
ஏபெக் (APEC) வணிக ஆலோசனைச் சபையின் ஆண்டு அறிக்கை சமர்ப்பிப்பு மலேசியாவின் நடுநிலையான வர்த்தக நிலைப்பாடு உறுதி!
கியோங்ஜு, அக்.31 – ஏபெக் பொருளாதாரத் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறும் வேளையில், ஏபெக் வணிக ஆலோசனைச் சபையின் (APEC Business Advisory Council – ABAC) 2025-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை ABAC மலேசியத் தலைவர் டத்தோ ரூபன் எமிர் ஞானலிங்கம் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கை, ஆசியப் பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதாரம் முழுவதும் உள்ள வணிக சமூகத்தின் கருத்துக்களையும் அபிலாஷைகளையும் தொகுத்து, ஏபெக் பொருளாதாரத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கிறது. இதன் நோக்கம் ஒரே சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவது, வணிகப் போட்டித்தன்மையை அதிகரிப்பது, அத்துடன் செழிப்பின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்வதாகும். சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த வர்த்தகத்திற்கான (Open Trade) இந்த அறிக்கையின் அழைப்பு, மலேசியாவின் நடுநிலையான மற்றும் நடைமுறைக்கு உகந்த கொள்கையுடன் ஒத்துப்போகிறது. உலகளாவிய வர்த்தகம் பிளவுபட்டு, நிச்சயமற்றதாக இருக்கும் இச்சூழலில், மலேசியா பின்பற்றும் சமச்சீர் அணுகுமுறை, நாட்டை ஒரு பாலமாக நிலைநிறுத்துகிறது. அதாவது, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவைப் பேணுவதுடன், ASEAN மற்றும் APEC போன்ற பிராந்திய ஒத்துழைப்புத் தளங்கள் மூலம் பல்வேறு பொருளாதாரத் தொகுதிகளை இணைக்கும் நாடாக மலேசியா உள்ளது. கியோங்ஜுவில் நடைபெறும் ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் கொள்கைப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியமான உள்ளீடாக இந்த அறிக்கையை மலேசியா முழு கவனத்துடன் ஆய்வு செய்கிறது. குறிப்பாக, மக்களின் நலன், பொருளாதார நீதி மற்றும் சமநிலையான பிராந்திய மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நிரலை மலேசியா இந்தக் கூட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.




