
83 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட சிலாங்கூர், சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதுப்பள்ளி புகுவிழா வழிபாடு
சீபில்டு,பிப்.4-
சிலாங்கூர், சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதுப்பள்ளி புகுவிழா வழிபாடு பள்ளி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பகுதியில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு வசதிகளுடன் அமைந்துள்ள புதிய பள்ளியின் புதிய கட்டடம் 2024/2025 புதிய கல்வியாண்டில் முறையே செயல்படத் தொடங்கும் என திட்டமிடப்பட்டிருக்கும் வேளையில் பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புகுவிழாவில், சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை பாலர் பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் திரு மணிசேகர் ஸ்ரீரங்கன், பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி வாரியத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
1941-ஆம் ஆண்டு சீபில்டு தோட்டத்தில் செயல்படத் தொடங்கிய இப்பள்ளி நாட்டில் 83 ஆண்டு கால வரலாற்றைச் சுமந்து நிற்கும் பள்ளியாகும்.
இப்பள்ளியில் தற்போது 85 மாணவர்கள் பயிலும் வேளையில் 10 ஆசிரியர்கள் தலைமையாசிரியை விமலா வீரப்பனின் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுகின்றனர்.
இதனிடையே, புதிய நவீன பள்ளி வளாகம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிச்சயம் உந்துதலாக அமையும் என திரு.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.
பள்ளி திறப்புவிழா பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு கற்றல் கற்பித்தல் உகந்த சூழலில் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



