கோலாலம்பூர், டிச.23- அரச கட்டளைகள் மற்றும் நீதித்துறை நடைமுறைகள் உள்ளிட்ட அரசியலமைப்பு அமைப்புகளை DAP தலைவர்கள் இழிவுபடுத்துவதும் கேலி செய்வதும் நாட்டின் ஜனநாயக முறைக்கு மிகவும் கவலையளிக்கும் மற்றும் ஆபத்தான செயலாகும் என்று மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சாடியுள்ளார். ஒருவர் கைது செய்யப்படும் போதோ அல்லது தண்டிக்கப்படும் போதோ, குறிப்பாகத் ‘தனிப்பட்ட பகையுணர்வு’ காரணமாகச் சிலர் ஆரவாரம் செய்வது, நீதித்துறை முடிவுகளை ஒரு அரசியல் போட்டு மாற்றுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விமர்சித்தார். அரச கட்டளையைச் சிறுமைப்படுத்தும் செயல் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான ‘அரச ஆணை’ (Royal Addendum) மனு நிராகரிக்கப்பட்டதை ஒரு அரசியல் வெற்றியாகக் கொண்டாடுவதன் மூலம், DAP தெரிந்தே அல்லது தெரியாமலோ ஒரு மாமன்னரின் கட்டளையைச் சிறுமைப்படுத்தியுள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். “நீதிமன்ற விவகாரங்கள் என்பது தனிநபர் ஆளுமைக்கான போட்டி அல்ல. மாறாக, அது ஒரு அரச கட்டளையின் சட்டரீதியான தாக்கங்களை உள்ளடக்கியது. அதை மிகுந்த பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும். ஆனால், DAP தலைவர்களின் எதிர்வினை, நீதிமன்றத் தீர்ப்பு மாமன்னரின் கட்டளையை ‘நிராகரித்துவிட்டது’ அல்லது ‘மிஞ்சிவிட்டது’ என்பது போல உள்ளது,” என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார். டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகச் சிறிதும் அனுதாபம் காட்டாத தரப்பினரை, சூழலை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே கண்டித்திருந்ததை தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். மாமன்னர் (YDPA) கூட்டரசு அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்படுகிறார். எனவே, அரச நிறுவனங்கள் மீதான மரியாதை என்பது விசுவாசத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டுமே தவிர, கேலி, கிண்டல் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கோபத்தின் மூலம் அல்ல என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். இனம், மதம் மற்றும் அரச நிறுவனங்கள் (3R) தொடர்பான உணர்திறன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் DAP, நீதிமன்ற முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வரும்போது எல்லை மீறி செயல்படுவது முரணாக உள்ளதென தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சாடினார். “முதிர்ந்த ஜனநாயகம் என்பது நாட்டின் நிறுவனங்கள் மீது கௌரவம் மற்றும் மரியாதையை கோருகிறது. எந்தவொரு கைது நடவடிக்கையோ அல்லது சட்ட மனுவின் தோல்வியோ பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கான ஆதாரம் அல்ல. நீதி கேலிக்கூத்தாக மாற்றப்படும்போது, நாட்டின் கௌரவம் பறிபோகும்; ஜனநாயகம் ஒரு நாடகமாக மாறும் அபாயம் உள்ளது,” என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எச்சரித்தார்.



