
செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது
கோலாலம்பூர்,பிப்3-
தலைநகரின் மையப்பகுதியில் மிகவும் பெயர் பெற்ற வழிப்பாட்டுத் தலமான செந்தூல், ஜாலான் ஈப்போ அருள்மிகு தண்டாயுதபாணி நகரத்தார் ஆலயத்தில் திங்கட்கிழமை ஏழாவது திருக்குட நன்னீராட்டு விழா இறைமனம் கமழ மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
செந்தூல் முருகன் கோவில் என்று அழைக்கப்படும் கோலாலம்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம், புகழ்பெற்ற கௌமார வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
அத்தகைய ஆலயத்தில் நடைபெற்ற ஏழாவது திருக்குட நன்னீராட்டு விழாவை நிறைவேற்றி வைப்பதற்காக தமிழ்நாட்டின் பிள்ளையார்பட்டி தலத்திலிருந்து அண்மையில் வருகை தந்த சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் இந்த திருக்குட நன்னீராட்டு விழா, காலை 10:20 மணி அளவில் தொடங்கி 11:20 மணி அளவில் நிறைவுற்றது.

மஇகாவின் தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ த. முருகையா, தாமரைக் குழும இயக்குனர் வாரியத் தலைவர் தான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், பாவலர் சீராகி உள்ளிட்ட தமிழ் இலக்கிய வட்டத்தினர், ஏராளமான பொதுமக்கள், நிர்வாகத்தினர், குறிப்பாக நகரத்தார் பெருமக்கள் என திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ திருக்குட நன்னீராட்டு விழா, இனிதே நிறைவடைந்தது.



