
ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் இந்திய சமுதாயத்தின் அடையாளம் செத்தியா ஆலாம் நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளிக்கு. ம.இ.காவின் MIED 50 ஆயிரம் வெள்ளி நன்கொடை தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேரில் வழங்கினார்
செத்தியா ஆலாம், ஏப்.16-
நாட்டில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்கள் இரண்டும் ம.இ.காவுடன் இரண்டரக் கலந்த ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.
அப்போதைய மலாயாவிற்கு இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள், இந்தியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தோட்டங்களில் குடியேறினர். இந்த தோட்ட மக்களுக்காக நாடு தழுவிய நிலையில் இருக்கும் தோட்டங்களில் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் நிறுவப்பட்டன.

இதன் காரணமாகவே ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஒவ்வொரு ஆலயங்களும் 100 ஆண்டுகள் பழமையானவையாக உள்ளது என்பது ஊர் அறிந்த வரலாறு. இந்த வரலாற்றை யாராலும் மாற்ற இயலாது என்பது நடைமுறை உண்மை.
அந்த வகையில் இந்திய சமுதாயத்திற்கு ஒரு தாய்க்கட்சியாக விளங்கும் ம.இ.காவிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் மக்கள் நலனுக்காக அவர்களின் பிள்ளைகளின் நலனுக்காக ம.இ.கா தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு அரணாக விளங்கி வருகிறது.
ம.இ.கா என்ற தாய்க்கட்சியின் வழி தமிழ்ப்பள்ளிகள் மாபெரும் எழுச்சியை கண்டுள்ளது என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 75 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் ம.இ.கா அன்றும் இன்றும் என்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு காவல்காரனாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
இந்நிலையில்102 ஆண்டுகள் பழமை வாய்ந்த செத்தியா ஆலாம், நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இயங்கும் துன் டாக்டர் ச.சாமிவேலு அறிவியல் கூடம் மேம்படுத்த உதவ வேண்டும் என்ற இப்பள்ளியின் மேலாளர் வாரிய தலைவர் திரு.ஆறுமுகம் வேண்டுகோளுக்கு இணங்க ம.இ.கா தனது கல்வி மேம்பாட்டுக் கழகமான MIED வழி 50 ஆயிரம் வெள்ளி நன்கொடையை வழங்கியது.
இந்த நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளிக்கு புதன்கிழமை காலை வருகை மேற்கொண்ட ம.இ.கா தேசிய தலைவரும் MIED தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 50 ஆயிரம் வெள்ளிக்கான மாதிரி காசோலையையும் அசல் காசோலையையும் LPS தலைவர் ஆறுமுகத்திடம் வழங்கினார்.
நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளியில் இயங்கி வரும் துன் சாமிவேலு அறிவியல் கூட மேம்பாடுகள், அறிவியல்கூட நிலை, இதன்வழி மாணவர்கள் அடையும் நன்மைகள், அறிவியல் கூடத்திற்கு தேவைப்படும் இதர தேவைகள் தொடர்பான விவரங்களை ஆசிரியர் ஒருவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களிடம் விளக்கிக் கூறினார்.
இதனை நன்கு புரிந்த கொண்ட தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் 50 ஆயிரம் வெள்ளியுடன் தமது சொந்த நன்கொடையாக ஒரு தொகையை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.பின்னர் பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுற்றிப் பார்த்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களை சிலரையும் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் பள்ளியின் LPS தலைவர் ஆறுமுகம், சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



