Malaysiaசிறுகதை

பாதியில் முடிந்த பயணம்

சர்வேஸ்வரனின் சிறுகதைப் படைப்பு

“தடக்… தடக்… தடக்…” இரும்புப் பாதையைக் கிழித்துக்கொண்டு சீறிப்பாயும் கே.டி.எம் (KTM) இரயிலின் இரும்புச் சக்கரங்கள் எழுப்பும் அந்தச் சத்தம், கவினுக்குச் சாதாரண ஒலியாகக் கேட்கவில்லை. ஒவ்வொரு முறையும் சக்கரங்கள் தண்டவாளத்தில் மோதும்போதும், யாரோ ஒருவன் சுத்தியைக் கொண்டு அவனது மண்டையோட்டை ஓங்கி அடிப்பது போல் இருந்தது. மூளைக்குள் நரம்புகள் வெடித்துச் சிதறும் அளவிற்குக் கடுமையான வலி. “கவின்…” ஒரு மெல்லிய, தேன் கலந்த குரல் அவனது செவியைத் தீண்டியது. அதே நொடியில், அவனது தோளில் சாய்ந்திருந்த அவனது காதலியின் மெல்லிய விரல்கள், அவனது தலைமுடியை மெதுவாக வருடிக் கொண்டிருந்தன . அவ்வளவுதான். ஒரு மாயைப் போல அந்த நரக வேதனை அப்படியே அடங்கியது. பின்னந்தலையில் சுத்தியைக் கொண்டு  அடிக்கும் அந்த இரைச்சல், இப்போது அவளது வருடலில் வெறும் பின்னணி இசையாக மாறியது. “ஏன் இவ்ளோ வேர்க்குது? முகம் ஒருமாதிரி இருக்கு… என்ன யோசிச்சுட்டு இருக்க?” நிலாவின் குரல் ஒரு மெல்லிய சங்கீதம்போல ஒலித்தது. அவளது நீண்ட விரல்கள் கவினின் கைகளை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டன. அவள் கண்களை ஆழமாகப் பார்த்தபடி தயக்கத்துடன் கவின் “இல்ல செல்லமே….இந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையும் முடிஞ்சிருச்சு… அடுத்து என்ன பண்ணப் போறோம், எப்படி உன் குடும்பத்திலிருந்து சம்மதம் வாங்குரது என்ற ஒரு சின்ன பயம். ஆனால் இப்படி என் மனசுல ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும், நீ என் பக்கத்துல இருக்கும் பொழுது எனக்கு எந்த வலியும் இல்லை; எந்த பயமும் இல்லை”. என்றான் கவின். அவனது கைகளை இறுக்கமாக பிடித்தபடியே “எல்லாம் நல்லபடியா நடக்கும் கவின்…நமது வாழ்க்கை இப்பொழுது தான் தொடங்குகிறது.என்ன பிரச்சனை வந்தாலும்  இருவரும் ஒன்றாகச் சேர்ந்து எதிர் நோக்குவோம்,” என்று சிரித்தபடியே அவனது நெற்றியில் வழிந்த வியர்வையைத் தனது  கைக்குட்டையைக் கொண்டு அவனது ஐயத்தையும் சேர்த்துத் துடைத்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடை, அந்த இரயிலின் மங்கலான வெளிச்சத்திலும் அவளை ஒரு தேவதைப்  போல காட்டியது. இரயில் ரவாங், சுங்கை பூலோ  என்ற பல நிலையங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நிலையத்திலும் பயணிகள் கூட்டமாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆனால் கவினின் உலகமோ நிலாவை மட்டுமே சுற்றி சுழன்றுக் கொண்டிருந்தது. அவளது பார்வை, அவளது சிரிப்பு, அவளது மூச்சுக்காற்று என அனைத்தும் சோர்ந்து போன அவனது மனதை உற்சாகப்படுத்தியது. அவனது சிந்தனை ஓரத்தில்  இந்த இரயில் பயணம் தனது இறுதி மூச்சு வரை நீடிக்காதா என்ற ஓர் ஏக்கம். இரயில் மெதுவாக ‘புத்ரா’ நிலையத்தை வந்தடைந்தது. கதவுகள் திறக்கப்பட்டு, ஒருசில பயணிகள் உள்ளே நுழைந்தனர். அப்போது திடீரென கவினின் கைப்பேசி அலறியது. கவின் உடனடியாகக் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். திரையில் மாத்திரை சாப்பிடவும் என்ற வாசகம் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது. பல்கலைக்கழக இறுதி நாள் என்பதால், கவினுக்கு வேலைப்பளு அதிகமாகவே இருந்தது. அதனால் அவன் தான் தினமும் காலையில் உண்ணும் மருந்தை இன்று உண்ண மறந்து விட்டான் என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. “யார் போன் பண்றா கவின்? அலாரமா?” என்று நிலா அவன் தோளில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.”ஒன்னுமில்ல நிலா… ஒரு சின்ன ரிமைண்டர். அப்பறம் பாத்துக்கலாம்,” என்று அலாரத்தை முடக்கிவிட்டுக் கைபேசியைத் தோள்பையில் வைத்தான்.”உடம்புக்கு ஏதும் முடியலையா? மாத்திரை போடணுமா?” என்று அக்கறையாகக் கேட்டாள் நிலா.“இல்லை செல்லமே அப்புறம் மருந்து போட்டுக்கலாம்,” என்று கவின் கூறிய மறுகணமே; நிலா  அவனை மாத்திரையை உண்ண கூறி கட்டாயப்படுத்தி  உண்ண வைத்தாள்.அவன் மாத்திரையை உண்ட பிறகு, நிலா புன்னகைத்தபடியே அவன் கைகளை மீண்டும் கோர்த்துக்கொண்டு அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். தனது காதலி தன் பக்கம் இருந்தாலும், ஏதோ ஒரு பயம் அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பயத்துடன் கவின் ” நிலா… செல்லமே… என் அழகியே… என்னைத் தனியாக விட்டு போய்விடமாட்டல நீ…. நீ இல்லனா என் வாழ்க்கையில சூரியனே இல்ல மா. இருள் சூழ்ந்து இருந்த என் வாழ்க்கையில, சூரியனா வந்து வெளிச்சம் கொடுத்தது நீ தான். என்னை விட்டுப் போயிராத மா…..,” என்று கண்கள் கலங்க  நிலாவிடம் பேசினான். நிலாவோ, அவனது தலையைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டு ” நான் எங்கேயும் போக மாட்டேன்….நான் உன்னுடையவள் கடைசி மூச்சு வரைக்கும் உன் கூடவே தான் இருப்பேன், ” என்று அவனது காதின் ஓரத்தில் முணுமுணுத்தாள் நிலா. அவளது மெல்லிய கைகள்  அவனது தலை முடியை மெதுவாக வருட ஆரம்பித்தன. கவினுக்கு அந்த கணம்  அவனுள் இருந்த எல்லா ஐயமும் சுக்கு நூறாக உடைக்கப்பட்டன. சிறுபிள்ளைப் போல் அவளை அவன் கட்டி அணைத்துக் கொண்டான். இரயில் இப்போது ‘கோலாலம்பூர்’ நிலையத்தை அடைந்தது. இரயிலின் குளிர்சாதன காற்று முன்பை விடக் குளிராக வீசியது. மாத்திரையை உண்டதால் ஏற்படும் ஒருவிதக் கடுமையான சோர்வும், மயக்கமும் அவனது இமைகளைக்  கணக்கச் செய்தன. கோலாலம்பூர் நிலையத்தில் கதவுகள் திறந்தன. சில நொடிகள் கழித்து, “பீப்… பீப்…” என்ற சத்தத்துடன் கதவுகள் மூடுவதை அவன் அரைகுறையாக உணர்ந்தான். “செல்லமே…..கே.எல் சென்டரல் கிட்ட வந்தோனே என்னையே எழுப்பி விடுமா. அதுவரைக்கும் கொஞ்சம் தூங்கிக்கிறேன்,” என்று நிலாவிடம் கூறினான் கவின். கதவுகள் முழுமையாக மூடிய அந்த நொடியில், நிலாவின் கையைத் தனது இரண்டு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்தபடியே, அவளது தோளில் சாய்ந்து அப்படியே கண் அயர்ந்துவிட்டான். அவனது மூளை ஆழ்ந்த இருளுக்குள் மூழ்கியது. பெர்க்காத்தியான்… திரேன் இனி செடாங் மெங்கிஹம்பிரி கே.எல் சென்ட்ரல்… இரயிலின் ஒலிபெருக்கி  ஒலித்த அறிவிப்புச் சத்தம் கேட்டு, ஒருவிதத் திடுக்கலோடு கண் விழித்தான் கவின். நெற்றியில் மீண்டும் வியர்வை வழிந்தது. இதயத் துடிப்பு இயல்பை விட வேகமாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். அவனது வலதுபுறம் காலியாக இருந்தது. நிலாவைக் காணவில்லை! மீண்டும் அந்த இரயில் சக்கரங்களின் சத்தம் மண்டையோட்டைப் பிளக்கும் ஒலியாக  மாறத் தொடங்கின. “தடக்… தடக்… தடக்…” வலியில் தலையைப் பிடித்துக்கொண்டான். “நிலா?” என்று மெதுவாக அழைத்தான். பதிலில்லை. கோலாலம்பூர் நிலையத்தில் கதவு மூடிய பின் தான் அவன் தூங்கினான். இப்போது இரயில் கே.எல் சென்ட்ரல் நிலையத்தை இன்னும் நெருங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இரண்டு நிலையங்களுக்கும் இடைப்பட்ட அந்தச் சில நிமிடப் பயணத்தில் கதவுகள் எங்குமே திறக்கப்படவே இல்லை. அப்படி இருக்க, ஓடும் இரயிலில் அவளால் எப்படி மாயமாக முடியும்? எங்கு சென்றாள்? பதற்றத்துடன் எழுந்த கவின், அந்த இரயில் பெட்டி முழுவதும் வெறித்தனமாகத் தேடினான். மண்டையைத் துளைக்கும் அந்த இரைச்சலையும் மீறி, “நிலா! நிலா!” என்று கதறினான். மற்ற பயணிகள் அவனை ஒருவித அதிர்ச்சியோடும் குழப்பத்தோடும் பார்த்தனர். அடுத்த பெட்டி என எங்கும் அவள் இல்லை. அவளுக்கு என்ன ஆனது? ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்துவிட்டாளா? அதீத பயம் அவனது நரம்புகளைச் சுண்டி இழுத்தது. அவனுக்கு மூச்சு முட்டியது. இரயில் மெதுவாக கே.எல் சென்ட்ரல் (KL Sentral) நிலையத்திற்குள் நுழையத் தொடங்கியது. பதற்றத்தில் நடுங்கும் கைகளுடன் தனது கைபேசியை எடுத்து, தனது நெருங்கிய நண்பன் கார்த்திக்கை அழைத்தான். “கார்த்திக்… மச்சான்… நிலா… நிலாவைக் காணோம்டா!” குரல் உடைந்து, கண்ணீர் மல்கக் கத்தினான் கவின். “கவின்… பதட்டம்படாதெ. நீ எங்க இருக்க இப்போ?” “நான் கே.எல் சென்ட்ரல் வந்துட்டேன்டா. கோலாலம்பூர் ஸ்டேஷன்ல கதவு மூடுற வரைக்கும் நிலா என் கூடத்தான் இருந்தாள்… கொஞ்ச நேரம் கண் அசைந்தேன்… இப்ப ரயிலுக்குள்ள எங்கேயுமே அவளைக் காணோம்டா! கதவுகூடத் திறக்கலடா, அவ எப்படிப் போயிருப்பா? எனக்குப் பயமா இருக்குடா… என் மண்டையை யாரோ சுத்தியலால அடிக்கிற மாதிரி வலிக்குதுடா…” கவின் தேம்பித் தேம்பி அழுதான். மறுமுனையில் சில நொடிகள் கனத்த மௌனம் நிலவியது. பின் கார்த்திக்கின் குரல் ஒருவிதப் பெருமூச்சுடன், மிகுந்த வேதனையோடு ஒலித்தது. “கவின்… டெ மச்சான்,” “சொல்லுடா… அவளை எப்படியாவது கண்டுபிடிச்சு குடுடா…” .”கவின்… நீ இன்னைக்கும் உன் மாத்திரையைப் போட மறந்துட்டியா?”இந்தக் கேள்வியைக் கேட்டதும் கவினின் கைகள் அப்படியே உறைந்தன. மூச்சுக்காற்று நின்றது. இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.”என்ன… என்னடா சொல்ற?””டேய்… உண்மையைப் புரிஞ்சுக்கடா… நிலான்னு ஒருத்தி உன் வாழ்க்கையிலயே இல்லை. பல்கலைக்கழகத்தில் நீ தனியா இருக்கும்போது, உன்னோட தனிமையைப் போக்க உன் மனசு உருவாக்குன ஒரு கற்பனைதான் நிலா. அவ உன்னோட மாயை. அது உன் ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) மூளை உருவாக்குன பிரமை. கவின்……உனக்கு ஒன்னுமில்ல. நான் இப்பவே கே.எல் சென்ட்ரலுக்கு வர்றேன். அதுவரைக்கும் எங்கேயும் போகாத.”கைபேசி நழுவி கீழே விழுந்தது. “தடக்” என்ற சத்தத்துடன் இரயில் கே.எல் சென்ட்ரல் நிலையத்தில் நின்றது. கதவுகள் திறந்தன. பயணிகள் அனைவரும் அவனைக் கடந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்.கவின் மட்டும் அந்தக் காலி இருக்கையின் அருகே நின்றபடி, சன்னல் கண்ணாடியைப் பார்த்தான். அதில் அவனது தனிமையான பிம்பம் மட்டுமே தெரிந்தது. மண்டையைப் பிளக்கும் அந்தத் தண்டவாளத்தின் சத்தம் இப்போது அவனுக்குள் முழுமையாக மறைந்துவிட்டது . இத்தனை மணி நேரம் அவன் உணர்ந்த காதல், அவளது பாசம், அவளது சிரிப்பு எல்லாம் அவனது மூளை அவனுக்குச் செய்த சதி என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியபடியே தனது தோள்பையை எடுத்துக் கொண்டு இரயிலிலிருந்து வெளியேறுகிறான் கவின். ஒரு முறையாவது நிலா என்னை அந்தத் தேன் போன்ற குரலைக் கொண்டு அழைக்க மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் இரயில் நிலையத்தில் நின்றபடியே அந்தக் காலி இருக்கையை பார்த்துக் கொண்டிருந்தான். ‘பீப்…பீப்….பீப்’ என்ற ஒலியுடன் இரயில் கதவும் மூடியது. மூடிய கதவைப் பார்த்தபடியே பின் திரும்பி தனது நண்பனைச் சந்திக்க புறப்படுகிறான் கவின். கவினின்  மனநிலையைப் போல வானில் உள்ள மேகங்களும் கறுத்து அடை மழை பெய்யத் தொடங்கியது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button