இந்தியர்களின் பிரச்சினைக்கு ம.இ.கா மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ தொ.முருகையா கூறினார்.
இந்நாட்டில் நிகழும் ஆலயப் பிரச்சினையாகட்டும. தமிழ்ப்பள்ளி பிரச்சினையாகட்டும் இந்தியர் சமூகநலன் பிரச்சினையாகட்டும் இதற்கு ம.இ.கா மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை இந்திய சமுதாய மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் டத்தோ முருகையா அவ்வாறு தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ம.இ.கா எந்த பதவியிலும் இல்லை. எனினும் மக்கள் இன்னும் ம.இ.காவை நாடி வருகின்றனர். இப்படி ம.இ.காவை நாடி வரும் மக்களை ம.இ.கா ஒரு போதும் புறக்கணித்தது கிடையாது. அவர்களின் தேவைகளை ம.இ.கா தொடர்ந்து பூர்த்தி செய்து வருவதாக டத்தோ முருகையா சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இந்தியர்களின் நலன் தொடர்ந்து காக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாக முருகையா சொன்னார்.
தீபாவளியை முன்னிட்டு 1.5 மில்லியன் உணவுக்கூடை, 20 மில்லியன் செலவில் மின்சுடலை மற்றும் ஈமச்சடங்கு இடங்கள் கட்டும் திட டம் மற்றும் 2025 வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களின் சமூகநலனுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று டத்தோ முருகையா குறிப்பிட்டுள்ளார்
ஜொகூர், குளுவாங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட மக்கோத்தா இடைத்தேர்தலை முன்னிட்டு ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் ம.இ.கா தலைவர்கள் தேசிய முன்னனி வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



