
மஇகா இனி ஏமாறவோ, மிரட்டப்படவோ விரும்பவில்லை’: ம.இ.காவுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் ஓரங்கட்டியது ஏன்? தேசிய முன்னணி தனித்தே நிற்கும் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கடும் விமர்ச்சனம்
மஇகா இனி ஏமாறவோ, மிரட்டப்படவோ விரும்பவில்லை’:
ம.இ.காவுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் ஓரங்கட்டியது ஏன்?
தேசிய முன்னணி தனித்தே நிற்கும் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கடும் விமர்ச்சனம்
கோலாலம்பூர், ஜூலை 27-
ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சர் பதவிக்கான வாக்குறுதிகள் மீறப்பட்டதாகவும், மஇகா புறக்கணிக்கப்படுவதாகவும் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்காகக் கொடுக்கப்பட்ட ஆதரவு, தற்காலிகமானது என்றும், இனி ஏமாற்றப்படவோ, மிரட்டப்படவோ விரும்பவில்லை என்றும் மஇகா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்த போதிலும், மஇகாவுக்கு எந்த அமைச்சர் பதவியோ அல்லது அரசுப் பதவியோ கிடைக்கவில்லை. “அரசாங்கத்தில் மஇகாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நாங்கள் பார்க்கிறோம்.
இந்திய சமூகத்தைப் பாதுகாக்கும் ஒரு பெரிய கட்சியாக இருந்தும், எங்களை மதிக்கவில்லை” என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
தனது 25 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவம் மற்றும் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் இருந்தும், தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புவதாகத் தெரியவில்லை என்றும் டத்தோஸ்ரீ சரவணன் வருத்தம் தெரிவித்தார்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடியின் அண்மைய கருத்துக்களுக்கு மாறாக, 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் வேண்டாம்’, ‘பெரிக்காத்தான் நேஷனல் வேண்டாம்’ என்ற தேசிய முன்னணியின் நிலைப்பாடு இன்னும் தொடர்வதாக டத்தோஸ்ரீ சரவணன் உறுதியாகத் தெரிவித்தார்.
“16வது பொதுத் தேர்தலில் வேறு எந்தக் கூட்டணியுடனும் இணைந்து செயல்பட எங்கள் கூட்டணி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை நான் உறுதிப்படுத்த முடியும். தேசிய முன்னணி எதிர்வரும் தேர்தலில் ஒரு தனிப்பட்ட கூட்டணியாகவே இருக்கும்,” என்றும் டத்தோஸ்ரீ சரவணன் தெளிவுபடுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு அளிக்கும் ஆதரவு, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆணைப்படி எடுக்கப்பட்ட தற்காலிக முடிவு மட்டுமே என்றும் டத்தோஸ்ரீ சரவணன் சுட்டிக்காட்டினார்.
“ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாங்கள் விரும்பப்படாத கட்சியாகத் தோன்றுகிறது,” என்று கூறிய டத்தோஸ்ரீ சரவணன், மஇகாவுக்கு அமைச்சரவையிலோ அல்லது பிற அரசு நிறுவனங்களிலோ எந்தப் பங்கும் இல்லாததால், தாங்கள் ‘தேவையற்ற விருந்தாளிகள்’ போல் உணர்வதாகத் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கள், மெட்ரிகுலேஷன், அண்மையில் ஜம்ரி வினோத் வழக்குகள் போன்ற பிரச்சினைகளில் இந்திய சமூகத்திற்காக எந்த ஒரு தேசிய முன்னணி பிரதிநிதியும் குரல் கொடுக்காதது இந்திய சமூகத்தினரிடையே ‘சொந்த உணர்வு’ இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் டத்தோஸ்ரீ சலவணன் குற்றம் சாட்டினார்.
டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட துணைத் திருத்த ஆணை (titah addendum) குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த டத்தோஸ்ரீ சரவணன், அந்த ஆணை 500 நாட்களுக்கு மேலாக மறைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்றார்.
“யார் அதை அமைதிப்படுத்தச் சொன்னது, யார் அதை மறைத்தது? இந்த இரண்டு கேள்விகளையும் மலேசிய சமூகம் கேட்க வேண்டும்,” என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
அம்னோ, ஒரு காலத்தில் ‘கொள்ளையர்கள்’ என்று முத்திரை குத்திய பி.கே.ஆர்-உடன் இணைந்ததை டத்தோஸ்ரீ சரவணன் விமர்சித்தார்.
மஇகா தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்து மாநில மற்றும் மத்திய அளவிலான கூட்டங்களுக்குப் பிறகு ஒரு முடிவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மஇகா இனி ஏமாற்றப்படவோ அல்லது பாகுபடுத்தப்படவோ விரும்பவில்லை. எங்கள் நேர்மை எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்து வருகிறது,” என்று சரவணன் தனது நேர்காணலை நிறைவு செய்தார்.



