியங்களுடன் கூடிய ஒரு வலுவான பொதுச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்றார்.
மலேசியாவின் தற்போதுள்ள மலிவான மற்றும் திறமையான பொதுச் சுகாதாரச் சேவைகள் பெரும்பாலான மக்களுக்குப் போதுமானதாக உள்ளன என்றும், பிரீமியம் காப்பீடு ஒரு கட்டாயத் தேவையாக இல்லாமல், ஒரு விருப்பமான தேர்வாகவே இருக்க வேண்டும் என்றும் டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டார்.
மேலும், KWSP இன் ஐ-அக்காவுன்ட் (i-Akaun) மொபைல் செயலியில் ஒரு புத்திசாலித்தனமான வடிகட்டுதல் அமைப்பை உருவாக்க டத்தோ சிவக்குமார் பரிந்துரைத்தார்.
இதன் மூலம், காப்பீடு வாங்க சேமிப்பைப் பயன்படுத்த விரும்பும் உறுப்பினர்கள் தங்கள் மாத வருமானம், சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட விவரங்களை அறிவிக்க வேண்டும். இது காப்பீட்டு கால்குலேட்டர் மூலம் சேமிப்பில் ஏற்படும் உண்மையான தாக்கத்தை உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும். இது நிதிப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஓய்வூதியத் திட்டமிடலை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.
காப்பீட்டு முகவர்கள் வாடிக்கையாளர்களுக்குத் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், வெறும் வாக்குறுதிகளின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மில்லியன் கணக்கான மக்களின் நிதி எதிர்காலத்தைப் பாதிக்கும் இத்தகைய முன்மொழிவுகளை அவசரமாக அங்கீகரிக்க வேண்டாம் .
சுகாதார அணுகலை மேம்படுத்துவது முக்கியம், ஆனால் அது மக்களின் ஓய்வூதியச் சேமிப்பைக் குறைப்பதன் மூலம் இருக்கக்கூடாது என்பதே தமது வாதம்என டத்தோ சிவக்குமார் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.



