
யாசி எனப்படும் மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியம் நடத்தும் விருது விழா 2025இல் 48 கலைஞர்களுக்கு விருது டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவிப்பு
கோலாலம்பூர், மே 8-
யாசி எனப்படும் மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரியம் நடத்தும் யாசி விருது விழா 2025 விருது விழாவில் 48 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் யாசி விருது விழா ஏற்பாட்டுக் குழு தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்துள்ளார்.
இந்த யாசி விருது விழா 2025 எதிர்வரும் மே 31ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு HGH Convention Centre, Sentul மாநாட்டு மண்டபத்தில் தேநீர் உபசரிப்பு மற்றும் சிவப்புக் கம்பள நிகழ்வுடன் தொடங்கும் என்று ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
இந்த யாசி விருது விழா சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கும். தொலைக்காட்சி நிலையத்துக்காக ஒளிப்பதிவு செய்யப்படுவதால் சரியான நேரத்தில் வருகையாளர்கள் வருவது மிகவும் அவசியம் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இந்த விருது விழாவில் மொத்தம் 48 விருதுகள் வழங்கப்படவுள்ளன. திரைத்துறை, ஆஸ்ட்ரோ மற்றும் அரசாங்கத் தொலைக்காட்சிப் படைப்புகள், வானொலி, மேடை, இசைத்துறை, கொரவ விருதுகள் இப்படி பல விருதுகள் காத்திருக்கின்றன.
கடந்த 2023 மற்றும் 2024-கில் வெளியான படைப்புகள் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
யாசி விருது விழாவில் கௌரவ மற்றும் அங்கீகார விருதுகள் மட்டும் இல்லாது, இசை மற்றும் நடனப் படைப்புகள், விருந்துணவு என பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
யாசி விருது விழா 2025 கொண்டாட்டத்தை ஆரம்பிக்க ஒரு புத்தம் புதிய சிறப்புப் பாடல் ஒன்று கலைஞர்களுக்கு சமர்ப்பணமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
‘இது உங்கள் யாசி’ என்ற தலைப்பில் இந்தப் பாடலை இன்று உங்கள் முன்னிலையில் வெளியீடு செய்யவிருக்கிறோம். மே 8 இரவு 8 மணி தொடங்கி PU4LYF YOUTUBE CHANNEL வழியாக நீங்கள் இப்பாடலை கேட்கலாம்.
பாடலுக்கு மெட்டமைத்து வரிகள் எழுதி தயாரித்தவர் நம் கவிநாயகன் யுவாஜி. அவருடன் இணைந்து பொன்வேந்தன் பின்னணி இசையில் உதவி செய்திருக்கிறார். நம் நாட்டு பாடகர்கள் புவனேஸ்வரி, அபிமன்யு, ரோஷினி, பிரசாத், லங்கேஸ், லிங்கேஸுடன் டத்தோ கீதாஞ்சலி ஜி-யும் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் யாசியின் புதிய பரிணாமத்தின் ஒரு சிறிய தொடக்கமாக இருக்கும். இன்னும் புதிய மற்றும் இளைய கலைஞர்களை இணைத்துக் கொள்ள பல திட்டங்கள் வகுக்கப்படும். காத்திருங்கள்.
முதல் முறையாக யாசி விருது விழாவில் 6 விருதுகள் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை மக்களாகிய நீங்கள் தேர்வு செய்யப் போகிறீர்கள்.
இந்த 6 விருதுகள் மக்கள் தேர்வு அடிப்படையில் PUBLIC VOTING முறையில் நடைபெறும். அதற்காக பிரத்தியேக வாக்குப் பதிவு வழிமுறையும் தயார் செய்யப் பட்டிருக்கிறது. உங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றியடைய செய்யலாம்.
அந்த ஆறு மக்கள் தேர்வு விருதுகளில் மூன்று விருதுகளுக்கு போட்டி போடும் இறுதிச் சுற்று கலைஞர்களை அறிமுகப் படுத்தவிருக்கிறோம்.
மே 8 முதல் மே 30 வரை நீங்கள் அவர்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு முறை அடிப்படையில் வாக்குப் பதிவு செய்யலாம். அந்த விருதுகள் யாசி பிரபல தொலைக்காட்சி நடிகர் (YASI POPULAR TV ACTOR), பிரபல தொலைக்காட்சி நடிகை (YASI POPULAR TV ACTRESS) மற்றும் யாசி பிரபல பாடல் (YASI POPULAR SONG). 2023 மற்றும் 2024-கில் வெளியீடு கண்ட படைப்புகளின் அடிப்படையில் இறுதி சுற்று வரை தேர்வான நடிகர், நடிகை மற்றும் பாடல்கள் இதோ.
இன்னும் மூன்று மக்கள் தேர்வு விருதுகளின் அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும்.
நம் யாசி விருது விழா 2025 வெற்றிகரமாக நடைபெற பலர் பொருளாதார மற்றும் விளம்பர ரீதியாக கைகொடுத்து வருகிறார்கள். இன்னும் பலர் முன்வந்து கொண்டிருக்கிறார்கள். முன் வர வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கியமான பதிவை நான் வலியுறுத்த விரும்புகிறேன். பல வருடங்களாக நம் மலேசிய தொலைக்காட்சிப் படைப்புகள் சரியான நேரத்தில் ஒளிபரப்பாவதில்லை. முக்கியமாக இரவில், ஓய்வான நேரங்களில் தொலைக்காட்சியில் தமிழ் நாட்டு நாடகங்களே அதிகம் ஒளிபரப்பாவதாக ஒரு முறையீடு காலம் காலமாக கேட்டுக் கொண்டிருந்தது.
கடந்த 2020 தொடங்கி ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல தமிழ் நாடகங்களும், தொலைக்காட்சிப் படைப்புகளும் வந்த வண்ணமாக இருக்கின்றன. அரசாங்க தொலைக்காட்சியான RTM TV2- டில் மதிய வேலைகளில் ஒளிபரப்பான உள்ளூர் தமிழ் தொலைகாட்சிப் படங்கள், இந்த வருடம் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை திங்கட்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆனால், நம்மில் பலர் இன்னும் நம் படைப்புகளை பார்ப்பது குறைவாக உள்ளது. அதிசயமாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நாம் முழுமையாக தக்கவைத்துக் கொள்ளத் தவறக் கூடாது. தொலைக்காட்சி நிலையங்களுக்கு, முக்கியமாக RTM TV2- கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விருது வழங்கும் அளவுக்கு நம் தொலைக்காட்சி படைப்புகள் அதிகமாக தயாரிக்கப்படுவது மிகவும் வரவேற்கத் தக்கது.
இன்று முதல் யாசி விருது விழாவுக்கு தேர்வான கலைஞர்களுக்கு உங்கள் வாக்குப் பதிவுகளை செய்ய ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் எத்தனை வாக்குப் பதிவுகள் மொத்தம் வருகிறது என்று நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். வாக்களியுங்கள்.
இது உங்கள் யாசி வெறும் பாடலின் தலைப்பு மட்டும் இல்லை. புதிய பரிணாமத்தில் காலெடுத்து வைக்கும் யாசி இயக்கத்தின் எழுச்சிக் கோஷமாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.



