
சக்கர நாற்காலி மூலம் பக்தர்களை மேல்தள சன்னிதிக்கு அழைத்துச் சென்ற ப்ளூ டைகர் குழுவின் அர்ப்பணிப்பு
ஸ்கூடாய், ஆக.14-
ஸ்கூடாய் இம்பியான் மாஸ் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 56ஆம் ஆண்டு வருஷாந்திர தீமிதிதிருவிழா, பக்தி பூர்வமாகவும் ஆன்மிக மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்த புண்ணிய நாளில், ‘ஜொகூர் பாரு ப்ளூ டைகர்’ அன்பு உள்ளங்கள் குழு, சமூக சேவையின் உன்னதத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டது. குழுத் தலைவர் சரவணன் ரத்னசாமி, கடந்த 15 ஆண்டுகளாக இந்திய சமூகத்திற்கு தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, கடந்த 5 ஆண்டுகளாக ‘ஜொகூர் பாரு ப்ளூ டைகர்’ குழுவை முன்னின்று வழிநடத்தி வருகிறார்.
இந்நிகழ்வில், ஆலயத்திற்கு வந்த 600-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமையுடன் 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டன. இத்துணையளிப்பால் பல குடும்பங்கள் பயன்பெற்றன. சமூகத்தில் பசி நீக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், உடல் நலக் குறைபாடுகள் காரணமாக மேல்தளத்திலுள்ள சன்னிதிக்கு சென்று வழிபட முடியாத 10-க்கும் மேற்பட்ட பக்தர்களை, ‘ஜொகூர் பாரு ப்ளூ டைகர்’ தன்னார்வாலர்கள் வீல்செயர் மற்றும் கைதாங்கி மேல்தளத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒருவரின் ஆன்மிக விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள் எடுத்த முயற்சி, அனைவரின் மனங்களிலும் ஆழ்ந்த மதிப்பை ஏற்படுத்தியது.
‘ஜொகூர் பாரு ப்ளூ டைகர்’ குழுவின் தன்னலமற்ற பணிகள், பக்தர்களின் இதயங்களில் நன்றியும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியதோடு, சமூகத்தில் அன்பும் ஒற்றுமையும் பரவச் செய்தன. இத்தகைய சேவைகள், எதிர்கால சந்ததிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.



