
இளைஞர் வயது வரம்பு மாற்றம்: முழுமையான ஆய்வு அவசியம் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை 11, 2025 மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, சட்ட எண் 668 இன் கீழ் இளைஞர்களுக்கான வயது வரம்பை 30 ஆகக் குறைக்கும் அரசின் முடிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தையும், தீர்க்கமான கருத்துகளையும் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் அரசியல் நிர்ப்பந்தமாக இல்லாமல், முழுமையாக ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் திரு. முருகன் மணியம், “எந்தவொரு வயது வரம்பு மாற்றமும் முழுமையாக ஆராயப்பட வேண்டும்; அவசரமாகச் செய்யப்படக்கூடாது. அவசரமான அணுகுமுறை, மேலும் தங்கள் அடையாளத்தை உருவாக்கும் நிலையில் உள்ள இளம் தலைவர்களின் வளர்ச்சி செயல்முறையைப் பாதிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ‘நாம் சுயாதீனமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும்; மூன்றாவது தரப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சார்ந்திருப்பவர்கள் அல்ல. எந்தவொரு அடுத்த கட்டத் திட்டம் இல்லாமல் வயது வரம்பு குறைக்கப்பட்டால், அது இன்னும் அடையாளம் உருவாக்கும் கட்டத்தில் உள்ள ஒரு இளம் தலைமைக் குழுவிற்கு இடையூறாக இருக்கும்” என்றும் எச்சரித்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 31-40 வயது பிரிவினருக்கான நீண்டகாலத் திட்டம் இல்லாதது குறித்தும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. ஜூலை 2025 வரை, இந்தப் பிரிவினரின் வளர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதற்கான விரிவான தீர்வு அல்லது தொடர் திட்டத்தை விவரிக்கும் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணமும் இல்லை என்று மணிமன்றப் பேரவை சுட்டிக்காட்டியது.
“இதுவரை, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் சட்ட எண் 668 இன் கீழ் 30 வயதில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் 31-40 வயது பிரிவினருக்கான நீண்டகாலத் திட்டம் அல்லது முழுமையானத் தீர்வை அதிகாரப்பூர்வமாக விவரிக்கவில்லை” என்று திரு. முருகன் மேலும் கூறினார்.
ஆகவே, மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை மேற்கொண்டு, அரசுடன் ஒரு கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அக்கூட்டத்தில் பின்வரும் அடிப்படை கொள்கைகள் விவாதிக்கப்பட வேண்டும் என மணிமன்றப் பேரவை வலியுறுத்தியுள்ளது:
1. மாநில அரசுகளுடன் மேலும் விரிவான கலந்துரையாடல் நடத்துதல்.
2. இளைஞர் அமைப்புகளுக்கு இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்வி கூடங்களில் அணுக அதிகாரப்பூர்வ அனுமதி வழங்குவதன் வழி இளம் இளைஞர்களைத் தங்கள் உறுப்பினர்களைச் சேர்க்க துணைப் புரியும்.
3. உள்ளடக்கிய மற்றும் பொறுப்பான ஒரு மாற்ற உத்தியை உருவாக்குதல்,
4. 31-40 வயது பிரிவினருக்கான தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டத்தை வழங்குதல்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, வயது வரம்பு மாற்ற முயற்சியை மறுக்கவோ அல்லது தடுக்கவோ இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. இருப்பினும், அதன் நடைமுறை படிப்படியாகவும், அடுக்குகள் வாரியாகவும் இருக்க வேண்டும் என்பது மணிமன்றப் பேரவையின் கோரிக்கை. இடைக்காலக் கட்டத்தில் 35 வயது வரையிலான வயது வரம்பு ஒரு தற்காலிக அளவுகோலாக இருக்க வேண்டும் என்றும், தலைமைத்துவத்தை மறுசீரமைக்கவும், திறமையான அடுத்த தலைமுறையைப் பயிற்றுவிக்கவும் அமைப்புகளுக்கு இது இடமளிக்கும் என்றும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை கருத்து தெரிவித்துள்ளது.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, மலேசியாவில் உள்ள இளைஞர்களின் குரலாக இருக்க உறுதிபூண்டுள்ளதுடன், அனைத்து இளைஞர் பிரிவினருக்கும் நியாயமான மற்றும் சமமான வளர்ச்சி வாய்ப்புகளைத் தொடர்ந்து போராடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நன்றி : தமிழோடு உயர்வோம்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை



