
டத்தோ ஆர்.ரமணன் வடிவமைப்பில் மேலும் ஒரு புதிய கடனுதவித் திட்டம் அறிமுகம் இந்தியர்கள் வியாபாரத்திற்கு வலு சேர்க்கும்
கோலாலம்பூர், ஜூன் 3-
புதிய வியாபாரக் கடனுதவி திட்டத்திற்கு தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வடிவமைத்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து டத்தோ ஆர்.ரமணன் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஓர் அரசு சார்பு நிதியகத்துடன் மேற்கொள்ளப்பட்டப் பலநிலை பேச்சு வார்த்தையின் பலனாக, முதல் முறையாக இந்திய தொழில்முனைவோருக்கென பிரத்தியேகமாகப் பல கோடி மதிப்பிலான வியாபாரக் கடனுதவி அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இந்திய தொழில்முனைவோர் மத்தியில் மிகப் பரிட்சையமான தெக்குன் ஸ்புமி – அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) ஆகிய வியாபாரக் கடனுதவிகளுக்கு அடுத்து இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
தெக்குன் நிதியகத்தின் கீழ் ‘SPUMI GOES BIG’ எனும் சிறப்புத் திட்டத்தின் வாயிலாக மேலும் 30 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வாய்ப்பையும், இந்தியப் பெண் தொழில்முனைவோருக்காக அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் கீழ் பெண் எனும் பிரத்தியேகத் திட்டத்தின் வழி கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வாய்ப்பையும் டத்தோ ரமணன் உருவாக்கியிருந்தார்.
இந்தியச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வணிகத் துறையில் இந்திய இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில் டத்தோ ரமணன் மேற்கொண்டு வருகின்ற பல அதிரடி திட்டங்களும் வாய்ப்புகளும், சமூகம் எதிர்பார்க்கும் இலக்கு நோக்கிய பயணத்திற்கு அச்சாணியாகத் திகழ்கிறது. அந்த வகையில் இந்த புதிய கடனுதவி திட்டம் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.



