
“தாரா… தாரா… எங்கே இருக்கிறாய்?” என்று பதற்றத்துடன் நான் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டிருந்தேன். வீதிவிளக்குகளின் மங்கலான ஒளியில் நான் தாமான் தெருமுனையிலிருந்து மறுமுனை வரை பதற்றத்துடன் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கமாக மாலை நேரங்களில் நண்பர்களுடன் வெளியே சென்று விளையாடிவிட்டு இருட்டுவதற்குள் வீட்டிற்கு வந்துவிடுவாள். ஆனால் அன்று மட்டும் அவளைக் காணவில்லை. நேரம் செல்லச் செல்ல என் பயமும் அதிகரித்தது. அம்மா எப்போதும், “காவியா, தாராவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். அவளை தனியாக வெளியே விடாதே,” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அன்று மட்டும் என் கவனக்குறைவால் அவள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். இப்போது அவளை எங்கும் காணவில்லை. தாராவுக்கு ஏதாவது நடந்திருந்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்வேன்? அந்த எண்ணங்களே என் மனதை மேலும் கலங்கச் செய்தன. தாரா என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவள். என் நேரத்தின் பெரும்பகுதியை அவளுடனேயே கழித்தேன். பள்ளி நாட்களிலிருந்து இன்றுவரை, என் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் என்னுடன் இருந்த ஒரே உயிர் அவள்தான். நாங்கள் அடிக்கடி செல்லும் இடங்கள் அனைத்திலும் தேடினேன். அருகிலிருந்த குடியிருப்புப் பூங்கா, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிறுத்தம், மாலையில் விறுவிறுப்பாக இயங்கும் ரொட்டிச்சானாய் கடை என எங்கும் அலைந்தேன். “அண்ணா, தாராவைப் பார்த்தீர்களா?” என்று ரொட்டிக்கடைக்காரரிடம் கேட்டேன். “இல்லைம்மா. இன்று பார்க்கவே இல்லை.” ஒவ்வொரு பதிலும் என் மனதை மேலும் பதற்றப்படுத்தியது. நேரம் நகர்ந்துகொண்டே இருந்தது. என் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடின. அவளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? என்ற கேள்விகள் என்னை அச்சத்தில் ஆழ்த்தின. என் கால்கள் சோர்ந்து, கைகள் நடுங்கத் தொடங்கிய அந்த இக்கட்டான தருணத்தில் என் கைப்பேசி ஒலித்தது. “ஹலோ?” “காவியா தானா?” “ஆமாம், சொல்லுங்க.” “ஜாலான் செம்பாக்கா அருகே ஒரு விபத்து நடந்திருக்கிறது. நீ தேடிக்கொண்டிருக்கும் தாராவாக இருக்குமோ என்று நினைத்தேன்…” அதற்கு மேல் என்னால் கேட்க முடியவில்லை. என் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. கண்களில் கண்ணீர் முட்ட, சுற்றியிருந்த இருட்டையும் பொருட்படுத்தாமல் உடனே வீட்டை விட்டு வெளியே ஓடினேன். சில நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தேன். அங்கு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. காவல்துறையினரும் இருந்தனர். கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறியபோது என் கைகள் நடுங்கின. “தயவுசெய்து வழி விடுங்கள்…” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றேன். என் கண்கள் கண்ட காட்சி என் ஒட்டுமொத்த நரம்புகளையும் ஒரு கணம் செயலிழக்கச் செய்தது. அங்கே, தார்ச் சாலையின் நடுவே ஒரு இளம் பெண் தன் கால்களிலும் கைகளிலும் பலத்த இரத்தக் காயங்களுடன், வலியால் முனகியபடி தரையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு மிக அருகாமையில், அவள் ஓட்டி வந்த கைப்பிடி உடைந்த மிதிவண்டி ஒன்று சுக்குநூறாக நொறுங்கி, உருக்குலைந்த நிலையில் வீழ்ந்து கிடந்தது. சுற்றியிருந்த பொதுமக்களில் சிலர் அவளுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தனர்; இன்னும் சிலர் அவளது காயங்களில் இருந்து வழிந்த குருதியைத் துடைக்க முதலுதவிச் செய்து கொண்டிருந்தனர். அங்கிருந்த காவல்துறையினர் விபத்து எப்படி நடந்தது என்று அங்கிருந்தவர்களிடம் தீவிரமாக விசாரித்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு திரண்டிருந்த அந்தப் பெருங்கூட்டமும், அவசர போலீஸ் வாகனத்தின் நீல நிற விளக்குகளும் உண்மையில் அந்த இளம் பெண்ணைச் சூழ்ந்துதான் நின்றுகொண்டிருந்தன. அந்தப் பெண்ணின் முகத்தை உற்று நோக்கிய அந்தப் நொடிக் பொழுதில், என் நெஞ்சுக்குள் இருந்த பாரம் சட்டென்று குறைவது போல இருந்தது. என் இதயம் ஒரு நிமிடம் தன் அதிவேகத் துடிப்பை நிறுத்திவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆம், அங்கே காயங்களுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண் தாரா இல்லை! அவள் முற்றிலும் எனக்கு முன்பின் தெரியாத ஒரு புதிய முகம். ‘அப்படியென்றால் என் தாராவுக்கு விபத்து எதுவும் நடக்கவில்லையா? அவள் பத்திரமாகத்தான் இருக்கிறாளா? என்னை இந்த இடத்திற்கு வரச் சொன்னவர் தவறாகப் புரிந்து கொண்டாரா?’ என்ற ஆயிரம் கேள்விகள் என் மூளைக்குள் மின்னல் வேகத்தில் ஓடின. அந்த நிம்மதி சில விநாடிகள் கூட நீடிக்கவில்லை. ‘அப்படியென்றால் தாரா எங்கே இருப்பாள்?’ என்ற தீராத குழப்பத்துடனும், ஒரு புதிய பயத்துடனும் என் கண்கள் அந்த விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் வெறித்தனமாகத் தேடத் தொடங்கின. காவல்துறையின் காரில் இருந்து வெளிவந்த அந்த மங்கலான நீல நிற ஒளி, சாலையின் மறுபக்கத்தில் இருந்த இருண்ட பகுதிக்கு மேல் பட்டுப் பிரதிபலித்தது. அப்போதுதான் அந்தக் கூட்டத்திற்குச் சற்றுத் தள்ளி, சாலையோரத்தின் ஓரத்தில் அமைந்திருந்த காய்ந்த புல்வெளியின் அருகே என் பார்வை தற்செயலாகச் சென்றது. அங்கே, அடர்ந்த இருளுக்குள், எந்தவித அசைவும் இன்றி, உயிரற்ற நிலையில் ஒரு சிறிய உடல் தனியாகக் கைவிடப்பட்டுக் கிடந்தது. அதைப் பார்த்த அந்த அடுத்த விநாடியே, என் தலைக்கு மேல் இருந்த ஒட்டுமொத்த ஆகாயமும் இடிந்து என் மீது விழுந்தது போல் இருந்தது. என் கால்கள் இரண்டும் தன் பலத்தை இழந்து தரை நோக்கிச் சரிந்தன. சுற்றியிருந்த மனிதர்களின் குரல்களும், வாகனங்களின் சத்தமும் என் காதுகளுக்குக் கேட்காமல் முற்றிலும் உறைந்து போயின. என் ஒட்டுமொத்த உலகமே அந்த ஒரே இடத்தில் இருண்டு சாம்பலாவது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. “தாரா…” என்று என் தொண்டைக்குள் இருந்து எழுந்த அந்த அலறல் குரல், தானாகவே உடைந்து, கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருங்கதறலாக அந்த நள்ளிரவுச் சாலையில் வெடித்துச் சிதறியது. நான் தடுமாறும் கால்களோடு ஓடிச் சென்று, சாலையோரம் அசைவற்றுத் தூங்கிக் கொண்டிருந்த அவளது உடலின் அருகே மண்டியிட்டு அமர்ந்தேன். சில மணி நேரங்களுக்கு முன்புவரை என்னைப் பார்த்து பாசத்தோடு துள்ளிக்குதித்த என் தாரா, இப்போது நிரந்தரமாகத் தன் மூச்சை நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது உடலை என் கைகளில் அள்ளியெடுத்த போது, என் கண்கள் கண்ணீர் தடாகமாக மாறி அவள் மீது சொட்டின. “தாரா…” என் குரல் தானாகவே உடைந்து வெளிவந்தது. அவள் அசையாமல் கிடந்தாள். சில நிமிடங்களுக்கு முன்புவரை உயிரோடு இருந்தவள், இப்போது அமைதியாக இருந்தாள். என் கண்களில் கண்ணீர் வழிந்தது. “வேகமாக வந்த கார் ஒன்று அந்தப் பெண்ணின் மிதிவண்டியில் மோதுவதைத் தவிர்க்க முயன்று இடப்பக்கமாகத் திருப்பியிருக்கிறது. அப்போது, எதிர்பாராத விதமாகச் சாலையோரம் நின்றுகொண்டிருந்த இந்த அப்பாவி ஜீவன் மீது பலமாக மோதிவிட்டு, அந்த நெரிசலில் காரை நிறுத்தாமல் அப்படியே அதிவேகமாகப் போய்விட்டது,” என்று அருகில் நின்ற ஒருவர் மிகுந்த அனுதாபத்தோடு கூட்டத்தில் இருந்த மற்றவர்களிடம் விவரித்துக் கூறினார். ஆனால் என் காதுகளில் அந்த எந்த வார்த்தைகளும் உள்ளே செல்லவில்லை. என் உலகம் அவளோடு முடிந்துவிட்டது போல் நான் உறைந்து அமர்ந்திருந்தேன். அவளது கழுத்தில் இருந்த நீல நிறப் பட்டை இன்னும் அப்படியே இருந்தது. கடந்த ஆண்டு அவளது பிறந்தநாளுக்காக நான் ஆசையாகச் சேமித்த பணத்தில் வாங்கிக் கொடுத்த பட்டை அது. அந்த பட்டையைப் பார்த்தவுடன் என் நினைவுகள் அனைத்தும் என்னைச் சுற்றி வந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மழைக்கால அந்திப் பொழுது. வீட்டிற்கு அருகிலிருந்த பெரிய காவாயின் ஓரத்தில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு சிறிய உயிரை நான் பார்த்தேன். பசியாலும் பயத்தாலும் அது சோர்ந்து போயிருந்தது. அதை வீட்டிற்கு கொண்டு வந்தபோது அம்மா முதலில் தயங்கினார். “இதை எப்படிக் கவனிக்கப் போகிறாய் காவியா? நமக்கு இதெல்லாம் சரிவருமா? வேண்டாம் கொண்டு போய் விட்டுவிடு,” என்றார் அம்மா. “நானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் அம்மா. தயவுசெய்து இதைத் துரத்திவிடாதீர்கள்,” என்று அழுது அடம் பிடித்து அதை வீட்டிற்குள் சேர்த்தேன். அன்று முதல் அவள் எங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராக மாறிவிட்டாள். அவளுக்கு நான் வைத்த பெயர்தான் தாரா. எங்குச் சென்றாலும் என்னைப் பின்தொடர்வாள். நான் சோகமாக இருந்தால் என் அருகில் அமைதியாக அமர்ந்துகொண்டு தன் தலையால் என் கையை முட்டுவாள். நான் மகிழ்ச்சியாக இருந்தால், அவளும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாள். வார்த்தைகளால் பேச முடியாவிட்டாலும், என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தனித்திறன் அவளுக்கு இருந்தது. அவளை நினைத்துக்கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த ஒருவர் மெதுவாகச் சொன்னார்: “ஒரு நாய்க்காக இவ்வளவு அழுகிறாளே…” அந்த வார்த்தை என் காதில் தெளிவாக விழுந்தது. பலர் அவளை ஒரு செல்லப்பிராணியாக மட்டுமே பார்த்தார்கள். ஆனால் நான் அவளை அப்படிப் பார்க்கவில்லை. எனக்கு உடன்பிறந்த சகோதரி யாரும் இல்லை. என் சிறுவயதின் தனிமையைப் போக்கியவள் தாரா. நான் வீட்டிற்கு வரும் வரை வாசலிலேயே காத்திருந்தவள் தாரா. என் கண்ணீரைப் பார்த்தால் அருகில் வந்து என் கைகளை நக்கியவள் தாரா. அடுத்த நாள், வீட்டின் பின்புறம் இருந்த ரம்புத்தான் மரத்தடியில் தாராவை அடக்கம் செய்தோம். மண்ணைத் தூவும்போது என் கைகள் நடுங்கின. நெஞ்சு பாரமாக இருந்தது. “வா காவியா, உள்ளே போகலாம்,” என்று அம்மா மெதுவாக அழைத்தார். “இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கட்டும்மா.” அம்மா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. மாலை சூரியன் மறையத் தொடங்கியது. ரம்புத்தான் மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்திருந்தேன். தாரா இனி திரும்பி வரமாட்டாள் என்பதை என் மனம் மெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. ஆனால் அவளுடைய நினைவுகள் என்னை விட்டுப் போகப்போவதில்லை. இன்றும் நான் வீட்டிற்கு வரும்போது, கதவைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு கணம் அவளுடைய வரவேற்பைத் தேடுகிறேன். வாலாட்டி ஓடிவரும் அவளது பிம்பம் என் கண்ணில் தோன்றி மறைகிறது. பின்னர் அவள் இனி இல்லையென்பது நினைவுக்கு வருகிறது. அந்த வலி இன்னும் குறையவில்லை.



