
அந்தப் பெரிய பங்களா வீட்டின் வாசலில் காலைச் சூரியனின் இளம் கதிர்கள் விழுந்து கொண்டிருந்தன. வழக்கம்போல் அன்றும் அமைதியாக விடிந்தது. அந்த பிரம்மாண்டமான வீட்டின் பின் பக்கத் தோட்டத்தில், பச்சைப்புல் வெளிகளுக்கு நடுவே முத்துவும் மலரும் அமர்ந்திருந்தனர். முத்துவும் மலரும் அந்த வீட்டின் மூத்த தம்பதியினர். வயது முதிர்வின் காரணமாக இருவருக்குமே இப்போது உடம்பில் பழைய தெம்பு இல்லை. முத்துவின் கண்கள் சற்று மங்கியிருந்தன; மலரின் கால்களில் லேசான நடுக்கம் இருந்தது. இருந்தாலும், ஒருவருக்கொருவர் துணையாக, அந்தத் தோட்டத்தின் குளுமையில் அமர்ந்து காலையைக் கழிப்பதே அவர்களின் தினசரி வாடிக்கையாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் எல்லாமே நித்யாவும் சாராவும் தான். அந்த வீட்டின் இரு தூண்களாக விளங்கும் அந்தப் பெண்கள், முத்துவுக்கும் மலருக்கும் இரு மகள்களைப் போன்றவர்கள். அவர்கள் காட்டும் அன்பும் பாசமும் தான், இந்த வயதான காலத்தில் முத்துவுக்கும் மலருக்கும் வாழ்வின் மீதான பிடிப்பைத் தந்து கொண்டிருந்தது. “முத்து, இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே வெயில் வந்துடுச்சு போல…” என்று மலர் முத்துவின் பக்கம் திரும்பி லேசாக முனகினார் . முத்து தன் தலையை ஆட்டி, அவளது முகம் நோக்கி ஆமாம் என்று பதில் அளித்தார். இருவருக்குள்ளும் வார்த்தைகள் தேவையாக இருக்கவில்லை; அவர்களின் மௌனமே எல்லாவற்றையும் பேசிக் கொண்டது. தோட்டத்து நாற்காலியில் அமர்ந்தபடி முத்து தன் இளமைக் காலத்தை நினைத்துப் பார்த்தார் . ஒரு காலத்தில் இந்த வீட்டின் அசைக்க முடியாத தூணாக இருந்தவர்தான் முத்து. நித்யாவும் சாராவும் பள்ளிக்குச் சென்று வரும் போதெல்லாம், அவர்களுக்காக காத்துக் கிடந்து, அவர்கள் வந்ததும் அளவற்ற பாசத்தில் அவர்களை பார்த்துகொள்வார். சாராவும் நித்யாவும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்கள், சோகங்கள் என எல்லாவற்றையும் இவர்களிடம்தான் பகிர்ந்து கொள்வார்கள். மலரும் அப்படித்தான். நித்யாவுக்குக் காய்ச்சல் என்றால், அவள் படுக்கையை விட்டு நகரவே மாட்டாள். அவளது அருகிலேயே அமர்ந்து அவளைப் கவனித்துக் கொண்டே கிடப்பார். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. வயது முதிர்வு இருவரையும் பலவீனமாக்கியிருந்தது. “முன்னாடி மாதிரி இப்போ ஓடி ஆடி வேலை செய்ய முடியலையே…” என்ற கவலை முத்துவின் மனதிற்குள் எப்போதும் இருக்கும். தன் உடலின் தளர்ச்சியை நினைத்து அவர் அவ்வப்போது சோர்ந்து போவார். ஆனாலும், தினமும் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு, மதியம் வீட்டிற்குத் திரும்பும் நித்யாவையும் சாராவும் பார்க்கும் போது அந்த கவலைகள் எல்லாம் பறந்து போய்விடும். இரவு நேரத்தில் அவர்கள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து நேரத்தைக் கழிக்கும் அந்த சில மணி நேரங்கள் தான் அவர்களின் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள். அன்றும் அப்படித்தான், காலை உணவை முடித்துவிட்டு நித்யாவும் சாராவும் தங்களின் அலுவலக வேலைகளுக்காகக் கிளம்பினர். “பத்திரமா இருங்க… மதியம் சீக்கிரம் வந்திடுறோம்” என்று இருவரிடமும் சொல்லிவிட்டு அவர்கள் புறப்பட்டனர். அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே அந்தப் பெரிய பங்களாவில் ஒரு நிசப்தம் குடியேறியது. முத்துவும் மலரும் நித்யாவின் அறையின் வாசலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று, வீட்டின் பின்பக்கக் கதவு லேசாகத் திறக்கப்படும் சத்தம் கேட்டது. காற்றின் சத்தமாக இருக்காது என்பதை முத்துவின் உள்ளுணர்வு சொல்லியது. மெதுவாக எழுந்தார் மூத்து, அவரது, கால்கள் தள்ளாடினாலும், மெதுவான நடையுடன் சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தார். நித்யாவின் அறைக்குள் யாரோ ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது. அவன் அந்த வீட்டின் ஆள் இல்லை; அடையாளம் தெரியாத ஒரு அந்நியன். அவன் நித்யாவின் அலமாரியை உடைத்து, அதிலிருந்த பணத்தையும் தங்க நகைகளையும் அள்ளித் தான் கொண்டு வந்திருந்த பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான். வந்திருப்பது திருடன் என்பதை முத்து நொடியில் உணர்ந்தார். அவரது ரத்தம் கொதித்தது. “என் மகள்களின் உழைப்பைத் திருட உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று அவரது உள்ளம் கர்ஜித்தது. உடனே அவனைத் தடுக்க முன்னோக்கிப் ஓடினார். சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைக்க வேண்டும் என்று நினைத்து, தன் முழு பலத்தையும் திரட்டி உரக்கக் கத்தினார் . திருடனை நோக்கித் தன் ஆக்ரோஷத்தைக் காட்டினார். ஆனால், அவரது முதுமை அவருக்குத் துரோகம் இழைத்தது. அவரால் முன்போல வேகமாகப் எந்த செயலையும் செய்ய முடியவில்லை. திருடன் முத்துவைப் பார்த்ததும் முதலில் திடுக்கிட்டான். ஆனால், அவர் ஒரு வயதான முதியவர் என்பதால் தனக்கு பெரிய ஆபத்து இல்லை என்பதைப் புரிந்து கொண்டான். அவன் முத்துவை விடப் பலசாலியாக இருந்தான். ஆக்ரோஷத்தோடு தன்னை தாக்க வந்த முத்துவின் கழுத்தைப் பலமாகப் பற்றினான் அந்தத் திருடன். முத்துவின் கழுத்தை அவனது கைகளால் கொடூரமாக இறுக்கப்பட்ட்து. முத்துவுக்கு மூச்சு முட்டியது. நாக்கு வெளியே தள்ளியது. ஆனாலும் அவன் பிடியை விடாமல் திருடனின் கைகளைப் பிடித்துத் தடுக்க முயன்றார். ஆத்திரமடைந்த திருடன், முத்துவின் வயிற்றில் பலமுறை பலமாக உதைத்தான். சுவற்றில் முட்டி முத்து கீழே விழுந்தார் . அறையின் வாசலில் நின்றிருந்த மலர் இதைப் பார்த்து நிலைகுலைந்து போனார். அவருக்கு உடல் நடுங்கியது. அவரது தொண்டையிலிருந்து சத்தம் வர மறுத்தது. லேசாக அழுதபடியே முத்துவை உதைக்காதே என்று திருடனின் காலைப் பற்றப் போனார். ஆனால், அந்தப் பாவி மலரையும் தூக்கி ஒரு பக்கமாக வீசினான். வயது முதிர்ந்த மலரால் அதற்கு மேல் எழுந்து வர முடியவில்லை. திருடன் தன் வேலையை முடித்துக் கொண்டு, பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான். அறையின் நடுவே முத்து பலத்த ரத்தக்காயங்களுடன், நகர முடியாமல் விழுந்து கிடந்தார். அவரது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மலர் மெதுவாகத் தத்தித் தத்தி நடந்து முத்துவின் அருகில் வந்தார். அவரது காயங்களைத் தன் கைகளால் துடைத்து ஆறுதல் கூறினார். ஆனால், முத்துவின் உடல் குளிர்ந்து கொண்டே போவதை மலரால் உணர முடிந்தது. முத்துவின் கண்கள் மெதுவாக மூடின. மலர் அவரது முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்து, கண்ணீருடன் அவரை அணைத்து கொண்டார் . முத்து தன் இறுதி மூச்சை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரது நினைவலைகளில் நித்யாவும் சாராவும் வந்து போயினர். “செல்லங்களா… உங்களையும் இந்த வீட்டையும் என்னால காப்பாத்த முடியாம போயிடுச்சே… ஒரு திருடனைக் கூட எதிர்க்க முடியாத அளவுக்கு இந்த உடம்பு கிழடாயிடுச்சே…” என்ற குற்ற உணர்ச்சியும் கவலையும் அவரது இறுதி நிமிடங்களை உலுக்கியது. அந்த வேதனையுடனேயே முத்துவின் உயிர் அந்த அறையிலேயே பிரிந்தது. மதியம் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்த நித்யாவும் சாராவும் அதிர்ச்சியில் உறைந்தனர். வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அலமாரி திறக்கப்பட்டிருந்தது. பதற்றத்துடன் நித்யாவின் அறைக்கு ஓடியவர்கள், அங்கே கண்ட காட்சி அவர்களின் இதயத்தை நொறுக்கியது. முத்து ரத்த வெள்ளத்தில் அசையாமல் கிடந்தார் . அவரது உடலைக் கட்டிக்கொண்டு மலர் அழுதுகொண்டிருந்தார் . “முத்து… முத்து… என்னாச்சு உங்களுக்கு?” என்று அலறிக்கொண்டே நித்யா அவரது உடலைத் தூக்கினாள். சாரா உடனே மருத்துவ உதவிக்குத் தகவல் சொல்லிவிட்டு, முத்துவை அள்ளி அணைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள். ஆனால், மருத்துவர்கள் கையை விரித்துவிட்டனர். “அவர் ஏற்கனவே இறந்துட்டார்… ரொம்ப பலமா தாக்கியிருக்காங்க” என்ற வார்த்தைகள் நித்யா மற்றும் சாராவின் காதுகளில் இடியாக விழுந்தன. வீட்டிற்கு முத்துவின் உடலோடு திரும்பியவர்கள், கதறி அழுதனர். தங்கள் குடும்பத்தின் ஒரு தூணை இழந்துவிட்டது அவர்கள் தவித்தனர். அன்று மாலையே, முத்துவுக்கு மிகவும் பிடித்தமான அந்தப் பின்பக்கத் தோட்டத்தின் புல்வெளிக்கு நடுவே குழி தோண்டி அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். முத்து மறைந்த அந்த நொடியிலிருந்து மலரின் வாழ்க்கையும் முடிந்து போனது போலிருந்தது. மலர் உண்பதை நிறுத்தினார் . தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. நித்யாவும் சாராவும் அவளைக் கட்டியணைத்து எவ்வளவோ ஆறுதல் சொல்லியும், மலரின் சோகம் தீரவில்லை. முத்து புதைக்கப்பட்ட இடத்தையே பார்த்துக் கொண்டு, அமர்ந்த இடத்தை விட்டு நகர மறுத்துவிட்டார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. சில நாட்கள் கடந்தன. நித்யாவும் சாராவும் தங்கள் நெஞ்சில் இருந்த பாரத்தோடு, மீண்டும் மெதுவாகத் தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றனர். ஒரு நாள் காலை, நித்யா மலரிடம் பேசுவதற்காக அவளைத் தேடினாள். வழக்கமாகப் படுக்கும் அறையில் மலரை காணவில்லை. வீடு முழுவதும் தேடியும் மலர் இல்லை. பதற்றமடைந்த நித்யா, தோட்டத்திற்கு ஓடினாள். அங்கே, முத்து புதைக்கப்பட்டிருந்த அந்த மண்குவியலின் மேல் மலர் அமைதியாகப் படுத்துக் கிடந்தாள். “மலர்… எழுந்து வாங்க … ஏன் இங்க படுத்துருக்கீங்க?” என்று நித்யா அவளைத் தொட்டு அசைத்தாள். ஆனால் மலரிடம் எந்த அசைவும் இல்லை. அவரது உடலும் குளிர்ந்திருந்தது. முத்து இல்லாத இந்த உலகத்தில் வாழ விரும்பாமல், அவரது நினைவிடத்திலேயே மலரும் தன் உயிரை விட்டிருந்தார். சாராவை நித்யா சத்தமிட்டு அழைத்தாள். ஓடிவந்த சாரா, மலரின் நிலையைப் பார்த்து நித்யாவின் தோளில் சாய்ந்து கதறி அழுதாள். அவர்களின் துயரத்திற்கு எல்லையே இல்லை. “முத்துவைத் தனியா விட மனசில்லா நீங்களும் போய்ட்டிங்களா மலர்?” என்று அழுதபடியே, முத்து புதைக்கப்பட்ட அதே இடத்திலேயே மலருக்கும் குழி தோண்டி, இருவரையும் ஒன்றாகத் அடக்கம் செய்தனர். அவர்கள் இருவரையும் அடக்கம் செய்துவிட்டு, அந்த நினைவிடத்தின் முன்னால் நித்யாவும் சாராவும் கைகளைக் கூப்பி நின்றனர். அவர்களின் கண்கள் குளமாகியிருந்தன. நித்யா விம்மி விம்மி அழுதபடியே சொன்னாள்: “நம்ம வீட்டை இவ்வளவு நாளா ஒரு குறை இல்லாம பாத்துக்கிட்டாங்க. நமக்காக எவ்வளவு விசுவாசமா இருந்தாங்க, நமக்கு இவ்வளவு உண்மையான அன்பைக் கொடுத்த இந்த முத்து, மலர் ரெண்டு பேரும் மனிதர்கள் இல்லை, வாயில்லா ஜீவன்களான நாய்ங்கன்னு உலகத்துல யாராவது சொன்னா கூட என்னால நம்ப முடியாது சாரா. அவங்க நம்ம குடும்பத்துல வாழ்ந்த மனுஷங்க தான். அவங்க ரெண்டு பேரும் இல்லாத இந்த வீடு இனிமே வெறிச்சோடித்தான் இருக்கப்போகுது…” சாரா அவளைத் தேற்றி, “அவங்க நம்ம மனசுல எப்பவும் வாழ்வாங்க நித்யா…” என்று கூறினாள். தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை அங்கே புதைத்துவிட்ட உணர்வோடு, அந்த விசுவாசமான ஜீவன்களின் நினைவுகளைத் தங்களின் இதயங்களில் சுமந்து கொண்டு, நித்யாவும் சாராவும் கனத்த இதயத்துடன் மீண்டும் தங்களின் வேலைக்காக வீட்டை விட்டுப் புறப்பட்டனர். தோட்டத்தில் இருந்த அந்த இரு மரங்களின் இலைகளும், முத்து மற்றும் மலரின் ஆன்மாக்களைப் போல காற்றில் லேசாக அசைந்தாடி விடைபெற்றன.



