
ஆலயங்களுக்கு ஏன் மானியம் இல்லை?சென்டிரியான் பெர்ஹாட் ஆலயங்களை தவிர்க்கவும் இந்து ஆலயங்களை பாதுகாக்கவும் உறுப்பினர்களை அதிகரிப்பது அவசியம் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் விளக்கம்
ஆலயங்களுக்கு ஏன்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஈப்போ, ஜூன் 4-
பேராக் மாநிலத்தில் இருக்கும் அனைத்து ஆலயங்கள் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை காட்டிக்காக்கவும் சென்டிரியான் பெர்ஹாட் ஆலயங்களை தவிர்க்கவும் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்கள் கொண்ட ஆலயங்களுக்கு மானியம் கிடையாது என்று கூறியதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறியுள்ளார்.
பேராக் மாநிலத்தில் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட ஆலயங்களுக்கு மானியம் கிடையாது என்று சிவநேசன் தெரிவித்த கருத்துக்கு ம.இ.கா ஊடகப் பிரிவு தலைவர் சிவசுப்ரமணியம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் தேசம் ஊடகம் சிவநேசன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.
பேராக் மாநிலத்தில் பல ஆலயங்கள் இருக்கின்றன. முதலில் இவை பாதுகாக்கப்பட வேண்டும். சில ஆலயங்கள் சென்டிரியான் பெர்ஹாட் ஆலயம் போல் செயல்படுகிறது. இத்தகைய ஆலயங்கள் சமயம் சார்ந்த விஷயங்களை செய்ய வேண்டும். எத்தனை ஆலயங்கள் தேவாரம், திருவாசகம் நடத்துகின்றன? என்று கேட்டால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அவை மேற்கொள்ளப்படுவதாக சிவநேசன் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தை பொறுத்தவரையில் பல ஆலயங்கள் 100 ஆண்டுகளை கடந்த நிலையில் அதன் உறுப்பினர்கள் 100 பேர்கூட இல்லை என்பது ஏற்புடையதாக இல்லை. 100 ஆண்டுகளில் 100 உறுப்பினர்கள் கூடவா சேர்க்க முடியவில்லை? அப்படியானால் இது சென்டிரியான் பெர்ஹாட் ஆலயமாகத்தான் இருக்கும் என்று சிவநேசன் சொன்னார்.
பேராக் மாநிலத்திற்கு வெளியில் பல மாநிலங்களில் ஆலயங்கள் சென்டிரியான் பெர்ஹாட் போல் செயல்படுவதால் ஆலயங்களுக்கு நிலத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஆலய பிரச்சினைகள் தலைதூக்கி விட்டதால் அதனை ஒற்றுமையோடு தீர்வு காண முயல வேண்டும். இதற்கு ஆலயங களில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை முக்கிய பங்காற்றும் என்று சிவநேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆலய பிரச்சினைகளை மலேசிய இந்து சங்கம் கவனிக்க வேண்டும். தேவாரம், திருவாசகப் போட்டியை நடத்தினால் மட்டும் போதாது. சமயம் சார்ந்த விஷயங்களை கவனிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் சமய விவகாரங்கள் தலைதூக்காமல் இருக்கும். Dong Zong அமைப்பு போல் மலேசிய இந்து சங்கம் சமயத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
எனது நோக்கம் ஒன்றுதான். ஆலயங்கள் சேவை அடிப்படையில் செயலாற்ற வேண்டும். அந்த காலத்தில் இது நிறைய இருந்தது. தற்போது குறைந்து விட்டது. எல்லா சென்டிரியான் பெர்ஹாட் ஆகி விட்டது. இந்நாட்டில் இந்து சமயத்திற்கு பிரச்சினை வரக்கூடாது என்ற நல்ல விஷயங்களை மேற்கொள்ளவே நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட ஆலயங்களுக்கு மானியம் கிடையாது என்று சிவநேசன் கூறினார்.
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று ஒரு திராவிடர் சொன்னார். என்னைப் பொறுத்தவரை உணர்வு தமிழுக்கு……உயிர் கடவுளுக்கு….உடல் மண்ணுக்கு என்பதை கொள்கையாக கொண்டுள்ளதால் ஒரு இந்து என்ற அடிப்படையில் இந்து ஆலயங்களை பாதுகாக்கும் கடப்பாடு தமக்கு இருப்பதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் உறுதியளித்துள்ளார்.



