
பத்தாங் பெர்ஜூந்தை ஸ்டார்த்மோர் தோட்டம் கல்லுக்குழி அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
கோல சிலாங்கூர், அக்.10- நாடு தழுவிய நிலை இந்து ஆலயங்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பத்தாங் பெர்ஜுந்தை சுங்கை டாரா ஸ்டார்த்மோர் தோட்டம் கல்லுக்குழி அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்திர நவராத்திரித் திருவிழா கடந்த 23.09.2025 செவ்வாய்க்கிழமை காலை ஆலயத் தலைவர் உயர்திரு இராம கணேசன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நவராத்திரி விழா 23.09.2025 செவ்வாய்க்கிழமை முதல் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை வரையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு நவசக்தி விநாயகப் பெருமானுக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளோடு நவராத்திரி விழா தொடங்கியது. நவராத்திரி விழா தொடங்கிய நாளில் மாலை திருவிழா கொடியேற்றமும் காப்பு கட்டுதலும் நடைபெற்று தொடர்ந்து கொலுமண்டபத்தில் அம்மனுக்கு திருவிழாவின் முதல் நாள் பூஜைகள் நடைபெற்று முடிந்த நிலையில் அன்றைய தினம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 24.09.2025 புதன்கிழமை முதல் 01.10.2025 புதன்கிழமை வரை தினசரி மாலை 7.00 மணிக்கு தொடங்கி நித்யபூஜை, துவஜஸ்தம்ப பூஜை, கொலுமண்டப பூஜை, திருவிழா உபயத்தினர் சங்கல்பம், தீபாராதனை உபசாரங்கள் மற்றும் அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் 2.10.2025 வியாழக்கிழமை விஜயதசமி அன்று மாலை அம்மன் மகிஷாசுரமர்த்தினியாக போர்க்கோலத்துடன் எழுந்தருளி ஆலய வளாகத்தில் “மகிஷாசுர வதம்” நிகழ்வு நடைபெற்று தொடர்ந்து அம்மனுக்கு பிராயச்சித்த மகாபிஷேகமும் மகாதீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், தாய்மார்கள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு மகிஷாசுர வதத்தை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து 3.10.2025 வெள்ளிக்கிழமை காலை பெர்ஜுந்தை தோட்டம் அருள்மிகு நாகமுத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்தவந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நவராத்திரி விழாவில் அன்று மாலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நாதஸ்வர மேளதாளம், உறுமி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், வாணவேடிக்கைகளோடு அம்மன் திருவீதி உலா வெகு கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து 4.10.2025 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி அம்மனுக்கு வசந்தமண்டப பூஜை, அம்மன் ஆலயவலம், திருப்பொன்னூஞ்சல் ஆகியவையும் சிறப்பாக நடைபெற்றது. 5.10.2025 ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ந்து பைரவர் பூஜையோடு நவராத்திரி திருவிழா இனிதே நிறைவு பெற்றது. இந்த நவராத்திரி விழாவில் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சோமநாத சிவாசார்யார் திருவிழா பூஜை கிரியைகளை முன்னின்று நடத்தி வைத்தார். இத்திருவிழா நிகழ்ச்சிகள் யாவும் ஆலயத் தலைவர் உயர்திரு இராம கணேசன் மேற்பார்வையில் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆதரவுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



