
மனிதவள அமைச்சின் கீழ் மித்ரா: இந்திய சமூகத்தின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும்! – டத்தோஶ்ரீ ரமணன் உறுதி
கோலாலம்பூர், பிப்.5- இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), மனிதவள அமைச்சின் ‘கெசுமா’ (KESUMA) கீழ் மாற்றப்பட்டாலும், இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதன் அடிப்படை நோக்கம் மற்றும் அதிகாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார். இந்த மாற்றமானது இந்திய சமூகத்தின் நல்வாழ்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை இன்னும் ஒருங்கிணைந்த முறையிலும் அதிக பயன் தரும் வகையிலும் செயல்படுத்த உதவும் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார். இது ‘மடானி’ (MADANI) அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்துகிறது.”இது தொடர்பாக, மிற்றாவை மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வருவது அதன் கொள்கைகளைப் பாதிக்காது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் கருதுகிறார். மாறாக, இந்திய சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டுடன் இணைப்பதன் மூலம் மித்ராவின் செயல்பாடுகளை இது இன்னும் வலிமையாக்கும்,” என்று டத்தோஸ்ரீ ரமணன் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின் போது அவ்வாறு தெரிவித்தார். மனிதவள அமைச்சின் தற்போதைய வேலைப்பளு காரணமாக, மித்ராவை அங்கு மாற்றுவது இந்திய சமூகத்தின் நலனைப் பாதிக்காது என்பதற்கு அரசாங்கம் தரும் உத்தரவாதம் என்ன என்று சபாக் பெர்னாம் (PN) நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சாலான் எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ ரமணன் இவ்வாறு பதிலளித்தார். மித்ரா திட்டங்களின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பை இன்னும் முறையான மற்றும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதை இந்த மாற்றம் உறுதி செய்யும் என்று டத்தோஶ்ரீ ரமணன் சொன்னார். இது மனியவள அமைச்சின் கீழ் உள்ள வேலைவாய்ப்புத் திறன், திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற கொள்கைகளோடு ஒத்துப்போவதாகவும் டத்தோஸ்ரீ ரமணன் விளக்கமளித்தார்.



