Malaysia

லெபோ அம்பாங் மற்றும் மஸ்ஜிட் இந்தியாவில் வீட்டு வேலைக்கு கொண்டு வரப்படும் தமிழ்நாட்டுப் பெண்களை கொண்டு வந்து விபச்சாரமா? தலைவி உட்பட 15 பேர் விசாரணைக்காக கைது! மலேசிய உலகளாவிய மனிதப் பாதுகாப்பு சமூகநலச் சங்கத் தலைவர் Dr. T.கமலநாதன் காவல்துறையில் புகார்

தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம் – கோலாலம்பூர்,நவ.18- மஸ்ஜிட் இந்தியாவில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்ததாக நம்பப்படும் ஒரு விபச்சார மற்றும் ஆள் கடத்தல் கும்பல் போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசிய உலகளாவிய மனிதப் பாதுகாப்பு நலச் சங்கத்தின் (Pertubuhan Kebajikan Global Keselamatan Manusia Malaysia) தலைவர் டாக்டர் டி. கமலநாதன் அவர்கள் வழங்கிய ஆதாரங்கள் வழி காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் அக்கும்பல் முறியடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணை தலைவியாக கொண்ட இந்த சட்டவிரோத விபச்சார கும்பல் தமிழ்நாட்டில் இருந்து பெண்களை வீட்டு வேலைக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இடைத்தரகர் மூலம் மலேசியாவிற்கு அழைத்து வந்து அவர்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபட வைத்துள்ளதாக Dr கமலநாதன் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவம் லெபோ அம்பாங், மஸ்ஜிட் இந்தியா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த கும்பல் இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக விபச்சார நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கமலநாதன் கூறியது திடுக்கிட வைக்தது. இந்த விபச்சார சம்பவம் தொடர்பில் இக்கும்பலிடம் மாட்டிக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களிடமிருந்து வந்த அவசர அழைப்பை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி Dr கமலநாதன் டாங்வாங்கியில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக கூறினார். இந்த இரண்டு பெண்களும் வீட்டு வேலைக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் அதற்குப் பதிலாக ஜாலான் அம்பாங் பகுதியில் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கமலநாதன் சொன்னார். இந்த ஹோட்டலில் அப்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அப்பெண்கள் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறல் போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட நபர்கள் மற்றும் விபச்சாரத்திற்கு தலைவியாக செயல்பட்ட ஒரு புரோக்கர் உட்படப் பலரால் தாங்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அத்துமீறப்பட்டதாகவும் இதே இடத்தில் மேலும் எட்டு இந்தியப் பெண்கள் இருந்ததாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பில் கமலநாதன் புக்கிட் அமான் மனிதக் கடத்தல் பிரிவின் DSP கோவுக்கு தகவல் தெரிவித்த பின்னர், புக்கிட் அமான் D3 Atipsom JSJ பிரிவிலிருந்து அதிகாரிகள் அவரைத் தொடர்புகொண்டனர். புக்கிட் அமான் உதவியுடன் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிய காணொலிகள், படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் உட்படப் பல ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், டாக்டர் கமலநாதன் ஜாலான் அம்பாங்கில் உள்ள சம்பந்தப்பட்ட ஹோட்டல் பகுதிக்குச் சென்று, இரவு 9 மணி முதல் 12.30 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் மறைந்திருந்து ஆதாரங்களைச் சேகரித்தார். இந்தச் சோதனை நடவடிக்கைக்கு மத்தியில் தலைவியாக செயல்பட்ட பெண்மணி தனது விபச்சார நடவடிக்கைகளை முடித்த பின்னர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா மற்றும் லெபோ அம்பாங் பகுதிகளிலிருந்து மேலும் பல பெண்களை ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். இந்த ஆதாரங்கள் WhatsApp மூலம் புக்கிட் அமான் அதிகாரிகளுக்கு அனுப்பிய பின்னர், அதிகாலை 1.30 மணியளவில் போலீஸ்காரர்கள் அதிரடிச் சோதனையை நடத்தினர். இந்த அதிரடி நடவடிக்கையில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இக்கும்பலைச் சேர்ந்த 4 இந்திய ஆடவர்கள் மற்றும் 11 இந்தியப் பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கியமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாலான் மஸ்ஜித் இந்தியா மற்றும் லெபோ அம்பாங் பகுதிகளில் பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த இந்தியாவைச் சேர்ந்த ஒரு புரோக்கரான பெண்மணி ஒருவரும் பிடிபட்டார். இந்த சம்பவம் குறித்து டாங் வாங்கி காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு தற்போது டாங் வாங்கி IPD-யின் ASP அஸ்வான் அவர்களால் மனிதக் கடத்தல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக கமலநாதன் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் இந்தியத் தூதரகம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்த கமலநாதன் 25 ஆண்டுகளாக நீடித்த இந்தக் குற்றம், மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காகத் தாம் ஏமாற்றம் அடைவதாகவும் கமலநாதன் கூறினார். இந்தச் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவாறு, புரோக்கர் பெண்ணை மலேசியாவுக்குள் நுழையத் தடை விதித்து, இந்தியச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு மலேசியக் காவல்துறைத் தலைவர் (IGP) மற்றும் இந்திய அரசாங்கத்தையும் டாக்டர் கமலநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button