MalaysiaIndiaInternational

வீட்டு வேலைக்கு அழைத்து வரப்பட்ட குடும்பமாது நடுத்தெருவில் விடப்பட்டார் மலேசிய உலக மனிதநேய இயக்கத் தலைவர் கமலநாதன் தீர்வு

 

கோலாலம்பூர்,டிச.24-
தமிழ்நாடு, அரியலூர் பகுதியில் இருந்து மலேசியா, சுபாங் ஜெயாவிற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு அழைத்து வரப்பட்ட குடும்பமாது காசியம்மாள் (வயது 48) நடுத்தெருவில் விடப்பட்டதாக மலேசிய உலக மனிதநேய இயக்கத் தலைவர் Dr த.கமலநாதன் கூறினார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஏஜெண்டு மூலமாக மலேசியா வந்த காசியம்மாள் சுபாங்ஜெயாவில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் முதியவர் ஒருவரை பராமரிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டார். மாதம் 1,500 வெள்ளி சம்பளம் பேசப்பட்ட நிலையில் அந்த முதியவர் ஒரு மாதகாலத்தில் இறந்து விட்ட நிலையில் காசியம்மாள் சம்பளம் இல்லாமல் அந்த வீட்டில் இருந்து துரத்தப்பட்டதாக கமலநாதன் தேசம் தொலைக்காட்சிடம் தெரிவித்தார்.

அந்த முதியவர் இறந்த பிறகு சம்பந்நப்பட்ட வீட்டின் குடும்பத்தார் காசியம்மாளிடம் ஆயிரம் வெள்ளி சம்பளம் பேசினர். இல்லாவிட்டால் 500 வெள்ளிக்கு வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப் போவதாக மிரட்டினர். இதற்கு காசியம்மாள் ஒப்புக் கொள்ளாததால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் பெட்டிப்படுக்கையுடன் காசியம்மாள் அந்த வீட்டில் துரத்தப்பட்டார்

இந்நிலையில் காசியம்மாள் இந்திய தூதரகத்தின் உதவியை நாடினார். இந்திய தூதரகம் உதவாத நிலையில் தூதரகத்திற்கு அருகில் மேம்பாலத்தில் 5 நாட்கள் படுத்துறங்கிய நிலையில் இவ்விவகாரம் தமது பார்வைக்கு கொண்டு வரப்பட்டதாக கமலநாதன் சொன்னார்.

காசியம்மாள் விவகாரம் தொடர்பில் சம்பந்நப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசிய கமலநாதன், காசியம்மாளின் பாஸ்போர்ட்டு மற்றும் சம்பள பாக்கியை பெற்றுத் தந்தார். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஏஜெண்டு 8 ஆயிரம் வெள்ளி வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக சம்பந்தப்பட்ட முதலாளி தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட ஏஜெண்டை தொடர்பு கொண்ட கமலநாதன், காசியம்மாளுக்கு விமான டிக்கெட் மற்றும் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததை தொடர்ந்து அந்நபர் காசியம்மாளுக்கு விமான டிக்கெட், அபராதத் தொகையை வழங்க ஒப்புக் கொண்டதாக கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இந்திய தூதரகம் மெத்தனப் போக்கை கடைபிடிக்கக் கூடாது என்றும் இந்திய பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற விவகாரங்களில் இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய உலக மனிதநேய இயக்கத் தலைவர் த.கமலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button