
கோலாலம்பூர்,அக்.2- இஸ்ரேல் படையினரால் இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட குளோபல் சுமூத் ப்ளோட்டில்லா உதவி கப்பல் தொடர்பாக ம.இ.கா கடும் கவலையை வெளியிட்டுள்ளது. மனிதாபிமான சேவையாளர்கள் உடனடியாகவும் நிபந்தனையில்லாமலும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம் தலைமையிலான மலேசிய அரசாங்கம், தனது மதிப்புமிக்க தூதரக செல்வாக்கையும் சர்வதேச மேடைகளில் உள்ள முன்னணித் தலைமைத்துவத்தையும் பயன்படுத்தி, கைதான மனிதாபிமான செயற்பாட்டாளர்களின் விடுதலையை விரைவாக உறுதி செய்ய வேண்டும் என ம.இ.கா கேட்டுக்கொண்டுள்ளது.சர்வதேச கடற்பரப்பில் அமைதியான மனிதாபிமான பணி இடைமறியப்பட்ட சம்பவம், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதோடு காசா மக்களின் துயரத்தை குறைக்க உலகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாதிக்கிறது என ம.இ.கா கண்டித்துள்ளது. மலேசியா எப்போதும் நீதி, சமாதானம் மற்றும் மனிதாபிமான உதவிகளை உறுதியாக முன்னெடுத்து வரும் நாடு. எனவே, மலேசிய அரசு – விஸ்மா புத்த்ரா வாயிலாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்புக் கழகம் (OIC) போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தீவிரமாகச் செயல்பட்டு, கைதான செயற்பாட்டாளர்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய வேண்டும் எனவும் ம.இ.கா வலியுறுத்தியுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் தாராளக் கொள்கையுடன் ம.இ.கா முழுமையாக ஒற்றுமை தெரிவிக்கிறது. மனித உரிமைகள் காக்கப்படவும், நீதி நிலைபெறவும், மனிதாபிமான உதவிகள் தேவையானவர்களுக்கு சென்றடையவும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ம.இ.கா தன்னுடைய உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளது.



