
தமிழ்ப் பள்ளிகளுக்கான துன் சாமிவேலு கிண்ண வலைப்பந்துப் போட்டி
தேசம் செய்திகள் நக்கீரன்
கோலாலம்பூர், அக்.5-
மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் சார்பிலும் மஇகா கல்விக் கரமான எம்.ஐ.இ.டி. சார்பிலும் நடைபெற்ற துன் சாமிவேலு தமிழ்ப் பள்ளி வலைப்பந்து கிண்ணப் போட்டியில் கலந்துகொண்ட 15 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 16 குழுக்களுக்கும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
விருது வழங்குமுன், தமிழ்ப் பள்ளி 6-ஆம் ஆண்டு மாணவிகளுக்கான இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்ற கோலாலம்பூர், பந்தாய் டாலம், கம்போங் பாசீர் IWK ECO Park-விளையாட்டு அரங்கில் பேசிய மஇகா விலாயா மாநிலத் தலைவர் டத்தோ சைமன் ராஜா, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச.விக்னேசுவரன் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ அசோகன் சிறப்புரை ஆற்றியபோது, “இளம் வயதில் இதுபோன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தும் மாணவியருக்கு, உடலும் உள்ளமும் உற்சாகமாக இருக்கும்; தவிர, பிளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவியர் தேசிய அளவிலும் உலக அளவிலும் நடைபெறும் விளையாட்டுகளில் பங்குபெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பையும் வாழ்நாள் ஓய்வூதியத் தகுதியையும் பெறலாம் என்றார்.
கூட்டரசு மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளின் சார்பில் 16 குழுக்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. மஇகா கூட்டரசுப் பிரதேச விளையாட்டுப் பிரிவு பொறுப்பாளர் நளேந்திரன் சுந்தரம், எம்.ஐ.இ.டி. விளையாட்டுப் பிரிவு பொறுப்பாளரும் மத்திய செயலவை உறுப்பினருமான எண்ட்ரூவும் இதன் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
ம.இ.கா. மகளிர் பிரிவினருடன் புத்ரி பிரிவினரும் இதில் கலந்து கொண்டனர்.
தம்புசாமி பிள்ளை தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களான கி.கௌசல்யா, வே. மாலதி இருவரும் மஇகா-வின் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.



