Malaysia

மரண சகாய நிதித் திட்ட வாரிசுகளின் பெயர்கள் மறுசரிபார்ப்பு- சிலாங்கூர்-தேசிய பதிவுத் துறை ஒத்துழைப்பு

 

ஷா ஆலம், டிச. 26- காய்ராட் டாருள் ஏஹ்சான் எனப்படும் மரண சகாய நிதித் திட்டத்திற்கு வாரிசுகளாக குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்களை மறுசரிபார்ப்பதில் தேசிய பதிவுத் துறையுடன் சிலாங்கூர் மாநில அரசு ஒத்துழைக்கும்.

மாநில அரசின் அந்த 1,000 வெள்ளி உதவித் தொகை அங்கீகரிக்கப்பட்ட வாரிசுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.

இதன் தொடர்பான தரவுகள் தேசிய பதிவுத் துறையிடம் மட்டுமே உள்ளதால் அத்துறையிடம் நாங்கள் இது குறித்து விவாதிக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பணி மிகவும் நுட்பமானது. இருப்பினும் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணியை முடித்து விடுவோம் என்று அவர் சிலாங்கூர் டிவியின் புவால் பிச்சாரா ஸ்கோப் எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கூறினார்.

இந்த மரண சகாய நிதியை அமல்படுத்துவதற்கு மாநில அரசின் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட 50,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு மரண சகாய நிதியை எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் கீழ் தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு அத்திட்டம் நிறுத்தப்பட்டு 2021ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button