Malaysia

எஸ்பிஎம் தேர்வை சிறப்பாக எழுதுங்கள் இந்திய மாணவர்களை உயர்த்த எம்ஐஇடி தயாராக இருக்கிறது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி

கோலாலம்பூர், ஜன.2-
இந்திய மாணவர்கள் அனைவரும் 2024 கல்வி ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வை சிறப்பாக எழுதுங்கள் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

உங்களின் உயர்க்கல்விப் பயணத்திற்கு மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடி எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்று ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

கடந்த டிசம்பர் 2-ஆம் நாள் தொடங்கிய இந்தத் தேர்வின் தொடர்பில் மலாய், ஆங்கில மொழிகளுக்கான வாய்மொழித் தேர்வு, அறிவியல் புல மாணவர்களுக்குரிய சோதனைக் கூடத் தேர்வு யாவும் கட்டம் கட்டமாக முடிந்துள்ள நிலையில், தற்பொழுது ஜனவரி 2-ஆம் நாள் முதல் எழுத்துப்பூர்வமான அனைத்துத் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.

நம் எதிர்கால வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் உரிய ஒரேக் கருவி, கல்வி ஒன்றுதான்; இதை அனைத்து மாணவர்களும் குறிப்பாக மலேசியக் கல்விச் சான்றிதழ் தேர்வு-2024ஐ எழுதும் மாணவத் திலகங்கள் அனைவரும் தத்தம் மனதில் ஆழமாக பதியவைத்து மிகுந்த அக்கறையோடும் கவனத்துடனும் இந்தத் தேர்வை எழுதும்படி தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் மெட்ரிகுலேசன் கல்லூரிகளில் சேர இருக்கிறீர்கள்; எஸ்டிபிஎம் வகுப்பிலும் ஒருசாரார் சேரக்கூடும். இத்தகைய மாணவர்களின் உயர்க்கல்விப் பயணத்திற்கு துணைவர, பன்னாட்டுத் தரத்திலான நம் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

குறைந்த அடைவு நிலையைப் பெறும் மாணவர்கள்கூட, தங்களின் அடுத்தக்-கட்ட நகர்வு குறித்து எவ்வித தயக்கமும் காட்டத் தேவையில்லை. அப்படிப்-பட்டவர்களுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘திவெட்’ தொழில்நுட்ப கல்வித் திட்டத்துடன் நம்முடைய டேப் கல்லூரி தயாராக இருக்கிறது.

எனவே, நம்முடைய மாணவர்களின் உயர்க்கல்விப பயணத்திற்கு நம் சமுதாயத்தின் தாய்க்கட்சியான மஇகா எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, அந்த நம்பிக்கையுடன் நிகழும் எஸ்பிஎம் தேர்வை சிறப்பாக எழுதுங்கள் என்று மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button