
மஸ்ஜிட் இ்ந்தியா அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது இடமாற்றம் செய்ய பேச்சு நடத்தப்படுவதாக ஜேக்கல் நிறுவனம் அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மார்ச் 20-
பழமை வாய்ந்த மஸ்ஜிட் இ்ந்தியா அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இறுதி முடிவு தெரியும் வரை உடைக்கப்படாது என்று ஜேக்கல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தியில் உண்மை இல்லை. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு தெரியும் வரை ஆலயம் உடைபடாது என்று கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜேக்கல் குழும நிறுவனத்தின் நிதி நிர்வாக அதிகாரி டத்தோ சைட் நஷ்ரூல் உறுதியளித்தார்.
இந்தப் பகுதியில் மசூதி ஒன்று கட்டதிட்டமிடப்பட்டது உண்மை. இது ஜேக்கல் நிறுவனத்தின் தோற்றுநரின் நீண்ட கால ஆசை. ஆனால், கோவிலை உடைத்து விட்டு மஸ்ஜிட் கட்டப்படுகிறது என்ற செய்தியில் உண்மை இல்லை. இந்த நிலத்தை ஜேக்கல் நிறுவனம் 2012இல் வாங்கியது என்று டத்தோ சைட் நஷ்ரூல் தெரிவித்தார்.
பத்ர காளியம்மன் கோவில் அமைந்திருக்கும் நிலம் எங்களுக்குச் சொந்தமானது.
இது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலம் அல்ல. அது JAKEL நிறுவனத்திற்கு சொந்தமானது.
பத்ர காளியம்மன் கோவில் இடமாற்றம் தொடர்பாக கோவில் நிர்வாகத்துடன் பத்து ஆண்டுகள் மேலாக பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு வருவதாக டத்தோ சைட் நஷ்ரூல் சொன்னார்.
கோவில் நிர்வாகமும் எங்களுடன் இணைந்து பேச்சு வார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த கோவில் உடைக்கப்படுகிறது என்று கூறப்படும் குற்றச் சாட்டில் உண்மை இல்லை.
பத்ர காளியம்மன் கோவிலலை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இருதரப்பும் இறுதி முடிவு எடுக்கும் வரை ஆலயம் உடைக்கப்படாது என்று டத்தோ சைட் நஷ்ருல் உறுதியளித்தார்.
இந்த விவகாரத்தில் பத்ர காளியம்மன் கோவிலுக்கு இழப்பீடு மற்றும் பொருத்தமான புதிய இடம் வழங்க தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது என்று டத்தோ சைட் நஷ்ரூல் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜேக்கல் நிறுவனத்தின் சட்ட வழக்கறிஞர் தலைவர் அய்மான் டசூக்கியும் இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



