
விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவி நிதியில் திருப்தி இல்லை ஓர் உயிரின் விலை 30,000 வெள்ளிதானா? டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
கோலாலம்பூர்,ஆக.9-
ஒரு உயிரின் மதிப்பு வெறும் 30 ஆயிரம் வெள்ளிதானா என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டு மரணமடைந்தார். அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்திற்கு 30 ஆயிரம் வெள்ளி உதவி நிதி வழங்கப்பட்டது. ஒரு உயிரின் விலை 30 ஆயிரம் வெள்ளியா என்று ம.இ.கா மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ம.இ.காவுக்கு இந்த உதவித் தொகையில் திருப்தி இல்லை. மலேசியர்களுக்கு இதுபோன்று நடந்தாலும் அதற்கும் 30 ஆயிரம் வெள்ளி மட்டும் தானா என்ற கேள்வி கூடவே எழுகிறது என்று
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவி நிதி குறித்து கருத்துரைக்கையில் டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பதவியில் உள்ளவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், யாரும் குரல் கொடுக்கவில்லை. இது வருத்தமளிக்கிறது.
விஜயலட்சுமி மரணம் ஒரு அலட்சியத்தால் நடந்திருக்கலாம். இது தொடர்பில் வழக்கு தொடரப்படலாம்.
ஆனால் இந்த வழக்கிற்கு விஜயலட்சுமி குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் மஇகா உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
மஇகா ஆரம்ப காலத்தில் இருந்தே இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுத்து வருகிறது. தற்போது நிலைமை மாறி விட்டது. இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமுதாயமாக ஆகிவிட்டது. சமுதாயப் பிரச்சினைகளுக்கு யார் குரல் கொடுப்பார்கள் என்ற கேள்வி கேட்கப்படும் நிலை உருவாகி விட்டது என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.



